1
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.
முதல் நாள் மதியத்துக்கு மேல் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட முப்பத்தொரு பேரும், அதிகாரபூர்வமாக விடுதலையின் திகதியும் நேரமும் அறிவிக்கப்பட்டனர். புனர்வாழ்வுக் காலத்தில் அவர்கள் கற்றிருந்த சிங்கள மொழி அறிவு அவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு, இன சௌஜன்யம் போன்றவற்றிற்கு உதவியாயிருக்குமெனவும் சொல்லப்பட்டது.
இருட்டு முழுவதும் கலைந்திராத ஒரு பொழுதில் எழுந்து, அதுவரை யார் யாருக்கோ திறந்த ராணுவ காவல் கதவுகள் தனக்காகத் திறக்க சங்கவி காத்திருந்தாள். அது திறக்கும்வரைகூட அது திறக்குமாவென்ற சந்தேகம் அவளிடமிருந்தது. அவள் அறிந்திருந்த தகவலின்படி அவள் இயக்கத்திலிருந்த காலத்தில் அரசாங்க அமைச்சர், ராணுவ மேலதிகாரிகளின் தாக்குதல் குழு ஏதாவதில் அவள் பங்குபற்றியிருந்தாளா என்று அவர்களால் திட்டமாக அறியமுடியாதிருந்தும், இயற்பெயராகவோ இயக்கப் பெயராகவோ சொரூபாவென பெயர் கொண்டிருந்த ஒரு கரும்புலிப் பெண்ணுடன் அவளை அவர்கள் குழப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்ன அந்தத் தாக்குதல் கொழும்பில் நடைபெறவிருந்த காலத்தில் தனக்கு திருமணமாகி குழந்தையை வயிற்றிலே சுமந்துகொண்டிருந்தாளென்ற வாதம் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இருந்தும், ஏனோ அவளை விடுவிக்க தடுப்பு முகாமில் அவள் இரண்டு வருஷங்களைக் கழித்திருந்த நிலையிலும் ராணுவ விசாரணைக் குழு தயக்கம் காட்டிக்கொண்டிருந்தது. இறுதியில் விடுதலையின் நாள் அவளுக்கும் குறிக்கப்பட்டது.
ஓமந்தையில் அத்தனை கால தன் இடும்பைகளுக்கெல்லாம் காரணமான அந்த மனிதனை அப்போதும் அவள் நினைத்தாள். அவனை அவளால் மறந்துவிட முடியாது. எந்தவொரு துயரப்பொழுதிலும் அவனைத்தான் அவள் நினைத்தாள்.
2009 மே மாதம் 18ஆம் தேதியிலிருந்து அடைந்துகொண்டிருந்த அத்தனை இன்னல்களைவிடவும் விடுதலைக்கு ஒரு மாதம் முன்பான சிலநாட்களில் அவள் அடைந்தது பேரவலமாக அவளுக்குத் தெரிந்தது. கார்த்திகாவின் சுகவீனம் அந்தளவு உக்கிரமாய் இருந்தது அந்த நாட்களில். சாதாரண தடிமன் இருமல் மேல்கணகணப்பாக ஆரம்பித்த காய்ச்சல், நடக்க முடியாதபடி பிள்ளையை படுக்கையில் போட்டுவிட்டது. மருத்துவ வசதிகள் குறைவான இடமென்ற நினைப்பே, சங்கவியை நெஞ்சின் அடியாழம்வரை சென்று பதைக்க வைத்தது.
குழந்தை இயலாமல் சோரத் தொடங்கி படுக்கையில் விழுந்தபோது நேசமணி தன்னிடமிருந்த ஒரு பனடோல் குளிசையை கொடுத்துதவினாள். பனடோலுக்கு கட்டுப்படுகிற காய்ச்சலாக அது இருக்கவில்லை. அன்றிரவு கார்த்திகா காய்ச்சல் உக்கிரத்தில் பிதற்றத் தொடங்கிவிட்டாள். அழுதபடி இரவிரவாக விழித்திருந்துவிட்டு காலையில் முகாம் அதிகாரி வந்தபோது குழந்தையின் நிலையை முறையிட்டாள்.
