3
ஏய்டன் நீலமேகத்தின் சாதீய மனத்திண்மை குறித்து சிந்திப்பதும், அச்சிந்தனைக்கூடு, மனித ‘நம்பிக்கை’ பொறுத்த, பின்வரும் தரிசனங்களுக்கு வந்து சேர்வதாகவும் நாவல் காட்டுவதாய் உள்ளது.
“இவனை ஒரு தாழ்ந்த சாதியினனைத் தொட வைத்தேன் என்றால் நான் வெற்றிபெற்றவனாவேன் அல்லது குறைந்த பட்சம் மனமுடைந்து அழ வைத்தாலாவது வெற்றி பெற்றவனென உணர முடியும்”
“ஒரு போதும் அதற்கான வாய்ப்பை இவன் எனக்கு அளிக்கப் போவதில்லை..”
“ஆம். இவன் மௌனமாக இறப்பான். தன்னுடைய ‘நம்பிக்கைகளுக்காக’ உறுதியாக வதைப்பட்டு அமைதியாக உயிர் துறக்கிற ஓர் புனிதரை போல! புனிதரா? என்ன வேறுபாடு? எல்லாம் நம்பிக்கைதான்…இவன் மிக முட்டாள் தனமான ஒன்றுக்காக, மனித ஆன்மாவுக்கே எதிரான ஒன்றுக்காக இறக்கின்றான். ஆனால் இவன் இப்போது இறக்கும் மனநிலைக்கும் அந்த புனிதரின் மனநிலைக்கும் வேறுபாடு இல்லை. என்ன அபத்தம்” (பக்கம்-74) (அழுத்தம் எம்முடையது)
அதாவது நீலமேகத்தின் சாதீய பார்வையும் ஏய்டனின் சமூக நீதிக்கான பார்வையும், நம்பிக்கை எனும் ஒரே அடிப்படையில் இருந்து எழுவனவாக தர்க்கிக்கப்படுகின்றது.
‘நம்பிக்கை’ என்ற அடிப்படையைக் கொண்டு நோக்கும் போது, இரண்டுமே ஒன்றுதான் என்பதும், இதன் தொடர்ச்சியாக, இக்காரணத்தாலேயே வாழ்வே அபத்தம் என்ற முடிவுக்கு வருதலும் எவ்வளவு தூரம் அபத்தமானது என்பதும் இலகுவில் கண்டுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.
அதாவது ‘நம்பிக்கை’ என்ற ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு வௌ;வேறான இரண்டு வேறுபட்ட நம்பிக்கைகளை, இவை இரண்டுமே ஏதோ ஒரு வகையில் நம்பிக்கைதாம் எனும் அடிப்படையில் பார்த்து, இவை ‘ஒன்றுதான்’ என முடிப்பதும் அதன் வழியாக, இறுதியில், இக்காரணத்தினாலேயே , இவ்வடிப்படையில், வாழ்வே அபத்தம் எனப் பாடும் பாட்டு இந்திய வரலாற்றில் ‘யாவையும் மாயை’ எனப் பாடப்பட்ட பாடலுக்கு ஒப்பானதேயாகும்.
அதாவது ‘உணவு’ என்ற அடிப்படையில் பாரக்குமிடத்து கொய்யாபழமும் பலாப்பழமும் ஒன்றாகலாம். அல்லது பழங்கள் என்று பாரக்குமிடத்து கொய்யாபழமும் பலாப்பழமும் ஒன்றாகலாம். ஆனால் இத்தகைய அடிப்படை கொண்டு பார்த்து, இவ்வடிப்படையில் இவ்விரண்டுமே ஒன்றுதான் என்பதனைக் காரணம் காட்டி உலகம் இந்த வகையில், எப்படி அபத்தமாக இருக்கின்றது என மொழிவது எத்தனை அசட்டுத்தனமோ அத்தனை அசட்டுத்தனம் மேற்படி வாதத்திலும் அடங்கியுள்ளது, எனலாம்.
வாழ்க்கையை இப்படி ஓர் அபத்தமாக காட்ட முனைவது அல்லது காட்டுவதின் மறுபுறம், மனிதர்களின் சீரிய வாழ்வுக்கான அவாவை அல்லது தெண்டித்தலை நிராகரிக்கும் ஒரு கருவியாதலேயாகும்.
அனைத்துமே அபத்தம் என்றால் வீர சாவர்கார் பிரிட்டி~hரிடம் கெஞ்சுதலும், பகத்சிங்கின் பிரஞ்ஞைபடி பிரிட்டிஷ்க்கு எதிரான வஞ்சமும் ஒன்றுதான் என்றாகின்றது–அனைத்துமே அபத்தமாகிவிட்ட ஓர் சூழ்நிலையில். ஏனெனில், இவ்வாதத்தின் பிரகாரம், மனித நடத்தைகளுக்கிடையில் வித்தியாசம் காணமுடியாது – பலாப்பழத்தை போல.
