- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
பெருமாள் மலை
நண்பகல் வேளை, நான் பெருமாள் மலை போய் சேர்ந்திருந்தேன், பேச்சிப்பாறை நீர்வீழ்ச்சியை காணும் பொருட்டு. வானம் மேகமூட்டமாய் இருந்தது. மழை அல்லது தூறலாவது, மாலை வேளையில் சாத்தியம் என்பது போல இருந்தது. பிரதான பாதையில் இருந்து கீழிறங்கி, ஓர் இரண்டு கிலோமீற்றர் நடந்தாக வேண்டும் – பள்ளத்தாக்கை நோக்கி. சுகமான நடை. கீழிறங்கும் போது, ஓர் அரை கிலோமீற்றர், ஒரு சிறிய நீரோடையுடன் அதன் கரையை ஒட்டினாற்போல், பெரிய பெரிய மரங்களின் கீழாக, அவற்றின் நிழலில் நடக்கும் போது நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் மென் காற்று, சில்லென முகத்திலறைந்து நடந்த நடைக்கு மேலும் உற்சாகம் தருவதாயிருந்தது. நீர்வீழ்ச்சி ஒன்றும் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. செங்குத்தான பாறையில் விழும் ஓர் சிற்றோடை. அவ்வளவே. ஒரு வேளை, வருடத்தின், வேறுபட்ட காலத்தில் நீர் அதிகமாக வந்து விழுவதாய் இருக்கக்கூடும். இருந்தும், முக்கியமானது, நீர்வீழ்ச்சியை கீழிருந்து தரிசிக்கவில்லை என்ற உண்மையாகும். மேலிருந்து பார்க்கும் போது எந்த ஓர் நீர்வீழ்ச்சியும் தன் உண்மை பரிமாணத்தை வெளிப்படுத்தாது என்பது தெளிவு, சில மனிதரை போன்று. அதாவது குறித்த புள்ளிகளில் நின்று நோக்கினாலன்றி, அது நீர்வீழ்ச்சியானாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி அவையவை தத்தம் உண்மை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில்லை போலும். மொத்தத்தில் அந்த நீர்வீழ்ச்சி, என் கால்களை, கூச வைத்ததுடன் சரி. மடிப்பு மடிப்பாக, ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து ஒன்றை ஒன்று முந்துமாப் போல் முண்டியடித்து வருமே, பிரமாண்டமான நீர்படைகள்– அதொன்றும் இங்கே காணமுடியவில்லை – இப்படி மேலிருந்து பார்த்ததால். ஆனால், கீழிருந்து பார்த்திருந்தால் கூட, இந்த வற்றிய காலத்தில் அப்படி எதையும் நான் பெரிதாக கண்டிருக்கவே போவதில்லை என்பதும் புரிந்தது. மொத்தத்தில், என்னை கவர்ந்தது நீர் வீழ்ச்சியின் பிரமாண்டம் என்பதை விட இப்பாறையின் பிரமாண்டம் என கூறுவதே சரி. மேலும், இதுதான், பேய்ச்சி பாறையோ என்பதனையும் நான் விசாரித்தேனில்லை – துரதிர்ஷ்டவசமாக.
மாலை முழுவதும், என் வசமிருந்ததால், ஆறுதலாகவே, மிக ஆறுதலாகவே நேரம் எடுத்து மேலே ஏறத் தொடங்கினேன். ஏறி, பெருமாள் மலை நகரை மீண்டும் அடைந்த போது, மழை இப்போது மெல்லியதாய் தன் தூற்றலை போடத் தொடங்கிவிட்டிருந்தது. பெருமாள் மலை எனும் இந்த கிராமத்து நகரம், பிரதான பாதை செல்லும் வீதியின், ஒரு மருங்கே, அமைந்திருந்த ஓர் பத்து பன்னிரெண்டு பெட்டி கடைகளோடு சரி. வீதியின் மறுபுறம் எதிர்த்தாற்போல் இன்னும் இரண்டொரு கடைகள். அவற்றுடன், சற்று மறைவை ஏற்படுத்தி கொண்டு அதற்குள்ளாக இருந்த ஒரு மது நிலையம் – இவ்வளவே, பெருமாள் மலை நகரம் என்று கூட சொல்ல துணியலாம். இதில், கொடைகானலை நோக்கி செல்லும் பஸ் நிறுத்தம் முக்கியமானது. அதனை ஒட்டி, படிக்கட்டுக்கள் – அவற்றை ஒட்டி சில கடைகள், மீண்டும் நான்கைந்து.