அதிர்ஷ்டவசமாக அன்றைக்கு அவளைப் பார்வையில் மிகவும் பழக்கமாகியிருந்த அதிகாரி வந்தது மட்டுமில்லை, அவருக்கு கார்த்திகாவையும் நன்கு தெரிந்திருந்தது. எந்தநேரமும் மலர்ந்த முகம் கொண்டும், எவரைக் கண்டாலும் சிரிக்கவும் செய்கிற பிள்ளையை யாருக்குத்தான் நினைவில்லாமல் போகும்? மூன்று வருஷங்களாக அவள் அவரது கண்முன்னாலேயே வளர்ந்துமிருந்தாள்.
டாக்டர் வந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊசி போட்டு மருந்தும் கொடுத்த பிறகு, பயப்படத் தேவையில்லை, அன்றைக்கு மாலைக்குள் காய்ச்சல் குறைந்துவிடும், இல்லாவிட்டால் வார்ட்டுக்கு அனுப்புவதுபற்றி யோசிக்கலாமென அவளைத் தேற்றியதோடு, தான் மறுநாள் காலையில் வந்து பார்ப்பதாகவும் கூறிச் சென்றார்.
அவர் சொல்லியபடி அன்று மாலைக்குள் காய்ச்சல் குறைந்தது. மறுநாள் டாக்டர் பார்க்க வந்தவேளையில் எழுந்தமர்ந்திருந்த கார்த்திகா அவரைக் கண்டு சிரிக்குமளவு குணமாகியிருந்தாள். அந்த டாக்டர்தான், முகாமை முன்னாள் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக வரப்போகிற சிங்கள தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பாக அவர்கள் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியத்தைக் கூறிச் சென்றார். சங்கவி கேட்டு தன் மகிழ்ச்சியைக் காட்ட மெல்லச் சிரித்துவைத்தாள். அதுபோல அந்த வருஷத்தில் ஒரு தடவையும், அதற்கு முந்திய வருஷத்தில் இரண்டு தடவைகளும் அவர்கள் விடுவிக்கப்பட இருப்பதான செய்திகள் கசிந்து உள்ளே வந்திருந்தன. எல்லோர் முகமும் பூத்துப் பொலிந்து திரிந்தன. உத்தரிப்புகளின் முடிவு நெருங்குகிறதென்று சிலரும், உத்தரிப்புகளுக்கு ஆட்படாமல் தப்பிவிடப் போவதாய் சிலரும் மனம் ஆசுவாசப்பட்டு திரிந்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருந்த விடுதலையின் அழைப்பு பின்னர் வரவேயில்லை.
கடைசியாக அவர்கள் விடுதலையாக்கப்பட இருப்பதான செய்தி அப்போது உள்நுழைந்திருக்கிறது. அவள் மற்றவர்களைப்போல் சந்தோஷப்பட்டுவிடவில்லை. அவள் தேடிய விடுதலை இனி அவளிடம் வரவேண்டும். மூன்றாண்டுகளாகின்றன, இனியும் என்ன அவதி? முகாம்கள்மேல் சர்வதேச கவனம் இருக்கிறதெனில், அது அவளை விடுதலை செய்யும்.
ஆனால் தன் திரேகத்தின் சத்து முற்றாக வற்றிப்போவதன் முன்னம் முகாமைவிட்டு வெளியேறுவதற்கு ஒரு தேவையிருக்கிறது அவளுக்கு. நினைவில் ஆணி அடித்ததுபோல் வைத்து அந்த மனிதனின் அடையாளங்களைக் காத்திருக்கிறாள் அவள். அவனை ஒரு புல்லாய் அவமதிக்கும் வெறி அவளுள் சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. எங்கே இருப்பானோ? ஆனால் இருப்பான். அதைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். தன் மீதிக் காலம் முழுவதையும் அத் தேடலில் அவள் அழிப்பாள். அவனே அவளது அத்தனை இன்னல்களுக்கும், வதைகளுக்கும், பயங்களுக்கும் காரணவாளியாய் இருந்தான். அவன் காரணமாகவே அந்த நெடுந்துன்பக் கேணியில் தானேயாக தன்னைக் கொண்டுவந்து அவள் விழுத்தினாள்.
