அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.
நூலாசிரியரான வரதன் கிருஷ்ணாவின் இயற்பெயர் ஆறுமுகம் வரதராஜா. புசல்லாவைத் தேயிலைத் தோட்டமொன்றில் பிறந்து வளர்ந்தவர். சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, சுடர் ஒளி, உதயன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். பாலகுமார் தலைமையிலான ஈரோஸ் அமைப்பில் இணைந்து இயங்கியவர். பாலகுமார் இவருக்கு வரதன் என்று பெயர் வைத்தார். ஈரோஸ் அமைப்பின் மூத்த போராளிகளில் ஒருவரான கிருஷ்ணா அவர்களின் பெயரை , அவரது மறைவுக்குப்பின்னர் தன் பெயரான வரதனுடன் இணைத்துக்கொண்டார். அதன் காரணமாகவே வரதன் கிருஷ்ணா என்று அழைக்கப்படத்தொடங்கியவர்.
இச்சிறு நூல் விரிவான ஆய்வு நூலல்ல. ஆனால் இத்துறையில் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் எவரும் படிக்க வேண்டிய நூல்களிலொன்று. கூடவே மலையக மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றை, இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் மலையக மக்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டும் நூல் என்ற வகையிலும் முக்கியமானது.
பொதுவாக மலையகத்தமிழ் மக்களின் அரசியலைத் தனியாக வைத்துப்பார்ப்பதும், அது மலையக அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படுமொன்று என்று கருதுவதும் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களின் சிந்தனைப்போக்கு. ஆனால் இந்நூலினை வாசிக்கும் எவரும் அச்சிந்தனையிலிருந்து நிச்சயம் விடுபடுவர். எவ்வளவு தூரம் மலையகத்தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் தம் பங்களிப்பை ஆற்றியிருக்கின்றார்கள் என்பதை இந்நூல் தெளிவாகப் புரிய வைத்திருக்கின்றது. நாடு சுதந்திரமடைந்திருந்த போது வாக்குரிமை, பிரசாவுரிமை பெற்றிருந்த மலையகத்தமிழர்களின் அவ்வுரிமைகள் நாட்டின் முதற் பிரதமரான டீ.எஸ்.சேனநாயக்க அரசால் பறிக்கப்பட்டது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் துணை நின்றது. சூழ்நிலை இவ்விதமிருந்தும் மலையகத்தமிழ் மக்கள் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அது முக்கியமாக நினைவு கூரப்பட வேண்டியதொன்று.
இச்சிறு நூல் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்துகிறது.அதன் காரணமாகப் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தகவல்களைத் தருகின்றது. அவற்றில் முக்கியமானவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:
1.மலையகத்தமிழ் மக்களின் அசியல் வரலாற்றை, அரசியல் கட்சிகளின் பரிணாம வரிலாற்றை வெளிப்படுத்துகிறது. இலங்கை இந்திய காங்கிரஸ். அதிலிருந்து உருவான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசியக் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தந்தை செல்வா ஆரம்பித்த கட்சியும் தோல்வியில் முடிந்த அதன் வரலாறும் பற்றிய தகவல்கள்.
2. இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் , மலையகத்தமிழர்களுக்குக் கட்டடக்கலைஞர் டேவிட் ஐயா , மருத்துவர் இராசசுந்தரத்துடன் இணைந்து உருவாக்கிய 'காந்தியம்' அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள்.
3. இலங்கைத் தமிழர் விடுதலைக்காக ஆயுதமேந்திய ஈரோஸ், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆயுதப்போராட்டச் செயற்பாடுகள், மற்றும் இந்திய சமாதானப்படையினரின் காலத்தில் அவற்றின் ஆயுதத்துடன் கூடிய அரசியற் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள்.
4. ஈரோஸ் அமைப்பின் மலையகத்தில் நிகழ்த்தப்பட்ட ஆயுதரீதியிலான தாக்குதல் முயற்சிகள் பற்றிய தகவல்கள்.
5. ஈரோஸ் அமைப்பில் இணைந்த மலையக இளைஞர்களின் இலங்கை, இந்தியாவில் ஆயுதப்பயிற்சிச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள்.
6. ஆரம்பத்தில் முதலாளிகளும், செல்வம் மிக்க வர்க்கத்தினரின் கைகளில் எடுக்கப்பட்ட மலையகத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் கலை,இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள்.
7. ஶ்ரீமா அம்மையாரின் காலத்தில் திட்டமிட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட மலையகத்தமிழர்களின் நிலை, காணிச்சுவீகரிப்ப்பு (அவரின் உறவினரின் நலன்களை முன்னிட்டு) செயற்பாடுகள், எதிர்த்துப்போராடிய, பலியாகிய மலையக மக்கள் பற்றிய தகவல்கள், மற்றும் காலத்துக்காலம் இவ்விதமாகப்போராடியவர்கள், போராட்டச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள்.
8. சண்முகதாசன் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் அடிப்படையில், இந்திய நக்சலைட் பாணியில் உருவாகிய மலையக மக்களின் ஆயுதப்போராட்ட அமைப்பான 'கீழைக்காற்று இயக்கம்' பற்றியும், அதன் முடிவு பற்றியுமான தகவல்கள்.
