கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது,இருள் கவியத் தொடங்கும் மங்கலான மாலைகளில், இயற்கை, தனது Impressionism ஓவியத்தை தீட்டி முடிக்கின்றது என கூறினீர்கள் (உணர்வு நிலை நிற்கும் ஓவியங்களை) - மங்கலான ஒளியில் மலைகளினதும் மரங்களினதும் விளிம்புகள் தெளிவுற தென்படாது, மறைய தொடங்குகையில், மனிதனின் கவிதை மனம் விழிக்க முற்படுகின்றது – இது போலவேதான் Impressionism ஓவியங்களும் உருவெடுக்க தொடங்குகின்றன என்பது போல் கருத்து தெரிவித்திருந்தீர்கள். கூடவே கலைஞன் என்பவன் தனது ஓவியத்தில், தனது கவிதையில் இயற்கையை அல்லது மனிதனை அல்லது வாழ்வை பரிமளித்து காட்ட உரிமை கொண்டவன்தான் என்றும் கூறியிருந்தீர்கள். அதாவது இத்தகைய பரிமளிப்புகள் ஆக்கப்பூர்வமானதாய் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் இவ் உரிமை அங்கீகரிக்கத்தக்கதே என்றும் கூறியிருந்தீர்கள். இத்தகைய ஒரு பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட மொனே, பிசாரோ, டேகாஸ் போன்ற ஓவியர்களை எப்படி மதிப்பிட்டு கொள்கின்றீர்கள்?
பதில்: மொனே நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞன். 86 வயது வரை தன் ஓவிய பரீட்சார்த்தங்களை முன்னெடுத்தவன். அவனது அடிவைப்புகளில் இருந்தே உணர்வுநிலை ஓவியங்கள் (Impressionism) முதன் முதலாய் உறுதியாக தோற்றம் கொள்ள தொடங்கின என கூறலாம். இவருக்கு பத்து வருட முந்திய கலைஞனான, பிசாரோ (கிட்டத்தட்ட) இவரது சமகாலத்து ஓவியனாக இருந்த போதிலும், அவரும் உணர்வுநிலை ஓவியங்களை படைத்தளித்திருந்த போதிலும், உணர்வு நிலை ஓவியம் என்பது மொனேயுடனேயே உறுதியாய் தன் காலடியை வரலாற்றில் பொறித்தது எனலாம்.
கேள்வி: இவற்றில் மொனேயின் எந்தெந்த ஓவியங்களை அதிமுக்கியமான ஓவியங்களாக கருதுவீர்கள்?
பதில்: ரயில்கள் தொடர்பாய் அவர் வரைந்த ஓவியங்களையும் தேவாலயங்கள் தொடர்பில் அவர் வரைந்த ஓவியங்களையும் நாம் அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும்.
கேள்வி: இவற்றில் முதலில் மொனேயின் ரயில் சம்பந்தமான ஓவியங்களை பற்றி கூறுவீர்களா?
பதில்: மொனே தனது ரயில் ஓவியங்களை 1870களில் வரைந்திருந்தார். 1871 முதல் 1877 வரை “ரயில்” அவரது தலையாய ஓவிய முன்னெடுப்புகளின் கருப்பொருளாக இருந்தது. அத்தகைய ஒரு ஓவிய பயணத்தின் இறுதி கணங்களில், ரயிலின் காட்சிப்படுத்தலை, அவர் பூரணமாக்கினார் எனலாம்.
கேள்வி: அதன் முக்கியத்துவம் யாது?
பதில்: அதன் முக்கியத்துவங்களை இருவகையில் நாம் பொருள் கொள்ளலாம். ஒன்று நீராவி இயந்திரங்கள் அவதரித்து சமூகத்தை ஆதிக்கம் செய்ய முற்பட்ட ஒரு காலப்பகுதி. அதாவது தொழிநுட்பம் என்பது சமூக மாற்றத்தின் அடித்தளமாய் அமைந்து, சமூக மாற்றத்திற்கான வித்திடலை நிறைவேற்ற தொடங்கியிருந்த ஒரு காலக்கட்டம் அது. இதனை நவீனத்துவத்தின் வருகை எனவும் சில விமர்சகர்கள் ஆராதிக்கவே செய்கின்றனர். எது எப்படியோ. குறித்த ரயில், குறித்த நீராவி இயந்திரம், குறித்த பிரமாண்டமான இயந்திர சிரு~;டி - இவை, சகலவற்றையும் நசித்து நைத்துக் கொண்டு, மனித சாரிகளை அள்ளி ஏற்றிக் கொண்டு நகர்ந்தது. அதன் பிரமாண்டமான எஃகு சில்லுகளிடையே நாட்டின் நிலபிரபுத்துவமும் அவற்றின் பண்பாடும் நைத்து நசுக்கப்படுவதாய் இருக்கலாம். ஆனால் இது நிலைநாட்டிய, முக்கியத்துவம், நாம் கருத்தில் கொள்ளத்தக்கதே.