அவற்றில் ஒன்று, ஒரு தேநீர் கடை. தேநீர் தயாரிப்பவர், ஒரு பெட்டிக்கடைக்கே உரித்தான, ஒழுங்கு விதிகளுக்கேற்ப, கல்லா பெட்டிக்கு நேர் முன்னே, வெளியில், தேநீரை தலைக்கு மேலாக பிடித்து, ஊற்றி ஆற்றி, நுரைவரச் செய்து, ஒவ்வொருவருக்காய் தந்தபடி இருந்தார். நானும் ஒரு சிறிய குவளை தேநீரை வாங்கி, கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பாதையை பார்த்தவாறு குடித்துக்கொண்டிருந்தேன். மழை இப்போது தூரல் என்பதனை தாண்டி திடீரென தன் அடுத்த படிநிலைக்கு செல்லத் தொடங்கியிருந்தது. இக்காரணத்தால், பெருமாள் மலையின், பிரதான வீதியில், அக்கணத்தில், நின்றோ, நடந்தோ, அமர்ந்தோ இருந்த பெருமாள் மலை மகாஜனங்கள், அப்படியே ஒரே நொடியில் படிக்கட்டுக்களில் தாவி ஏறி பெட்டிக்கடைகளின் அடியே, ஓரமாய் மழைக்கு ஒதுங்கி வரிசையாக நிற்க தொடங்கினர். பத்து பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும், மழை உரக்காமல், தணிந்து, தூறலாய் மீண்டும் நடை போட துவங்கியது.
இப்போது, மது நிலையத்தில் இருந்து, ஏதோ கண்டனக் குரல்கள் – வசவுகள் வெளிவரத் தொடங்கின. சற்று நேரத்தில் தூரல் ஏற்படுத்திய சத்தத்தைவிட இவ்வசவுகள், நீர்வீழ்ச்சியை நெருங்க நெருங்க அதன் சப்தம் எப்படி கூடி கூடி செவிகளை எட்டுமோ அதை போல கூடி கூடி வர துவங்கின. இவை வசவுகள் இல்லை. காதை கூச்செறிய செய்யும் மிக அருவருப்பை உண்டுப்பண்ணக்கூடிய துர் வார்த்தைகள் இவை. இப்போது இக் கூச்சல்களின் சொந்தகாரர்களான இருவர் மது நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். ஒருவன் – குறைந்த வயதினன் முதலில் வந்தான். அவனைத் தொடர்ந்து ஒரு கிழவர் வெளியே வந்தார். அவர்கள் இருவரும் வெளியே வந்தனர் என்பதனை விட அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்க கூடும் என்பதனை அவர்கள் உற்பத்தி செய்த சப்த கோசங்கள் ஆருடம் கூறி நின்றன.
