டிசம்பர் 6 பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நினைவு தினம். இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளிலொருவர். இவரை நான் ஒருமுறை நேரடியாக சந்தித்திருக்கின்றேன். மொறட்டுவைப் பல்கலைகழகத் தமிழ்ச் சங்க இதழான 'நுட்பம்' இதழுக்கு ஆக்கம் நாடி யாழ் பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது சந்தித்தேன். ஆக்கம் தருவதற்கு ஒப்புக்கொண்ட அவர் அதனைத் தருவதற்கான திகதியையும் அறியத்தந்தார். பின்னர் அவர் தருவதாகக் குறிப்பிட்ட தினத்தில் தந்தார். அது மட்டுமல்லாமல், 'நுட்பம்' பிரதியை அனுப்பியபோது அதனைப் பெற்றுக்கொண்டு அது பற்றிய சுருக்கமான அவரது கருத்துகளைக்கொண்ட கடிதமொன்றினையும் அனுப்பியிருந்தார். என்னைப்பொறுத்தவரையில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய கடிதமது. இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகின்றேன்.
கூறியது போலவே குறித்த தினத்தில் படைப்புத் தந்தமை, சஞ்சிகை கிடைத்ததும் அது பற்றிய குறிப்பினை அனுப்பியமை என்னை மிகவும் கவர்ந்த அவரது பண்புகள். இன்று பேராசிரியரின் நினைவு தினம். தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைத் தந்த பேராசிரியரை நினைவு கூருவோம்.
* இங்குள்ள ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் செளந்தர். அதற்காக அவருக்கு என் நன்றி.
குமரன் சஞ்சிகையின் அஞ்சலி!
பேராசிரியர் க.கைலாசபதி மறைந்தபோது 15.12.1982 வெளியான 'குமரன்' சஞ்சிகையின் அட்டையில் பேராசிரியர் கைலாசபதியின் புகைப்படத்தை வெளியிட்டு, குமரன் அஞ்சலியை 'கண்களில் நீர். நெஞ்சில் தீ' என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கமாகவும் எழுதியவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன். அக்குமரன் இதழின் அட்டையையும், ஆசிரியத் தலையங்கத்தையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் அஞ்சலிக் கவிதை!
குமரன் சஞ்சிகையின் ஜனவரி 1983 இதழில் வெளியான கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பேராசிரியர் கைலாசபதிக்கான அஞ்சலிக் கவிதை. இக்கவிதை மூலம் பேராசிரியரையும், கவிஞர் புதுவை இரத்தினதுரையையும் நினைவு கூர்வோம். குமரன் சஞ்சிகையில் புதுவை இரத்தினதுரையின் பல கவிதைகள் வெளியாகியுள்ளன.
கவிதையிலிருந்து சில வரிகள்:
'அடியும் முடியும் அறிந்தவனின் அடிமுடியை
பொடியன்சிலர் காணப் புறப்பட்டுத் தோற்றார்கள்.
தோற்றவரைக் கூடச் சோகத்தில் மூழ்கவைத்து,
கூற்றோன் இயற்கையென்ன கொடுமதியோன் அழைத்துவிட்டான்.
பேரரசன் போனால் பிறகொருவன் வருவதுண்டு.
ஆரரசன் ஆரரசன் ஆருமில்லாப் பாழ்வெளியே
நீண்டு கிடக்கிறது. நிழல்மரங்கள் தெரியவில்லை.
ஆண்ட கைலாசின் அரியணைக்கு ஆக்களில்லை.
சிம்மாசனம் காலி சிற்றரசர் எவருக்கும்
சும்மா அதைவந்து தொடும் தகுதி கூடஇல்லை.
சிலகாலமல்ல் சிலவேளை நூற்றாண்டு
பலகாலம் கைலாச பதியின் இடம் வெளியாய்
இருக்கும் அதைநிரப்ப எவருமில்லை எவருமில்லை.
தொம்சன்முதல் எங்கள் துரையப்பா பிள்ளைவரை
அருணகிரி தொடக்கம் அல்தூசர் வரையாவும்
ஆய்ந்தறிந்த ஆழம் அளவிட்ட மேதையவன்
சாயும்வரை அந்தச் சந்தனக்கை ஓயவில்லை.