நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படங்களிலொன்று 'வசந்த மாளிகை'. இப்படம் என்னைப்பொறுத்தவரையில் என் பதின்ம வயதுக் காலகட்டத்துக்குக் காவிச் செல்லும் காலக்கப்பல்களிலொன்று. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத கானங்கள்தாம். திரையிசைத்திலகத்தின் திறமையினை வெளிப்படுத்தும் கானங்கள்.
விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் நிறுவனம் சிவாஜியை வைத்து வெளியிட்ட திரைப்படம்தான் 'வசந்த மாளிகை'. இலங்கையில் மிகப்பெரிய வெற்றியினைப் பெற்ற திரைப்படம். வெலிங்டன், கெப்பிட்டலில் 200 நாட்களைக் கடந்து ஓடியதாக நினைவு. அக்காலகட்டத்தில் இப்படத்தை வெலிங்டன் , கெப்பிட்டல் திரையரங்குகளின் உரிமையாளரான குணரத்தினமும் விஜயா சுரெஷ் கம்பைன்ஸுடன் இணைந்து தயாரித்ததாக வதந்தியொன்றும் நிலவியது. எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.
பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளிவந்திருந்தாலும் , நடிகர் திலகத்தின் நடிப்பில் தமிழில் வெளியான 'வசந்தமாளிகை'யே மிகுந்த வரவேற்பைப்பெற்றதெனலாம்.
இத்திரைப்படத்தின் நான்கு பாடல்கள் டி.எம்.செளந்தர்ராஜன் சிவாஜிக்குப் பாடுவதாக அமைந்தவை. நடிகர் திலகமே தன் சொந்தக்குரலில் பாடுவது போலமைந்த பாடல்கள். கவிஞர் கண்ணதாசனின் அனுபவம் தோய்ந்த வரிகள் மறக்க முடியாதவை.
'இரண்டு மனம் வேண்டும்' என்று ஆரம்பமாகும் பாடலில் வரும் 'நினைத்து வாட ஒன்று. மறந்து வாழ ஒன்று' என்னும் தொடரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. கவிஞரின் கவித்துவத்தை வெளிப்படுத்துபவை. உண்மையில் காதற் பிரிவால் வாடும் எவராயினும் , அவரால் நினைக்காமல் இருக்கவும் முடியாது. அவ்விதம் நினைத்து நெஞ்சுருகாமல் இருக்கவும் முடியாது. அவ்விதம் துயரத்தால் வாடும் நிலையினை மாற்ற துயர் தரும் அக்காதலை மறந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும் என்று எண்ணத்தோன்றும். அதனைத்தான் இங்கு கவிஞர் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார். அவனது நிலைக்கு மருந்தென்ன? நிச்சயம் அவனது மனதுக்குரியவளை நினைக்க வேண்டும். ஆனால் அவ்விதம் நினைப்பு நிச்சயம் அவனது துயரை அதிகரிக்கவெ செய்யும். அதைத்தவிர்ப்பதற்கு என்ன வழி? மறப்பதுதான் நல்ல தீர்வு. ஆனால் அது சாத்தியமா? மானுடனான அவனால் முடியாது. அதனால் அவன் தான் நம்பும் கடவுளை அவ்விதம் வாழும் வகைக்கேற்ற இரு மனங்களைத் தர வேண்டுகின்றான். அவ்விதம் அவனுக்கு இரு மனங்கள் இருந்தால் ஒன்றால் நினைக்கவும் முடியும். அதே சமயம் அவ்விதம் நினைப்பதை அடுத்த மனத்தால் மறக்கவும் முடியும். இங்குதான் கவிஞரின் கற்பனைச்சிறப்பு மிக்க கவித்துவம் வெளிப்படுகின்றது. ஒரு மனமுள்ள மானுடருக்கு இவ்விதம் இரு மனங்கள் அமைந்திருந்தால் வாழ்க்கை எவ்விதமிருக்கும். ஒரு மனத்தில் ஏற்படும் துயரனைத்தையும் மறு மனத்தால் மறந்து விட முடியுமல்லவா? அவ்விதமான இரு மனித மானுடர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துயரின் பாதிப்பற்று அமைந்திருக்குமல்லவா? கவிஞரின் இரு மனக்கற்பனை இப்பாடல் வரிகளில் என்னை மிகவும் கவர்ந்தது.
இத்திரைப்படப்பாடலின் சிறப்பு பாடகர் டி.எம்.எஸ்ஸை நினைவூட்டும். இசையமைத்த கே.வி.மகாதேவனை நினைவூட்டும்., அருமையான வரிகளைத்தந்த கவிஞர் கண்ணதாசனை நினைவூட்டும். பதின்ம வயதுப் பருவத்தில் இத்திரைப்படத்தைப் பார்த்த யாழ் வெலிங்டன் திரையரங்கை நினைவூட்டும். அன்றைய யாழ்ப்பாணத்தை நினைவூட்டும். நடிகர் திலகத்தின், வாணிஶ்ரீயின் நடிப்பை நினைவூட்டும். இவ்விதம் இன்னும் பலவற்றை நினைவூட்டும் பாடல்களிலொன்று என் மனதுக்குகந்த இந்தப்பாடல்.
தெளிவான காணொளியில் இப்பாடலைக் கேட்டு,பார்த்து மகிழ : https://www.youtube.com/watch?v=wfVKQCZ57Us