புலிகள் இயக்கத்தில் பயிற்சிபெற்ற போராளி அவள். இருந்தும் வட்டுவாகல் தாண்டும்வரை அவளுக்கு ஒரு பிரச்னை நேரவில்லை.
வட்டுவாகலில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைய ஜனங்கள் லட்சக் கணக்கில் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். அதுவரை உயிர் தப்ப எடுத்த ஓட்டத்தின் இறுதிக் கண்ணி அது. அப்போதும் உணர்வுகளின் அவலம் வழிந்துகொண்டிருந்த நிலமாயிருக்கிறது வட்டுவாகல். பின்னால் தீவிரம் குறைந்ததாயினும் இன்னும் துவக்குச் சந்தங்களும், குண்டு வெடிப்புக்களும் எழுந்துகொண்டு இருக்கின்றன. அடைப்புகளை உடைத்துக்கொண்டும் வெளியேறும் தீவிரம் மக்களில். இறுதியாக வட்டுவாகல் பாதை திறக்கிறது அவர்களுக்கு. அவளால் பொதுமக்களில் ஒருத்தியாக வெளியேற முடிகிறது.
ஆனால் ஓமந்தையில் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் அவள் கனவிலும் நினைக்காதவையெல்லாம் நடந்து முடிகின்றன.
திடீரென ஒலிபெருக்கி அலறியது. ‘புலிகள் இயக்கத்தில பயிற்சி எடுத்தவங்கள், அந்த இயக்கத்துக்காக வேறு வகையில உதவி செய்தவங்கள், ஒரு நாளைக்கின்னாலும் அந்த அமைப்பில இருந்தவங்கள் எல்லாம் வலதுபுறமா வரிசையில வரவேணும். அவங்கள எல்லாம் விசாரணைக்குப் பின்னாடி விடுதலை பண்ணி விடுவோம். உண்மையை மறைக்கிறது உங்களுக்கு மிச்சம் மிச்சம் நல்லமில்லே’.
ஒலிபெருக்கியின் அறிவிப்பு அவளை யோசிக்க வைத்தது. குழந்தை இருக்கிறவகையில் அவள் பொதுமக்களில் ஒருத்தியாக வெளியேறவதற்கு நிறைந்த சாத்தியம் இருக்கிறது. அவள் பொதுமக்கள் வரிசையில் செல்ல இறுதியாக முடிவெடுத்தாள்.
ஏற்கனவே இரண்டு வரிசைகள் அமைந்துவிட்டிருந்தன அங்கே. அப்போதும் அவள் அதே வரிசையிலேயே நின்றுகொண்டிருக்கிறாள். ஆனால் இரண்டு கண்கள் அவளையே இமைக்காது பார்த்து அவளை அந்தரப்பட வைத்துவிடுகின்றன. அவை அவளை யாரென அடையாளம் கண்ட கண்களா?
பொதுமக்களோடு மறைந்து செல்லும் புலிகள் இயக்கத்தினரை அடையாளங்காண மாற்று இயக்கத்தினரும், ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து நீங்கி ராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்டவர்களும் அவளைப் பயிற்சியெடுத்த போராளியாக இனங்காணக்கூடிய வாய்ப்பை அந்தக் கண்கள்தான் நினைக்கப் பண்ணின. அந்தக் கண்களுக்குரியவன் அவளிருந்த இடத்துக்கு மிக அணித்தாக நடந்து அவளை உறுத்துப் பார்த்தபடி போயுமிருந்தான்.
வரிசை குறைந்துகொண்டிருந்த அந்த இறுதிநேரத்தில், தான் போராளியாக இனங்காணப்பட்டால் நேரக்கூடிய சிக்கலதும், சித்திரவதையினதும் பயம் அவளது மனத்தைக் கலக்கியது. எப்போதும் திரும்பமுடியாத அவலத்தில் வீழ்வதைவிட, விசாரணைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதே உசிதமென்று அவள் தன் மனத்தை மாற்றினாள்.