9. தென்னிலங்கைச் சிறைகளில் வைக்கப்பட்ட மலையகத்தமிழ் இளைஞர்கள் பற்றிய தகவல்கள். சிறைக்கைதிகள் மீது புரியப்பட்ட வன்முறைகள் பற்றிய தகவல்கள்.
இவ்விதம் கூறிக்கொண்டே செல்லலாம். இவ்விதம் மலையகத்தமிழ் மக்களின் சமூக, அரசியல் மற்றும் கலையிலக்கியச் செயற்பாடுகளைப்பதிவு செய்யும் நூலில் அவை மேலோட்டமாகத் தகவல்களாகத்தாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவான ஆவுகளின் அடிப்படையில் அவை பதிவு செய்யப்படாவிட்டாலும் , ஒரு காலகட்டத்தில் இவ்விதமான போராட்ட நடவடிக்கைகளில் செயற்பட்ட ஒருவரின் வாக்குமூலம் என்னும் அடிப்படையில் இந்நூலுக்கு முக்கியத்துவமுண்டு. இவற்றின் அடிப்படையில் விரிவான ஆய்வு நூலொன்று எழுதவதற்கான தேவையினை இச்சிறுநூல் வலியுறுத்தி நிற்பதுடன் , ஆரம்பித்து வைத்திருக்கின்றதென்றும் கூறலாம்.
அதே சமயம் சில விடயங்களைச் சுட்டிக்காட்டவும் வேண்டும். வெண் சுவரில் கரும் புள்ளியென இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலொன்று என் கவனத்தை ஈர்த்தது. அது இந்நூலின் பக்கம் 40இல் வெளியாகியுள்ளது:
"காந்தியம் உருவாகக் காரணகர்த்தாவாக இருந்தவர் வைத்தியர் ராஜசுந்தரம்"
இது தவறான கூற்று. காந்தியச் சிந்தனைகள் கட்டடக்கலைஞர் டேவிட் ஐயாவுக்கு அறுபதுகளிலேயே இருந்தது. அதற்காகவே அவர் நாவலர் பண்ணையை வாங்கி வைத்திருந்தார். அதுவே எழுபதுகளில் காந்தியப் பண்ணைகலிலொன்றாக உருவெடுத்தது. அதனால்தான் காந்தியம் என்னும் பெயர் அமைப்புக்குச் சூட்டப்பட்டது. நூலிலுள்ள இக்கூற்றிலுள்ள முக்கியமான தவறு டேவிட் ஐயாவின் பெயரைக்குறிப்பிடாமல் மறைத்திருப்பது. டேவிட் ஐயாவுடன் இணைந்து வைத்தியர் காந்திய அமைப்பில் இயங்கினார் என்றால் அது பொருத்தமான கூற்றாகவிருந்திருக்குமென்பது என் அபிப்பிராயம்.
இத்தருணத்தில் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மலையகத்தைச் சேராத தமிழ் எழுத்தாளர்கள் பலர் குறிப்பாக எழுத்தாளர்களான நந்தி, புலோலியூர் சதாசிவம், ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான தி.ஞானசேகரன், இலங்கை முற்போக்கு இலக்கிய முன்னோடிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி , அ.செ.முருகானந்தன் போன்றோர் தமது படைப்புகள் மூலம் மலையக இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அவற்றையும் நினைவு கூர்ந்திட வேண்டும். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியரும் , எழுத்தாளருமான அந்தனி ஜீவா அவர்கள் தனது அ.ந.க பற்றிய , தினகரனில் வெளியான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்ப்பிடுவார்:
"கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்.... . "இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகளை வைத்து 'களனி வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 'களனி வெள்ளத்திற்கு' முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. 'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின் பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியது..... தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச் சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்.:
அ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' , அ.ந.க கவீந்திரன் என்னும் பெயரில் கே.கணேஷ், கே.ராமநாதன் வெளியிட்ட 'பாரதி' சஞ்சிகையில் எழுதிய 'தேயிலைத் தோட்டத்திலே..' போன்ற கவிதைகள் முக்கியமானவை. இதுபோல் மலையகப்படைப்பாளிகள் பலர் குறிப்பாகத் தெளிவத்தை ஜோசப், 'கொழுந்து அந்தனி ஜீவா, 'நந்தலாலா ஜோதிகுமார், திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் போன்றோர் ஆற்றிய பங்களிப்புகள், தீர்த்தக்கரை போன்ற சஞ்சிகைகள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். எதிர்காலததில் இத்துறையில் நூல்கள் எழுத விரும்புவோர் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் காரணமாக இவற்றை இங்கு குறிப்பிட்டேன்.
மொத்தத்தில் வரதன் கிருஷ்ணாவின் 'வெந்து தணியாத பூமி' இன்னும் வெந்து தணியாத பூமியாக'க் கிடக்கும் மலையகத்தின் ஆணி வேர்களான மலையகத்தமிழ் மக்களின் வரலாற்றைப்பதிவு செய்யும் முக்கியமானதொரு நூல்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.