இருவர் சப்தங்களை எழுப்பினர் என்பது இங்கே அடிப்படையில் ஒரு பிழையான ஒரு விடயமாகும். ஏனெனில், இருவரில் ஒருவர் மாத்திரமே இத்தகைய சப்த வினோதங்களை எழுப்புபவராக இருந்தார். ஓர் கைப்பிடி அளவே உள்ள, மிக சிறிய ஒரு குருவி, ஒரு காடே அதிரும் வண்ணம் எப்படி ஓர் குரலை எழுப்புகிறது என்று அதிசயிக்க வைக்கின்றதோ அந்த வகையில், ஓர் கைப்பிடி அளவே தோற்றம் கொண்டிருந்த ஒரு கிழட்டு மனிதரே இந்த சப்த ஜாலங்களுக்கு சொந்தக்காரராய் இருந்தார். ஓர் அறுபது எழுபது வயது மதிப்பிடலாம். ஓர் மிக மெலிந்த உடல். குச்சு போல் தோற்றம் என்றால் அது இதுதான். ஒரு நாலுமுழ காவி படிந்த, மஞ்சள் நிறமாகி வெளுத்து போன வேட்டி – அதனை மெலிந்த குச்சு போன்ற தன் எலும்பும் தோலுமான முழங்காலுக்கு சற்று மேலாக மடித்து கட்டியிருந்தார். வேட்டியை ஒத்த கறை படிந்த காவி உற்ற மஞ்சளான வெள்ளை சட்டை. பேசி குரலெழுப்பும் போது, அச்சத்தத்தின் அதிர்வு தாளாமல் அவர் உடல் தள்ளாடியது. மெலிந்த தன் குச்சு போன்ற கால்களை, நிலத்தில் மாற்றி மாற்றி வைத்து, தான் விழாமல் இருப்பதை உறுதி செய்தவாறே தன் மெலிந்த கைகளை மற்றவனை நோக்கி நீட்டி நீட்டியவாறே, தன் வசவுகளை ஆத்திரமாய் தன் தொண்டை கிழிய மட்டும் வெளியேற்றி கொண்டிருந்தார் கிழவர்.
மற்றவனுக்கு ஓர் முப்பது நாற்பது வயதிருக்கும். இவரை விட குள்ளமானவன் என்றாலும், கட்டுமஸ்தான உடல். ஓர் ஐந்தடி. மது நிலையத்தில் இருந்து வெளி வந்தது முதல், இந்த குள்ளமான கட்டுமஸ்தானவன் மெல்ல நகர்ந்து, அவ்விடத்தை விட்டு மெல்ல அகன்றுவிடுவதற்கான சகல ஆயத்தங்களை செய்து வருபவனாய் இருந்தான். ஆனால் கிழவரோ விடுவதாயில்லை. காதை மட்டுமல்ல – முழு உடம்பையும் கூச செய்து ஒருவரை ஒருவர் வெட்கித்து பார்த்து அவரவர் தலையை தரையை நோக்கி குனித்து கொள்ள கூடிய வகையில் மெலிந்த உருவத்தவரின் சொற்பிரயோகங்கள் சராமாரியாக கொட்டின. ஓர் பெருமாள் மலையின் நீர்வீழ்ச்சி போன்று, அல்லது இப்பேச்சிபாறை நீர்வீழ்ச்சியின் சாரமே இதுதான் – இந்தா பிடி என்பது போல அவரது ஓங்கார குரல் தெருவின் இந்த கோடியில் இருந்து அந்த கோடி வரை பொங்கி பிரவாகித்தது. ஓங்காரமாய் கொட்டித் தீர்த்தது.
ஒரு நூறு மனிதர்கள் – பிள்ளைகள், பெண்கள், சிறியவர், பெரியோர், முதியவர் – இவர்கள் அனைவரும் ஒடுங்கி, தூறல் ஏற்படுத்திய நிபந்தனைகளின் காரணமாய், அந்த படிக்கட்டுகளில் வரிசையாய் நின்று சமைந்து விக்கித்து போயிருந்தனர். குறைந்தபட்சம் அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன். செக்கனுக்கு ஒரு வார்த்தை அல்லது சொல் என்று பார்த்தாலும் கூட இந்த பத்து பதினைந்து நிமிடங்களில் ஆயிரம் சொற்களை அள்ளி வீசி எறிந்திருப்பார் மனிதர். அவ்வளவும் மிக மிக வெட்கக்கேடானவை, என்பதில் வாத பிரதிவாதங்களுக்கு இடமில்லை. கைகளை தலைக்கு மேல் உயர்த்தியும், உடல் தள்ளாடியும், மெலிந்த தன் கால்களை மாற்றி மாற்றி வைத்தும் – இச்சொற்பிரயோகங்களின் ஓலம் ஒரு சராசரி நீர்வீழ்ச்சியின் ஓசையை கூட ஒட்டு மொத்தமாய் சிதறடித்திருக்கும். ஒலிபெருக்கி வைத்தாற்போல் அப்படி ஒரு சத்தம் இந்த தொண்டைக்கு.