அதாவது இவ்அபத்த அளவுகோலின் பிரகாரம் கொள்கை பிடிப்புள்ள மனிதர்கள் மறைந்துவிட வெறும் சராசரிகளும் உயிர் பெற்று கொள்ளக்கூடிய சாத்தியங்களை எட்டி விடுகின்றார்கள்.
இனி, இச்சூழலில் காக்கப்படுவது எது? – சாதீயமே!
இவ் அபத்தவாதத்திற்கூடு இச்சமூகமானது தனது அனைத்து காட்டுமிராண்டி தனங்களையும் கட்டுமானங்களையும், அநீதிகளையும் அக்கிரமங்களையும் தொடர்ந்திருக்க வைப்பதை நிச்சயப்படுத்தி கொள்ளலாம். இதனால்தான், இத்தேவை ஓர் அரசியல் தேவையாகின்றது.
அதாவது அனைத்து அக்கிரமங்களையும் செய்து தீர்த்துவிட்டு ‘அன்பே சிவம்’ என்று ஓதுமாப்போல அனைத்தையும் ஆற்றிவிட்டு வாழ்வே அபத்தம் என்று போதிப்பதாகின்றது.
ஏய்டனுக்கூடாக, ஜெயமோகன் முன்நிறுத்தும் சிந்தனையின் முதற்பாதி இதுவாகின்றது. அடுத்த பாதி வருமாறு இருக்கின்றது:
“தூரகிழக்கு நாடொன்றில் அந்த நாட்டு மக்களை ஒடுக்கி அவர்களை ஒட்டுமொத்த பட்டினிச் சாவுக்கு ஆளாக்கி… கொழுத்த லாபத்தை உருவாக்கி அளிக்கும் பொருட்டு… உயிர் துறக்கும் பிரிட்டிஷ் வீரனுக்கு அவனுடைய மரணம் ஒரு பெரும் தியாகம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கின்றது… பெருமை சேர்ப்பதாக எண்ணித்தான் அவன் துப்பாக்கியுடன் கிளம்பி செல்கின்றான்…தங்கள் மண்ணையும் மானத்தையும் காப்பாற்றும் பொருட்டு வாளுடன் கிளம்பிய பெரு வீரனுக்கும் அவனுக்கும் (இப்பிரிட்டிஷ் வீரனுக்கும்) மனநிலையில் என்ன வேறுபாடு…? (பக்கம் - 74)
அயர்லாந்துக்காக பலியாகும் புரட்சியாளனும் அவனைக் கொல்லும் பிரிட்டனின் படைவீரனும் ஒரே மனநிலையில் ஒருவரோடு ஒருவர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்… துப்பாக்கி பேதம் இல்லாமல் சுட்டு தள்ளுகிறது. மண் பேதமில்லாமல் உள்ளே வாங்கி செரித்து கொள்கின்றது. (பக்கம்74-75)
சுருக்கமாய் கூறினால் மண்தான் இறுதிபார்வையில் ஆட்சி செய்கின்றது போல தெரிகின்றது. ஏனெனில் மண்தானே, ஆக இறுதியில், வாங்கி வாங்கி செரித்து கொள்கின்றது. இறுதியில், மண் தசையை எலும்புகளை, மண்ணாக்கி தீர்த்து தின்று விடுகிறதாம். ஆக ஒரு புறம் மனநிலை! வேறுபாடில்லை. மறுபுறம் மண் –வேறுபாடில்லை!! வேறு வார்த்தையில் கூறினால் வாழத்துடித்து அலைந்து திரிந்து ஈற்றில் கிழடாகி சரிந்து வீழ்ந்து மண்ணால் செரிக்கப்பட்டு போகும் நாய்க்கும், அந்தமான் சிறையில் இருந்து புறப்பட்டு வெளிவந்து ஈற்றில் இறந்து போய் மண்ணால் செரிக்கப்படும் மனிதனுக்கும்; வேறுபாடில்லை என்றாகி விடுகின்றது. இத்தகைய தர்க்கத்தை எங்கே கொண்டுபோய் கிடத்துவது? இவற்றை ஆழமாக தோண்டியெடுத்து சித்தரிக்கும் ஜெயமோகன் இறுதியில் ஏய்டனின் மனவோட்டத்திற்கூடு பின்வரும் தர்க்கத்தை எட்டிப்பிடித்துப் பின்வரும் கேள்வியையும் கேட்டு கொள்கின்றார்:
“…நம்பவே முடியாத மகத்துவங்களும் நம்பவே முடியாத கீழ்மைகளும் பீறிட்டுக் கொண்டிருக்கும் இந்த புரிந்து கொள்ள முடியாத உயிர்த்தொகை மண்ணில்; நீடித்து வாழ என்ன காரணம் இருக்க முடியும்…? (பக்கம் - 75)