பாதுகாப்பு வலயத்துக்கு மிகச் சமீபமாக ஓடிவந்துவிட்ட நிலையிலும், குண்டுகள் வெடித்துச் சிதறிக்கொண்டுதான் இருந்தன. அது புலிகளுக்கும் இராணுவத்துக்குமான யுத்தம் முற்றாக முடிந்துவிடவில்லை என்பதன் அடையாளமாக இருந்தது. அது மரணம் குழிகள் அமைத்திருந்த நெடும் பாதை. அந்த மரண பாதையிலேயே உடம்பு சிதறி செத்திருக்கலாமென்று பட்டது சங்கவிக்கு. பழைய போராளியாயெனினும் ராணுவத்தின் கையில் வீழ்வதைவிட மரணத்தின் கைகளில் வீழ்வது சிலாக்கியமான ஒன்றுதான். ஆனால் கார்த்திகாவுக்கும் அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துவிட அவளுக்கு உரிமை கிடையாது.
‘இது புலி அங்கத்தவர்களுக்கு இறுதி அறிவிப்பு.’ ஒலிபெருக்கி மறுபடி அலறியது.
விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்களென்ற அறிவிப்பின் நம்பிக்கையில் அவள் குழந்தையோடு வலதுபக்கத்தில் போய் நின்றுகொண்டாள். வாசலில் நின்றவனின் பார்வையே அவளை இழுத்துப்போய் அந்த வரிசையிலே விட்டதுபோல் ஒரு சில விநாடிகளில் எல்லாம் நடந்து முடிந்தது.
அப்போதுதான் அவள் கண்டாள், அவளோடு சேர்ந்து பயிற்சியெடுத்த பெண்கள் இருவரும், தனக்கே பயிற்சி தந்த ஒரு மூத்த பெண் போராளியும், இன்னும் கூடி வேலைசெய்த இரண்டு போராளி இளைஞர்களும் சில குடும்பங்களுடன் சேர்ந்து இடதுபுற வரிசையில் முன்னேறிக்கொண்டிருப்பதை.
சங்கவி தன்னையே வெறுத்த கணம் அது. தான் அவசரப்பட்டுவிட்டதற்காக வாழ்நாளெல்லாம் வருந்தவேண்டி நேர்ந்த பொழுது, அவளை அந்த இடத்தில் நெருப்பின் மேல்போன்று நின்று துடிக்கவைத்தது.
ஒருபோது நந்திக்கடல் கடந்தான நிலையில் பின்னால் துரத்திவந்து விழுந்து வெடித்துச் சிதறுகின்றன ஷெல்கள். அலமலக்கப்பட்டு ஜனங்கள் ஓடுகிறார்கள். முன்னால் அவளைப்போலவே பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனோடு ஓடிக்கொண்டிருக்கிறாள் ஒரு இளம்பெண். தன் குடும்ப அங்கத்தவர்கள் யாரையோ தவறவிட்டுவிட்ட பதட்டத்தில்போல் அப்போதும் சுழன்று தேடுகிறாள். மறுபடி ஒரு ஷெல் கூவிவர சங்கவி பொத்தென கீழே விழுந்து கார்த்திகாவை தன்னுடலால் மூடிக்கொள்கிறாள். ஷெல் ஜனக் கூட்டத்துள் விழுந்து வெடித்துச் சிதறுகிறது. மெல்ல தலையை நிமிர்த்தி சங்கவி எதிரே பார்க்க தனியே நிற்கிறான் சிறுவன். வீறிட்டுக் கத்திக்கொண்டிருப்பவனை மறுபடி ஷெல்லெதுவும் தாக்கிவிடாமல் ஓடிச்சென்று கையில் பிடித்திழுத்து படுக்கவைக்க முனைகிறாள். இழுத்த பக்கத்துக்கு மெழுகுப் பொம்மை உருகிவருவதுபோல நொளுநொளுத்துச் சரிந்து விழுகிறான் அவன். ஏன்? சங்கவி கீழே பார்க்கிறாள். அவனது ஒரு கால் சிதறிப்போயிருக்கிறது. எகிறி விழுந்த பெண் கதறியபடி ஓடிவந்து அவனைத் தூக்குகிறாள். அந்த கணப் பச்சாதாபம் தவிர வேறு உயிர்ப்பற்றுக் காட்டப்பட முடியாத தருணமாயிருந்தது அது. சங்கவி கார்த்திகாவை தூக்கிக்கொண்டு மறுபடி ஓடுகிறாள். கல்லில் இடறுப்பட்ட பெருவிரல் காயம் தவிர வேறு ஆபத்துகளின்றி, அந்த இறுதிக் கட்டம்வரை வர உறுதுணையாயிருந்த அத்தனை அதிர்ஷ்டத்தையும், அந்த ஒரு முடிவால் அவள் எதுவுமே இல்லையென்று ஆக்கியிருக்கிறாள்.