அதேபோல் இச்சொல்மழையின், ஒரே ஒரு துளிகூட, ஓர் மக்கள் கண்ணியத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத்தையே நிலைகுலைய செய்திருக்கும். அப்படிப்பட்ட அநாகரீக சொற்களை தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து வீசி எறிந்தார் இந்த மெலிந்த வயதான தள்ளாடும் கிழவர். அவர் தொண்டை கீச்சிட்டது. அவர் வாய் பிளந்தது – கண்கள் ருத்திர தாண்டவம் ஆடின. ஓலம் தெருக்கோடியின் இம்முனையில் இருந்து அம்முனை வரை எட்டி எட்டி எதிரொலித்து மீண்டது. அவ்வளவும், கூறியது போல, காட்டுமிராண்டி நிலைக்கும் கடைநிலையானது.
கட்டுமஸ்தானவன் தொடர்ந்தும் ஏதேதோ சமாதானம் முணங்கி தொடர்ந்து நழுவ முற்பட்டதாய் தோன்றியது. அவனது குறி நழுவுதல் ஒன்றே என்பது இப்போது மிக தெளிவாக தெரிந்தது. இவர் விடவில்லை – தூறலில், தள்ளாடி தள்ளாடி தன் ஓலத்தை சற்றும் நிறுத்தாமல் கைகளை நீட்டி நீட்டி ஆட்டியவாறே அவனை பற்றி பிடித்திழுக்க பிரயாசைபடுபவர் போல பின் தொடர்ந்து, மெல்ல நகரும் அவனை, இறுதியில் எட்டி தன் எலும்பு விரல்களால் பற்றி இழுத்து தடுத்து நிறுத்தினார். ஓவென்று கொட்டிய நீர்வீழ்ச்சியின் ஓலத்தினிடை இப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அதாவது, இச்சிறு கிழ நரகலின் வாயை யாராவது பாய்ந்து சென்று அப்படியே தன் கரங்களால் பொத்தி அடைக்கமாட்டார்களா என்று எண்ணிக்கொண்டிருந்த போது, விக்கித்து வாயடைத்து நின்றிருந்த இப்பெருமாள்மலை ஜனத்தொகையின் முன் அம்மனிதர், பெய்த தூறலில், தள்ளாடி வழுக்கி விழுந்தார் - ஓர் சகதி நீர் தேங்கிய படலத்துள். பிடியிலிருந்து நழுவி கொண்டிருந்த கட்டுமஸ்தானவன் இப்போது திரும்பி பார்த்தான் – ஒரு கணம் – கிழவர் தட்டு தடுமாறி சகதியில் இருந்து எழபோனார். அவ்வேளை, இதனை மேலும் பொருக்க முடியாமல் இரண்டு மூன்று “நாகரீக” உடையணிந்த மத்தியத்தர வயதினர் படிகளில் அவசர அவசரமாய் இறங்கி வீதியின் குறுக்காக ஓட தொடங்கினர், அவ்விருவரை நோக்கி. அப்பாடா. என் மனம் பெருத்த நிம்மதி பெருமூச்சுவிட்டது. இந்த அநாகரீகத்தை நிறுத்த யாருமே முன்வரமாட்டார்களா – இந்த வெட்கக்கேட்டை தட்டி கேட்க ஒருவன் இப்படிகளை விட்டு கீழிறங்கானா என்று ஏங்கியிருந்த நான் கணத்தில் இம்மூவரின் படி இறங்கலை கண்டு பெரு மகிழ்வு கொண்டேன். நீர்வீழ்ச்சியின் சப்தம் அடைபட போகிறது, என்பது என் மனதுக்கு இதமாக இருந்தது.
சென்ற மூவரில் உயர்ந்தவன் அந்த கட்டுமஸ்த்தானவனின் சட்டையை இறுக்க பற்றிக்கொண்டான். மற்ற இருவரும் துணையாக இருந்தனர். அவர்களில் ஒருவன் வயதானவனின் கரத்தை ஆறுதலாக பற்றி அக்கிழவன் எழும்ப உதவினான்.
