தமிழ் இலக்கிய உலகில் என்னை ஆட்கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இவருடனான தொடர்பு ஏற்பட்டபோது எனக்குப் பதினொரு வயது. அப்பா வாங்கித் தந்திருந்த மகாகவி பாரதியார் கவிதைகள் நூலின் மூலம் அத்தொடர்பு ஆரம்பமானது. இன்று வரை அது நீடிக்கின்றது. நான் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் என் மேசையில் பாரதியாரின் கவிதைத் தொகுப்புமிருக்கும். அவ்வப்போது தொகுப்பைப் பிரித்து ஏதாவதொரு அவரது கவிதையை வாசிப்பது என் வழக்கம். இன்று அந்த மகத்தான மனிதரின் பிறந்தநாள்.
எப்பொழுதுமே நான் பாரதியாரை நினைத்து வியப்பதுண்டு. குறுகிய அவரது வாழ்வில் அவர் சாதித்தவைதாம் எத்தனையெத்தனை!
அவரது கவிதை வரிகள் மானுடரின் குழந்தைப்பருவத்திலிருந்து முதிய பருவம் வரையில் வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவை. குழந்தைகளுக்கு அவரது வரிகள் இன்பமளிப்பவை. இளம் பருவத்தினருக்கு அவரது கவிதைகள் வடிகால்களாக இருப்பவை. சமுதாயச் சீர்கேடுகளுக்கெதிராக, அந்நிய ஆதிக்கத்துக்கெதிராகப் போராடுபவர்களுக்கு அவரது கவிதைகள் உத்வேகமளிப்பவை. தத்துவ விசாரங்களில் மூழ்கி மானுட இருப்புப் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு அவரது கவிதைகள் தெளிவையும், தேடல் மீதான ஆர்வத்தை மேலும் தொடர்வதற்கு ஊக்கமளிப்பவை. இயற்கையைச் , சூழலை , சக உயிர்களை நேசிப்பவர்களுக்கு அவரது கவிதைகள் மகிழ்ச்சியைத் தருபவை.
அவரது கவிதை வரிகள் பல மனத்தில் நிலைத்து நிற்கக்கூடியவை. இதுவரை வெளியான தமிழ்ச் சஞ்சிகைகள் பலவற்றின் தாரக மந்திரமாக இருப்பவை அவரது கவிதை வரிகள். திரைப்படங்கள், கலை நிகழ்வுகள், மெல்லிசை, கர்நாடக இசைக்கச்சேரிகள் பலவற்றில் அதிகம் பாடப்பட்டவை அவரது வரிகளாகக்த்தானிருக்க முடியும்.
குறை , நிறைகளோடு அவரது எண்ண்ங்களை, அவரது வாழ்வு அனுபவங்களை, இருப்பு பற்றிய அவரது தேடலினை அவரது எழுத்துகளில் நாம் தரிசிக்கலாம். தான் வாழ்ந்த சூழலை மீறிச்சிந்தித்த மாமனிதர் அவர். அதனால்தான் அவரால் அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயத்திலிருந்து தளைகள் நீங்கிய சமத்துவ சமுதாயத்தைப்பற்றி எண்ணி ஆடிப்பாடிட முடிந்தது. வீட்டுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களை விடுதலைபெற்ற பெண்களாக, பல்துறைகளிலும் சாதனை புரிபவர்களாக எண்ணி ஊக்குவிக்க, வாழ்த்திட முடிந்தது. எல்லைகளைக் கடந்து துன்பத்தில் உழன்று கிடந்த சக மானுடர்களைப்பற்றி, சக உயிர்களைப்பற்றி, அவர்கள்தம் , அவற்றின் துயரங்களைப்பற்றிப் பாடிட முடிந்தது; பகிர்ந்திட முடிந்தது.
ஊடக வியலாளராக, தேசிய , வர்க்க விடுதலைப் போராளியாக, கவிஞராக, கதாசிரியராக, பெண்ணுரிமைவாதியாக, இருப்பு பற்றிய தேடல் மிகுந்த தத்துவவாதியாக, இயற்கையை நேசிப்பவராக, பத்திரிகையாசிரியராகத் தன் எழுத்துகள் மூலம், வாழ்க்கை மூலம் என்னைக் கவர்ந்த , பாதித்த மகாகவி பாரதியாரின் எழுத்துகள், அவர் பற்றிய சிந்தனைகள் என் இருப்பு உள்ளவரை எனக்கிருக்கும். அவை என்னை எப்பொழுதுமே வழி நடத்திச் செல்லும். சோர்ந்திருக்கும் தருணங்களில் அவை எனக்குப் புத்துணர்ச்சியூட்டித் தென்புற வைக்கும்.
அவர் நினைவாக ஒரு பாடல்:
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று.
'நின்னைச் சரண்டைந்தேன்' பாடலைக் கேட்டு மகிழ்ந்திட: https://www.youtube.com/watch?v=xxRA3PxFkzI
* இங்குள்ள பாரதியார் படம் Tamil Eooks. Org வெளியிட்ட 'பாரதியார் கவிதைகள்' மின்னூலின் அட்டையில் இடம் பெற்றிருந்தது. அதனை நன்றியுடன் பாவிக்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.