கேள்வி: அதாவது, “ஞாலம் நடுங்க வர கப்பல் செய்வோம்” என்று பாரதி பாடிய அதே பார்வையா?
பதில்: இருக்கலாம். ஆனால் நவீனத்துவத்தின் வருகை இப்படியாகத்தான் இருந்தது. இது ஒரு அம்சம். ஆனால் இதனை அடுத்து வந்த அமைப்பு, விடயங்களை எங்கே எடுத்து சென்றது, எங்கே இருத்தியது என்பது வேறொரு கேள்வி.
கேள்வி: இந்த ஓவியத்தின் இரண்டாவது முக்கியத்துவம் யாது?
பதில்: உணர்வு நிலை தான். (Impressionism) இவ் ஓவியத்திலேயே (Impressionism) தன் வருகையை அல்லது தன் பிறப்பை மிக அழுத்தமாக பறைசாற்றி நின்றது. நீராவி இயந்திரம் வெளிப்படுத்தும் புகைமூட்டமும், வண்ண கலவைகளும், புகை மூட்டத்தினுடைய கலங்கலாய், கருக்கலில் தோன்றும் இரும்பு ரயிலும் மனித மனதில் எத்தனையோ உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய தெளிவற்ற காட்சிப்படலங்களாகின்றன. புகைமண்டலம். பனிப்போர்வை. இதன் நடுவே மங்கலில் இருந்து கிளம்பும் இவ் இரும்பு இயந்திர பூதம். இது எது? இது எங்கிருந்து வந்தது? இது செல்லப்போகும் திசை என்ன - இத்தனையையும் ஒரு மனித மனதில் கிளம்புமாறு ஓவியத்தின் கருக்கல் - அதாவது மங்கலான தன்மை – அதாவது தெளிவற்ற எல்லைக்கோடுகள் - இது மொனேயின் உணர்வுநிலை ஓவியத்தின் வெற்றியாகின்றது. அதாவது ஒருபுறம் தொழில்நுட்பம் - இயந்திரம் - நவீனத்துவம் - இந்த அம்சங்கள். மறுபுறத்தில் ஓவியம் - தனது தெளிவான வரையறையற்ற மூடுபனி சாரந்த – உணர்வுநிலையை கிளறுவதற்கூடாக ஓவியம் என்ற ரீதியிலும் வெற்றி பெறுகின்றது.
கேள்வி: நீங்கள் குறிப்பிடக்கூடிய அடுத்த ஓவியத்தை பற்றி கூற முடியுமா?
பதில்: இரண்டாவதாக, மொனேயின் தேவாலய ஓவியங்களை குறிப்பிடலாம். அவை, மிக மிக பிரசித்தி பெற்றவை. (Cathedral). கிட்டத்தட்ட 30 தேவாலய ஓவயங்களை அவர் தனது காலப்பகுதியில் வரைந்திருந்தார். அதாவது தனது ரயில் ஓவியங்களை அவர் வரைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் சென்ற பின்னர் தனது 54வது வயதில் தனது தேவாலய ஓவியங்களை அவர் வரைய தொடங்குகின்றார்.
கேள்வி: அப்படி என்றால் கருப்பொருளிலும், அவற்றின் முக்கியத்துவம் வேறுபட வாய்ப்புண்டு. தேவாலய ஓவியங்களின் முக்கியத்துவத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: அனேக ஓவிய விமர்சகர்கள் மொனேயின் தேவாலய ஓவியங்களை தொட்டும் தொடாமலும் தாண்டிச் சென்று விடுவது வழமை. அல்லது உண்மையை கூறினால் ஒதுங்கி செல்வதில் நிம்மதி அடைந்து கொள்வர். இவர்களில் பலர், தேவாலய ஓவியங்கள் எனப்படுபவை ஒளி வேறுபாட்டுக்காக முக்கியத்துவப்படுகின்றன என கூறுவதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுவது சம்பிரதாயமாகி போன விடயமாகி விடுகின்றது. ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக வலிந்து சொல்லப்படும் கூற்றுகளே இவை. ஆனால் இவ்ஓவியங்களை கூர்ந்து கவனிக்கும் போது இவற்றில் காட்சிப்படுத்தப்படும் பிரமாண்டான மாதா கோயில் கட்டிடங்கள் அனைத்தும், அப்படியே செல்லரித்து இற்று விழுவதாகவே காட்சிப்படுத்தப்படுகின்றது. எந்த ஒரு தேவாலயமும் உறுதியாகவோ அன்றி கம்பீரமாகவே காட்சிப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக இற்று விழும் ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவே இவ்ஓவியங்கள் தேவாலயங்களை படம் பிடிக்கின்றன.