உயர்ந்தவனின் குரல் என் செவிகளை எட்டி கேட்காவிட்டாலும், அவனது பாவங்களில் இருந்து புரிந்தது. உயர்ந்தவன், கட்டுமஸ்தானவனை எச்சரிக்கின்றான் – அடித்து, பற்களை கழற்றி எடுத்து விடுவேன் – நீ கவனமாக இருக்காவிட்டால் – என்று எச்சரிப்பது மிக தெளிவாக தெரிந்தது… “யாரிடம் வைக்கின்றாய் உன் விளையாட்டை அடித்தமோ – இந்த இடத்திலேயே சப்பட்டையாகி துடிதுடித்து இறந்து போவாய்” என்ற வகையிலான சபதமேற்புகளை அவன் கட்டுமஸ்த்தானவனிடம் அடுத்தடுத்து கூறிக்கொண்டிருந்தான். கட்டுமஸ்தானவனோ எப்படி நகர்வது என்பதிலேயே குறியாக இருந்தான். அதிர்ந்து போய் விட்டேன் நான். யார் யாரை எச்சரிப்பது?
தூசனத்தை இவ்வளவு கேவலமாய் மக்கள் முன்னிலையில் கொட்டிய இந்த கிழ நரகலை விட்டு விட்டு, மற்றவனை ஏன் இவர்கள் பிடிக்கின்றார்கள் – எச்சரிக்கின்றார்கள் – என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விக்கித்து போய்விட்டேன். இருந்தும், அக்கணத்தில் பேச்சிபாறையின் முழு சாரமும் நொடியில் எனக்கு பளீரென புரிந்தாற்போல் பட்டது.
குளக்கரை பெரியவர் சொல்லியிருந்தார்: “இவனுக்கு ஒழுங்கா ஒரு வேட்டி கூட இருக்காது. கோவணத்த கூட ஒழுங்கா தோச்சி கட்டமாட்டான்… ஆனா இவன் தன்ன ஒரு முதலாளின்னு நெனைச்சிக்குற அந்த கூத்து இருக்கே…” பெட்டி படுக்கைகளை மடித்து ஒழுங்குபடுத்தி அறையை கடைசி தரமாய், இன்னுமொரு தடவை நோட்டம் விட்டு, நண்பன் அனுப்பி வைத்திருந்த வாகனத்தில் வந்து ஏறி அமர்ந்துக் கொண்டேன். வத்தலகுண்டு பாதையை விடுத்து பழனி செல்லும் வழியில் திருச்சியை அடைவது என்று தீர்மானித்தேன். ஏனெனில் வரும் போது வத்தலகுண்டு பாதை வழியாகவே வந்திருந்தேன். மீண்டும், பெருமாள் மலையை தாண்டி, பழனி பாதை வழியாக கீழிறங்கிய போது தூரத்தே தெரிந்த மலைகள், பின், ஜன்னல்வழியாக, இன்னும் கூட வீசிக்கொண்டிருந்த கொடைக்கானலின் மிச்ச சொச்ச காற்று – இவை அனைத்துமே மனதை இதப்படுத்துவதாயிருந்தன.\
ஒரு ஆறு ஏழு கிலோமீற்றர்கள் கடந்திருப்போம். ஓர் சிறிய நகரத்துக்கான பெயர் பலகை அது. “பி.எல்.ஷெட்’ (டீ.டு.ளுர்நுனு) என்று எழுதப்பட்டு, வீதியோரமாய் பச்சைநிறத்தில் நின்றிருந்தது. தமிழ்நாட்டில், அது கொடைகானல் பிரதேசமாக இருந்தாலும் கூட, பெயர்கள் ஏனோ, குளம், பட்டி, பேட்டை என்று இது போன்ற ஏதாவது ஒரு வார்த்தையிலேயே முடிவடைவது வழமை. அப்படி இருக்கும் போது இது என்ன வித்தியாசம் – “பி.எல்.ஷெட்” என வாகன ஓட்டுனரை விசாரித்தேன். அவர் இந்த பிரதேசங்களை ஓரளவு அறிந்தவர். அவர் தனது மொழியில் கூறினார்: “வெள்ளக்காரேன் அந்த நாளையில குதிரையில வந்திருப்பான் சார் – எங்கெங்க தோட்டம் போட்லாம்ன்னு தேடிக்கிட்டு – வந்தவென், தங்கி ரெஸ்ட் எடுத்துக்கிறதுக்கன்னு – இந்த எடத்த தெரிவு செஞ்சு ஒரு “ஷெட்ட” அடிச்சிருப்பான் – அதான் சார் இதுவா இருக்கும்.” வெள்ளைக்காரனோடு, தொடர்புபடுத்தி அவர் தந்த விளக்கம் என்னை கவருவதாகவும், ஓரளவு நம்ப வைக்க கூடியதாகவும் சுவாரஸ்யபடுத்துவதாகவும் இருந்தது.