ஒருவகையில் அதை அவளாகவும் செய்யவில்லைத்தான். அவளை பொதுமக்கள் வரிசையிலிருந்து விரட்டிவந்து அங்கே நிற்கவைத்தது அவளை அறிந்தான்போன்ற பாவனை காட்டிய அவனின் கண்களேயல்லவா? அந்தக் கண்களை தன் அடங்கா வெறுப்பின் தீவிரத்துடன் எட்டிஎட்டித் தேடினாள். ஆனால் அந்தக் கண்களுக்குரியவன் அங்கே தென்படவில்லை. காலத்தின் கையில் தன்னை ஒப்புக்கொடுத்ததாய் நினைத்து மேலே அவள் நடந்தாள். இயக்கப் போராளிகளாயிருந்து தாமாக சரணடைந்த குடும்பஸ்தர்களான பெண்களை வவுனியாவிலிருந்த ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிச் சென்றார்கள். அங்கேதான் அவளும் அவள்போன்ற முன்னாள் புலிப் போராளிகளில் குழந்தைகளோடு இருந்தவர்களும் தனியாக்கப்பட்டு ஒரு கூடத்துள் அடைக்கப்பட்டனர். மெனிக் பாம் இடப்பெயர்ந்த மக்களுக்கானதாயினும், குழந்தைகளோடிருந்த முன்னாள் போராளிப் பெண்களுட்பட்ட பெண்களுக்கான ஒரு சிறப்புப் பகுதி அங்கே அமைக்கப்பட்டு பின்னர் அவர்கள் அந்த முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். ஓமந்தையில்போலவே அங்கே அவர்கள்மேலான விசாரணை மிகத் தீவிரமாக இருந்தது. அவள் மனத்துள் வடிவமைத்த கதையை அழகாக தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அவள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின.
அக்காலத்தில் அவள் கண்ட, அறிந்த இன்னல்கள் பயங்கரமாக இருந்தன. இருபத்துநான்கு முகாம்கள் கொண்டிருந்த மெனிக் பாமில், ஜோசப் முகாமென்ற பெயர் அனைவரின் ஈரற்குலையையும் கருக்குவதாயிருந்தது. அங்கே செல்பவர்கள் பெரும்பாலும் திரும்புவதில்லை. விசேஷ பிரிவிலிருந்து இரவில் காணாமலாகும் பெண்கள் விடிகிற நேரத்தில் உடலும் உயிருமே சக்கையாகித் திரும்பினார்கள். சிலர் திரும்பாமலும் போயிருந்தார்கள். ஒரு வன்மம் அவர்கள்மேல் தீர்க்கப்பட்டுக்கொண்டிருப்பதை சங்கவி உணர்ந்தாள். துயரம் அந்தலை காணமுடியாத் தொலைவுக்கு நீண்டு தெரிந்தது. அந்த ஒல்லித்த உடம்பும், நெஞ்சோடு ஒட்டிய முலைகளும் அந்தக் கண்களின் அழகினையும் மீறி யாரின் கவனம் பட்டும் சிதையாததில் உள்ளாக ஒரு நிம்மதி இழைந்ததெனினும், பெண்களின் சிதைவுகள் தொடர்ந்தும் உக்கிரம் கொண்டிருந்த நிலையில் தன்னில் அது நிகழ்த்தப்படாதென்பதற்கும் அவளிடத்தில் உத்தரவாதம் இருக்கவில்லை.
