பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில். ]
2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.
3. சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விரியும் வரிகளைப் படிக்கையில் நாமும் அவ்வனுபவங்களை அடைவோம். பொதுவாக நாம் அனைவரும் அவ்வப்போது அடையும் அனுபவங்களை அவற்றில் இனங்கண்டு மேலும் மகிழ்ச்சியடையோம். மீண்டுமொரு தடவை அவ்வனுபவங்களில் எம்மை நனவிடை தோய வைத்து விடும் தன்மை மிக்கவை இவரது கவிதைகள்.
4. ,மானுட அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவை இவரது கவிதைகள்.
5. நான் இயற்கைப் பிரியன். இந் 'நிலம் என்னும் நல்லாள்' கவிதையில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வர்ணனை என்னை இயற்கை வளம் கொழிக்கும் வன்னி மண்ணில் வாழ்ந்த என் பால்ய பருவத்துக்கே கொண்டு சென்று விட்டன.
ஆசிரியர் என் அயலவர் . சிறிய கடலே( நீரே ) வேலணையிலிருந்து என் கிராமத்தை , அராலியைப் பிரிக்கிறது . நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான். முன்பும் , அராலித்துறை போக்குவரத்துக்கு வள்ளப்பாதையாக விளங்கி இருக்கிறது . காலனிக்காலத்திலிருந்தே அரசாங்கம் தரைவழிப்பாதை அமைக்கும் திட்டத்தை வைத்திருக்கிறது புங்குடு தீவு (கைவேப்) பாதையின் நீட்சி செயல் வடிவம் பெறவில்லை . கடலில் கல்லைக் கொட்டி பண்ணை வீதி , காரை வீதி , புங்குடுதீவு வீதி போன்றவை என்று அமைக்கப்பட்டன ? அப்படி அராலித்துறை வீதி ஏன் அமைக்கப்படவில்லை ? விபரம் தெரியவில்லை . பண்ணைப்பாலம் என்கிறார்கள் . அங்கே பாலம் ஒன்றும் இல்லை . பாலங்கள் இல்லாது இருப்பதால் தான் இவை வற்றுக்கடலாகிக் கொண்டு செல்கிறதா ? அந்த ஃபைலை , மகிந்தா தன் ஆட்சியில் எடுத்து தூசி தட்டி பார்த்திருக்கிறாரோ ? என்று தோன்றுகிறது .
1985 இல் பண்ணை வீதியை , காரைநகர் ஃபெர்ரி பாதையை இலங்கைப்படையினர் மூடி விட வேலணை , புங்டு ...நயினை மக்கள் தம்தேவைகள்....வள்ளங்களின் மூலம் அராலித்துறைக்கு வந்து ...கல்லுண்டாய் பாதையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லத் தொடங்கினர் . வள்ளம் , பெரு வள்ளமாகி , படகுகளாகி ...பிறகு , புளட் அமைப்பினால் .சிறிய ஃபெர்ரி போன்ற மிதவையும் கூட தயாரிக்கப் பட்டு மிதக்க விடப்பட்டது , அதில் , மோட்டர் சைக்கிள் ... கறுவாட்டுச்சிப்பம் என கணிசமானளவில் கொண்டுச் செல்வதில் முன்னேற்றம் கண்டவர்கள் . மிதவையில் ட்ராக்டர் , கார்கள் கூட ஏற்றிச் செல்ல தலைப்பட்டனர் . அந்த நேரமே நானும் ...இது சிறிய கடல் தான் என்பதை அறிந்தேன் . இடைப்பட்ட கடலில் பெரிதும் கழுத்தளவு நீர் உயரம் தான் என்பது என்னையும் ஆச்சரியப்படுத்தியது . பிறகு , அவ்வூரவருக்கு நானும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனேன்.
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தைப் பேச வைப்பதும்தான் கலை, இலக்கியத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். இருக்கவும் வேண்டும். அந்தவகையில் அண்மையில் நான் மெல்பனில் பார்த்து, வியந்த Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகம், எங்கள் சமூகத்தைப் பேசியிருக்கிறது. எங்கள் சமூகம் எனச்சொல்லும்போது, இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப்பேசும் மூன்று சமூகத்தினதும் அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்கையை பேசியிருக்கிறது. அத்துடன் இனக்கலவரத்தால் தாயகம்விட்டு அவுஸ்திரேலியா வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வுக்கோலத்தையும் தலைமுறை இடைவெளியினூடாக சித்திரிக்கிறது.