பதிலையும் அவரே தருகின்றார்: “கடவுள் –அப்படி ஒருவர் இருந்தாக வேண்டும். இல்லையேல் இவற்றைத் தொகுத்துப் பார்க்கக்கூட ஒரு மையப்புள்ளி இல்லை”. (பக்கம் - 75)
இப்படி, தன் கதையை ஓடவிடும் ஜெயமோகன், மேற்படி சூழலில் எழுப்பக்கூடிய கேள்வி ஒன்றுதான்:
அனைத்தையுமே இழவுத்தான் என்று நிராகரித்துவிட்ட ஓர் பின்னணியில் (“இழவு” என்பது இருபாலாரிடையேயும் ஒன்றே எனக் கொண்டால்)–அவரது தர்க்கத்தின் பிரகாரம்–நரியும் இழவு மனிதனும் இழவு எனில்) பிறகு என்ன இழவிற்கு எமக்கு இழவு, ஒரு ‘மையப்புள்ளி’ தேவைப்படுகிறதாம். இணைத்துப் பார்ப்பதற்கு? அதுதான் மண் வாங்கி வாங்கி செரித்துக் கொண்டு விடுமே! நல்ல கதைதான். ஆனால், சற்று ஆழமாய் நோக்கினால் இந்த “மையப்புள்ளி” கதையின் தேவைப்பாட்டுக்கு பின்னால், எமது சாதீய அடுக்குமானங்களும் அவை ஏற்படுத்தும் அனைத்து அக்கிரமங்களும் அழகுற கொழுவீற்றிருப்பது அப்பலத்துக்கு வந்து சேர்ந்து விடும். ஆக, இதுவே வெள்ளையானையின் அரசியல் வேர் என்றாகிறது. அதாவது காந்திக்கும் சார்வாகருக்கும் வித்தியாசம் இல்லை. பகத்சிங்குக்கும் ஜாலியன் வாலா பாக் படுகொலையை ஏவிவிட்டவனுக்கும் இடையே வித்தியாசம் இல்லை. ஜெயமோகனுக்கும் செத்து உலுத்து போகப்போகும் ஒரு நரிக்கும் கூட வித்தியாசம் இல்லை - இத்தர்க்கத்தின் அடிப்படையில். நரியின் மனநிலை ஜெயமோகனின் மனநிலையோடு வித்தியாசப்பட்டிருந்தாலும் கூட (தர்க்கத்தின்படி) (இதுவே கேள்விக்குறிதான்). ஈற்றில் மண் வாங்கி வாங்கி இருவரையுமே செரித்துக் கொள்ள போகின்றது என்ற தர்க்கத்தின் அடிப்படையில் இரண்டுமே ஒன்றாகின்றது–என்ன செய்வது. ஆண்டவன் சந்நிதானத்தில் இதுவே நியதி. இப்படியாய் அனத்துகின்றது ஜெயமோகனின் தீர்ப்பு. ஆனால் காரணமென்ன? ரத்தம் வழியும் கோர பற்களை எழுத்துலகில் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு தேவைப்பாடு எழுந்துள்ளது என்பதே இங்கு உள்ளடங்கும் அரசியலாகின்றது. இதற்கமையவே கடவுளாரின் தேவைப்பாடும் மையப்புள்ளி கதையும், ஈற்றில் வெட்கமற்ற வகையில் வாழ்வே அபத்தம் என்ற போதிப்பும் நடந்தேறுகின்றது. ஒருவனின், தலைமீது சாவகாசமாய், ஏறி அமர்ந்து சவாரிவிடும் மனிதன், சுமப்பவன் எழுப்பக்கூடிய ஈனக் குரலை கேட்டு, சுமப்பவனிடம் குனிந்து சொல்கின்றான் ‘வாழ்வே அபத்தம்’ என.
இது, ஒரு புறம். மறுபுறம், இக்காட்சியைக் கண்ணுறும் ஓர் இளைய தலைமுறையினரின், இளம் மனதில், இவ்அநீதிக்கெதிரான கேள்வி – அவனது சமூக நீதிக்கான பிரஞ்ஞை – அவனது மானுடம் சார்ந்த அளவீடுகள் - இவை பீறிடா வண்ணம் சிதைத்து விடுவதே, ஜெயமோகன் கைக்கொள்ளும் நுண் அரசியலாகின்றது. இதற்கு ;வாழ்வே அபத்தம்’ என்ற மேற்படி வாதமும் துணை செய்கின்றன. இத்தகைய ஒரு போதிப்பின், இத்தகைய ஓர் அடிக்கல்லில் இருந்தே, வெள்ளையானை மேலும் நகர்கின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.