ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்'. வினோபா பாவேயின் பூதான இயக்கத்தூண்டுதலால் வெளியான முதலாவது தமிழ் நாவல்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் ஜெகசிற்பியனின் நாவலான 'மண்ணின் குரல்' பற்றி நான் அறிந்தது தற்செயலானது. என் பால்யப் பருவத்தில் கல்கியில் தொடராக வெளியான் சமூக நாவல்களான கிளிஞ்சல் கோபுரம், ஜீவ கீதம், காணக்கிடைக்காத தங்கம், சரித்திர நாவல்களான 'பத்தினிக்கோட்டம்' , மற்றும் 'நந்திவர்மன் காதலி' (ராணி முத்து) மூலம் எனக்கு அறிமுகமானவர். ஆனால் இந்த நாவலான 'மண்ணின் குரல்' கல்கியில் வெளிவராத நாவல். மலேசியாவிலிருந்து வெளியான 'தமிழ் நேசன்' பத்திரிகையில் வெளியான தொடர் நாவல்.
எட்டாம் வகுப்பிலிருந்து யாழ் இந்துக் கல்லூரிக்குக் கற்கச் செல்லவிருந்ததால் ,அப்போது படித்துக்கொண்டிருந்த வவுனியா மகா வித்தியாலய நண்பர்கள் இருவருடனும் ,தம்பியுடனும் நகரிலிருந்த அஜந்தா ஸ்டுடியோவுக்குப் புகைப்படமொன்று எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். அஜந்தாவுக்கு அருகிலேயே நாங்கள் வழக்கமாகப் புத்தகங்கள் வாங்கும் ஶ்ரீ முருகன் புத்தக்கடை இருந்தது. அஜந்தாவிலும் வாசலுக்கு அருகிலிருந்த 'கவுண்ட'ரிலிருந்த கண்ணாடிக் 'காட்சிப்பெட்டி'க்குள் ஜெகசிற்பியனின் நாவல்கள் சிலவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதில் என் கவனத்தை ஈர்த்தது 'மண்ணின் குரல்' நாவல். அன்று வாங்கி வாசிக்கும் நிலையில் நானில்லை. அன்றிலிருந்து இன்று வரை அந்நாவலை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.