வாக்கு வங்கிக்காக மதம், மொழி, இனம் சார்ந்து அரசியல் நடத்தி, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வளமான நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கியவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் பலிக்கடாவானார்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உருவான வாரிசு அரசியல், மற்றும் அதிகாரப் போட்டியினால், இக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தொழிலாளிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பெளத்த பிக்குகளை இணைத்தவாறு , அதற்கு ஐம்பெரும் சக்திகள் ( பஞ்சமா பலவேகய ) எனப்பெயர் சூட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தார். 1956 ஆம் ஆண்டு அவர் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, பிரச்சினை உக்கிரமடைந்தது.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம்.
அ.ந.க இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் தடம் பதித்தவர். குறைவாக எழுதியிருந்தாலும் அவரது கவிதைகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் இ.முருகையன் அ.ந.க.வின் இக்கவிதை பற்றிக்குறிப்பிடுகையில் "அ.ந.கந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்" என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது.
“வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் இல்லை. மனிதர் செய்யும் இடையூறுகளை கடந்து அது புதிய பரிமாணங்களைக் கண்டறிந்து வாழ்ந்துகொண்டேயிருக்கும். இதைப்போலவே மரணசாசனம் என்பதும் ஒரு ஆதங்கம். நதிகளை பாதுகாப்பதற்கான எச்சரிக்கை. ஆனால், நதி இன்னமும் மரணமுற்று விடவில்லை. மரணம் அடைந்துவிட்டதாக மனம் கொந்தளிக்கிறது. அவ்வளவுதான். “ என்று, வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்ற நூலை எழுதியிருக்கும் தோழர் சி. மகேந்திரன், ஏன் இதனை எழுதினேன் என்பதற்கான காரணத்தை சொல்கிறார். தலைப்பினைப் பார்த்ததும், இந்த நூல் ஏதோ கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவிருக்குமோ ? என்ற எண்ணம்தான் வாசகர்களுக்கு முதலில் வரக்கூடும். ஆனால், தமிழக நதிகளின் வரலாற்றையும் சுற்றுச்சூழலினால் மாறிவிட்ட அதன் கோலங்களையும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களின் ஊடாக ஆவணமாகவே இந்நூல் பதிவுசெய்து வைத்திருக்கிறது. நூலாசிரியர் , இந்தநூலின் 74 ஆவது அங்கத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கும் ஆதங்கத்தையே இந்தப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுவரையில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூல் இந்திய சாகித்திய அகடமியின் தெரிவுக்குழுவுக்கு ஏன் எவராலும் பரிந்துரை செய்யப்படவில்லை..? என்ற ஆதங்கம்தான் எனக்கு வந்தது. இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழக நதிகளின் வரலாறு ஏற்கனவே ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் பிரபல ஓவியர் மருது வரைந்த வண்ணப்படங்களுடன் தொடராக வெளியாகியது.
1
ஓர் இருநூறு வருடகால நகர்வுக்குப்பின், இன்று மலையகம், ஒரு அரசியல் சந்தியில் நிற்கிறது. இதில் தலையான அம்சமாக, வெகுத்தூக்கலாய்த் தெரிவது, மலையக மத்தியத்தர வர்க்கத்தின் பெருவாரியான எழுச்சியாகும். இரா.சிவலிங்கம் காலப்பகுதியிலும் அல்லது அதற்கு முன்னதான திரு.வேலுப்பிள்ளையின் காலத்திலும் அல்லது அதற்கு முன்பாக திரு.ராஜலிங்கம்-சோமசுந்தரம் அல்லது கோ.நடேசய்யர் காலப்பகுதியிலும் இது நடந்திருக்கலாம். ஆனால், இன்று, சாரம்சத்தில், நடந்தேறும், மலையக மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் எழுச்சியும் அது ஏற்படுத்தும் இன்றைய பாதிப்புகளும் சற்றே வித்தியாசம் கொண்டவை.
2
மலையக மத்தியத்தர வர்க்கமானது, இன்று, தனக்கென்ற அரசியலையும் தனக்கென்ற இலக்கியத்தையும் தன்வழியே சமைத்துக்கொள்ள விரும்புவதாய்த் தெரிகின்றது. மலையக அரசியலிலும் மலையக இலக்கியத்திலும் இது செலுத்த முற்பட்டுள்ள தாக்கம் எம் அனைவரினதும் ஆழ்ந்த கவனத்தைக் கோருவதாக உள்ளது. இது தொடர்பில் இரு உதாரணங்களைப் பார்க்கலாம் :
ஒன்று, எமது திரு.சிவலிங்கம் அவர்களால் (சாகித்திய ரத்னா) அட்டனில் ஆற்றப்பட்ட உரை. இது, இக்கருத்தை ஒரு தளத்தில் வெளிப்படுத்துவதாக இருந்தது. (வீரகேசரி : 26.05.2024) மற்றது, வேலுப்பிள்ளையின் இலக்கியம் பொறுத்து இன்று தரப்படும் புதிய வியாக்கியானங்கள். இவை, எமது மேற்படி விடயத்திற்கு உவப்பானவையே ஆகும்.