மாதமொன்று நிறைகிற நேரத்தில்தான் தன்னைக் காத்த கவசம் தன் மெலிந்த உடம்பும் ஒட்டிய முலைகளுமல்ல கார்த்திகாவே யென்பது அவளுக்குத் தெரிந்தது. கார்த்திகா அம்மா என்றாள், அளந்து பத்து வார்த்தைகளுக்குள்ளாகப் பேசினாள், ஆனால் எவர் கதைகேட்டாலும் கலகலவெனச் சிரித்தாள். யார் பார்த்தாலும் பூ விரிந்ததுபோல் முகத்தை மலர்த்தினாள். முகாமைச் சுற்றியிருந்த சுருள் கம்பி வலைகளுக்கப்பால் காவலிருந்த கடுமுக ராணுவத்தினரே அவள் திசையில் திரும்பினால் சிரிக்க முயற்சித்தார்கள். கடுமையையாவது தணித்தார்கள். அவள் வெற்றிகொள்ளப்பட்டவள், எனினும் தாயுமாயுள்ளவள் என்பதை கார்த்திகாவின் சிரிப்பும் மலர்ந்த முகமும்தான் பலருக்கும் சொல்லியது. தடுப்புமுகாமில் சங்கவிக்கு கார்த்திகா போட்டிருந்தது பாதுகாப்பு வலயம்.
விடுதலையாவதன் பத்து நாட்களுக்கு முன் பரஞ்சோதி ஒருநாள் அவளைப் பார்க்க வந்திருந்தாள். ஆயிரம் சலசலப்புகளின் திரையில், சங்கவி தன் வார்த்தைகளை கம்பி வலைக்குப் பின்னாலிருந்து முனகினாள்: “சித்திரை வருஷத்துக்கு முதல் நாள் எங்களில கொஞ்சப் பேரை வெளியில விடுறதாய் இருக்கிறாங்கள். நேற்று கார்த்திகாவைப் பாக்க வந்த டொக்டர் சொன்னா.”
பரஞ்சோதி, “பிள்ளைக்கென்ன?” என்று பதறிக் கேட்க, “காய்ச்சல்தான். கொஞ்சம் கடுமையாய்த்தான் இருந்திது. இப்ப சுகம்” என்றுவிட்டு, “இப்பிடி மூண்டு முறை சொல்லியிட்டாங்கள். ஒவ்வொரு தடவையும் காலங்காத்தல எழும்பி காலுழைய நிண்டு பாத்து களைச்சிருக்கிறன். இப்ப எனக்கு நம்பிக்கையில்லை. எது நடக்குமோ அது நடக்கட்டும்” எனச் சோர்ந்தாள்.
போகும்போது, “திங்கக்கிழமை வந்து பாக்கேலுமோம்மா? நீங்கள் வந்தா கார்த்திகாவோட எனக்குச் சுகமாயிருக்கும்’ என்றதற்கு, “வரத்தான வேணும்” என்றாள் தாய்.
கடந்த மூன்று தடவைகளைப்போலல்லாமல் அந்த திங்கள் கிழமை தடைமுகாம் கதவு அவளுக்குத் திறந்தது.
தாய் முகாமுக்கு வெளியே வாசலில் நின்றுகொண்டிருந்தாள்.
சங்கவி சொன்னாள், “கிளிநொச்சி மட்டும் பஸ் விடுறதாய்ச் சொல்லியிருக்கினம். நீங்கள் வருவியளெண்டதால நான் வேண்டாமெண்டிட்டன்” என்றாள்.
“சரி. சில்வெஸ்ரரின்ர தாயை வவுனியா ஆஸ்பத்திரியில வைச்சிருக்கினம். மத்தியானத்துக்கு அக்கா சாப்பாடு கொண்டு அங்க வரும். இப்பிடியே பாத்திட்டுப் போயிடுவம்.”
[ தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
]