நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
அபத்தம் (இணைய இதழ்) வைகாசி 2023 இதழில் வெளியான கட்டுரை.
'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு.
நவீனக் கட்டடக்கலையின் முக்கிய சிந்தனைகள் சிலவற்றினை சாதாரண வாசகருக்கும் அறியச்செய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம். நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function), ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture), கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe) ''குறைவில் நிறைய (Less is more) ' போன்ற கோட்பாடுகளையும் மற்றும் லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம். இவை நவீனக் கட்டடக்கலைக்கு வளம் சேர்த்த சிந்தனைகள். இவற்றைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களைத் தமிழில் தருவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
லூயிஸ் சல்லிவன் (Louis Sullivan)
1. லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.
இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.