அந்த பெயர் பலகையில் இருந்து ஒரு நூறு யார் போகும் முன்பே அந்த குட்டி நகரம் – அதாவது வழமையான பத்து பெட்டிக்கடைகளை கொண்டிருக்கக்கூடிய – ஒரு குட்டி நகரம் வந்து சேர்ந்தது. அக்குட்டி நகரை பார்த்துக்கொண்டே வந்த என் கண்களில் அத் தேநீர் கடையின் பெயர் அப்படியே குத்திட்டு நின்றது: “வாழும் வரை போராடும் – தேநீர் நிலையம்”
காரை திருப்ப சொன்னேன். நான் ஒரு தேநீர் அருந்திவிட்டு வந்து விடுகிறேன் – ஐந்து நிமிடம் தான் – என்று இறங்கி நடந்தேன். பாதை மட்டத்தில் இருந்து இரண்டு பெரிய படிகள் – கீழிறங்க, இரண்டு குறுகிய பெஞ்சுகள் – இரண்டு நாற்காலி மேசை – ஐந்தடி நீளம் நான்கடி அகலம் கொண்ட சிறிய ஓர் அறை கொண்ட கடை. சொந்தக்காரர் தாடி வளர்த்த ஒரு மத்திய வயதினர். அவரது மனைவி, ஒட்டி இருந்த இன்னுமொரு சிறிய அறையில் உணவு வகைகளை தயாரித்தப்படி இருந்தாள்… காப்பியை சுவைத்தேன் – பலதையும் கதைக்க தலைப்பட்டேன். அவரும் கதைப்பதில் ஈடுபாடு கொண்டவராய் இருந்தார். சளைக்கவில்லை. என் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் தந்தார். இறுதியில் கேட்டேன் ஏன் இப்படி ஒரு வித்தியாசமான பெயரை கடைக்கு வைத்திருக்கின்றீர்கள் என.
சிரித்தபடி கூறினார் மனிதர்: “வேறென்னா சார். நாலு மொற நான் ஜெயிலுக்கு போயிருக்கேன்… வாழ்க்கையே இதுதான் சார்… இப்ப நான் இங்க கிராமத்து தலைவரா இருக்கேன்… அரசியல் அது இதுன்னு… வாழ்வே இதாயிருச்சி… அப்ப பேர இப்படி வைக்கலாம்ன்னு – வாழும் வரை போராடும் தேநீர் நிலையம்ன்னு” இந்நகரின் பெயர் குறித்தும் அவரிடம் கேட்டேன். தெளிவுப்படுத்தினார்
“பி.எல்.ஷெட் – அது ஒன்னுமில்ல சார்… பொண்டட் லேபர் ஷெட்… அதாவது கொத்தடிமை ஷெட்… குஜராத்ல கொத்தடிமையா இருந்த எண்நூத்தி அம்பது தமிழ் குடும்பங்க இங்க வந்து குடியேறினாங்க – ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எம்பத்தி ஏழுல… அதுனால வந்த பேரு… அது சரி. சுதந்திரம் அடைஞ்சது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஏழுலதான். ஆனா அதெல்லாம் கொத்தடிமைக்கு இல்ல சார்… இது நடந்தது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எம்பத்தி ஏழுல சார் –”
என் தொணத் தொணத்த தொடர் கேள்விகளால், ‘இவன் விளங்காதவன்’ என்ற எரிச்சலுடன் கூறினார்:
“அது சரி சார்… அது வேற. இது வேற”
நான் பதில் சொன்னேனில்லை.
‘அது வேற – இது வேற’
நினைவில், மீண்டும் குளத்தின் பெரியவர்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.