கேள்வி: எனது நண்பரொருவர், தான் சார்ந்திருந்த குருபீடத்தை விட்டு வெளியேறியிருந்தார். அவரிடம் நான் ஒரு முறை வினவ நேர்ந்தது. குருவானவராய் இருந்த நீங்கள் ஏன் அவ்வாழ்க்கையை விட்டு வெயியேறி சாதாரண வாழ்வை தேர்ந்தீர்கள் என. அவர் கூறினார்: : it’s a shinking ship. அதாவது அது ஒரு மூழ்கும் கப்பல் என்றார். அதே கருப்பொருளை இவ் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன என்பீர்களா?
பதில்: தெரியாது. ஆனால் அவற்றை பார்க்கும் போது உங்களுக்கு அப்படி ஒரு கருப்பொருள் நினைவுக்கு வருமானால் அதுவே மொனேயின் ஓவிய நோக்கமாகவும் இருத்தல் கூடும். மாதா கோயில்களை, பைபிள்கள் மாத்திரம் எதிர்க்கவில்லை. டால்ஸ்டாயும் எதிர்த்தவர்தான். ஆனால் எந்த எல்லைப்பாடுகளுடன் எதிர்த்தனர் என்பதிலேயே ஆளுக்காள் வேறுபடுகின்றனர். அது ஒரு வேறுபட்ட, தனியான, பிறிம்பான விடயம்.
கேள்வி: மொனேயிற்கும் வான்கோவுக்கும் உள்ள உறவுமுறை குறித்து யாது கூறுவீர்கள்?
பதில்: வான்கோவின் ஓவியங்களை Post Impressionism– அதாவது “உணர்வுநிலை ஓவியங்களுக்கு பின்னதான ஓவியங்கள்” என வரையறுப்பர். அதாவது மொனே வரலாற்றில் எடுத்து வைத்த காலடி, வான்கோ எடுத்து வைத்த காலடிக்கு ஓர் உதவியாகவே இருந்திருக்கும்.
கேள்வி: அதாவது நீங்கள் அதிகமாய் விரும்புவதாக குறிப்பிட்ட Starry Nights என்ற வான்கோவின் ஓவியம், உணர்வு நிலை கடந்த ஓவியம் என கருதுகின்றீர்களா (Post Impressionism)?
பதில்: நிச்சயமாக. அங்கே வானத்தை பாருங்கள். வானம் வெறும் உணர்வு நிலை ஓவியத்தின் பாற்பட்டது அல்ல. அதனை விட அது நீண்ட தூரம் நகர்ந்து விடுகின்றது. வான்கோ கூறவரும் உணர்வு நிலைக்கு – கருப்பொருளுக்கு – உணர்வுநிலை ஓவியம் போதாததாய் இருந்திருக்கலாம்.
கேள்வி: அதாவது, பாரதி கூறுமாப் போல் “மோனத்திருக்குதடி வையகம் - மூழ்கி துயிலினிலே” எனுமாப் போல் Starry Nights கூற முற்படுகின்றதோ?
பதில்: இருக்கலாம். ஆனால் விடயம் மோனத்திருக்கும் இவ்இரவுகளை தீட்ட வான்கோவிற்கு உணர்வு நிலை ஓவியங்கள் Impressionism போதாததாய் இருந்திருக்கலாம். இருந்தும் அவனது ஓவியங்களில் சில Impressionism சார்ந்தது. சில உணர்வு நிலை கடந்த வகைப்பட்டது (Post Impressionism) என பிரித்து கொள்வேன் நான்.
கேள்வி: மொனேயின் அணுகுமுறைகளை பற்றி கூறுவீர்களா?
பதில்: அவர் கூறியுள்ளார்: “வர்ணங்கள் அல்லது நிறங்கள் என்பவை என்னை நாள் முழுதுமாய் ஆட்டிப்படைக்கின்றன. எனது ஆனந்தம், எனது வேதனை, எனது தொல்லை, நான் அனுபவிக்கும் வதைகள் – அனைத்தையுமே வர்ணங்கள் தான்” என அவர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார். மேலும் கூறுகிறார்: “காற்றை நான் ஓவியமாக தீட்ட முற்படுகின்றேன்”” (I want to paint the air) என. இது எதை குறிக்கின்றது. ஓர் பிரமாண்டமான ஓவியனை – அவனை தூங்க விடாமல் பண்ணும் அவனது ஓவிய சிந்தனையை – அவனை தொல்லைப்படுத்தும் அவனது ஓவிய ஆர்வத்தை – அவனை நுணுகி தேட வைக்கும் ஓவிய தேடலை - வாழ்க்கை தேடலை, வர்ணத் தேடலை, இயற்கைத் தேடலை…..
கேள்வி: நல்லது. அடுத்த ஓவியனாக யாரை குறிப்பிட்டு இப்பேட்டியை நிறைவுக்கு கொண்டு வருவீர்கள்?
பதில்: ………….
ஜோதிகுமார் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.