வெற்றியின் இரகசியங்கள் (1): இன்பம் என்பது என்ன? - அ.ந.கந்தசாமி -
- இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான அறிஞர் என்னும் அடைமொழியுடன் 'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மானுட வாழ்க்கைக்கு வெற்றியைத்தரக்கூடிய நல்லதோர் உளவியல் நூலொன்றையும் எழுதியுள்ளார். தமிழகத்தில் பாரி நிலையத்தால் , எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் உதவியுடன் வெளியிடப்பட்ட நூல். இத்துறையில் வெளியான மிகச்சிறந்த நூல்களிலொன்று. அறுபதுகளிலேயே அ.ந.க இவ்வகையான நூலொன்றை எழுதியிருப்பது வியப்பினைத் தருகின்றது. கூடவே அவரது பரந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றது. அவரது மறைவின்போது அவரது இறுதி மரியாதை நிகழ்வில் , அவரது தலைமாட்டில் இந்நூல் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. 'வெற்றியின் இரகசியங்கள்' பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. - பதிவுகள்.காம் -
நூல்: வெற்றியின் இரகசியங்கள். - அ. ந. கந்தசாமி - | விற்பனை உரிமை: பாரி நி லை ய ம் 59 பிராட்வே, சென்னை-1. (P A A R N L A Y A M 59, Broadway : Madras-l.) | முதற்பதிப்பு : டிசம்பர்-1966 | விலை ரூ. 5-00 | அச்சிட்டோர்: ஈஸ்வரி பிரிண்டர்ஸ், சென்னை-14.
முன்னுரை
அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை அறிஞர் பலர் அவ்வப்போது எழுதிப் போயிருக்கிறார்கள். வள்ளுவரின் திருக்குறள், ஒளவையார் கவிகள், காலடியார் போன்றவை இத்தகையன. இவை எக்காலத்துக்கும் பொதுவான வாழ்க்கை வழிகாட்டிகளாக விளங்குகின்றன. ஆனால் தற்காலத்துக்கென்றே இன்றைய உலகின் சூழல்களை மனதுட் கொண்டு எழுதப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல்கள் தமிழில் குறைவு. ஆங்கிலத்திலோ இத்துறையில் ஏராளமான நூல்கள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டேல் கார்னேஜி, நெப்போலியன் ஹில், ஹேர்பேர்ட் கசன், கோர்மன் வின்சென்ட் பீல் போன்றர் இத்துறையில் மிகப் புகழ்பெற்று விளங்குகிறார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக்கணக்கில் உலகெங்கும் விற்கப்படுகின்றன. இங் நூல்கள் பலரது வாழ்க்கையின் போக்கையே முற்றாக மாற்றி அமைத்திருக்கின்றன.