1
ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இருபத்துமூன்று பெண் படைப்பாளிகளின் நாற்பத்திரண்டு கதைகள் அடங்கிய இத் தொகுப்பு, அதன் தொகுப்பாகிய தேவை விதந்துரைக்கப்பட்ட அளவுக்கு, அதன் உள்ளுடன் விசாரிக்கப்படவில்லை. அது தொகுப்பின் சிறுகதைகள் சமகால இலக்கிய கட்டுமானம் சார்ந்ததும், விஷயம் சார்ந்ததுமான காத்திரத்தன்மை அற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.
இலங்கைப் படைப்புகள் குறித்து விசேஷ கவனம் எனக்கு இருந்தவகையில் ஏப்ரலில் நூல் கையில் கிடைத்ததுமே வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பில் அதன் மொழி சார்ந்ததும், கட்டுமானம் சார்ந்ததுமான கூறுகளின் பின்னடைவு இருந்தபோதும், தொகுப்பு குறித்து எழுதவேண்டுமெனத் தென்பட்டது. ஆயினும் எழுத காலம் தாழ்ந்ததில் நான் மதிப்புரை செய்த பல நூல்களுக்கும்போல ஓர் இரண்டாம் வாசிப்பைச் செய்ய நேர்ந்தது. அப்போது அடைந்த வாசிப்புச் சுகம் அலாதியானது. கட்டாயம் அதை எழுதவேண்டுமென்ற தூண்டுதல் மேலும் வலுத்தது.
வினாக்கள் ?
உனது குற்றங்களை மன்னித்து
உன்னை ஏற்றுக் கொண்டவரை
குற்றம் சுமத்தி
தண்டிப்பது என்ன நியாயம் ?
யேசுகள் என்றும்
தண்டிக்கபடுவது ஏனோ ?
சிவன் பன்றிக்குட்டிகளுக்கு
தாய்பன்றியாகி பால் கொடுத்தது ,
இராவணன் தவவேடம் தாங்கி
சீதையை சிறை வைத்தது ,
அன்னை தெரேசா கருவுற்று
தாயாகாமல் இருக்கலாம்
கருணையுற்று அனைவருக்கும் அன்னை ஆனார் .
யேசுநாதர் மக்களுக்காக சிலுவை சுமந்தார் .
உறவுகள் ....துர்பிரயோகம் !
கருணை ?
அன்பு ?
சுயநலம் . துரோகம் ...ஏன் , ஏன் ...?
ரெகே (Reggae) இசையென்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடகர் பாப் மார்லி (Bob Marley) . அறுபதுகளின் இறுதியில் ஜமைக்காவில் உருவான இசை வடிவம் இது. தனித்துவமான 'ரிதம்' கொண்ட இசை. சம உரிமை, சமூக நீதி, அடக்குமுறைகளுக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்றவை ரெகே இசையின் சமுதாயப் பிரக்ஞையினை வெளிப்படுத்தினாலும் காதல், ஆன்மீகம், உறவுகள் பற்றியுமிருக்கும்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.
- 18 - 06 - 2015 ஆம் ஆண்டில் இந்த விமர்சனம் என்னால் எழுதப்பட்டது. தன்னுடைய " வன்னி " நாவலை திரு. கே. எஸ் . சுதாகர் மூலமாக எனக்கு அனுப்பி , விமர்சனம் எழுதுமாறு எம்மை விட்டுப் பிரிந்த ஆளுமை பெரியவர் திரு. கதிர் பாலசிங்கம் தொலைபேசி வாயிலாகக் கேட்டுக் கொண்டார். அவரின் அன்பான வேண்டுகோளினை ஏற்று எழுதியதே இந்த விமர்சனம் என்று அவர் இல்லா நிலை யில் இரங்கல் செய்தியாய் பகிர்ந்து கொள்ளுகின்றேன். அவரின் பிரிவினால் வாடும் பிள்ளைகள் , மருமக்கள் , பேரர்கள் , உற்றார் , உறவினர் அனைவருக்கும் ஆறுதலையும் , தேறுதலையும் , தெரிவித்தும் கொள்ளுகின்றேன். அவரின் நூல்களை அனைவரும் படிக்கும் வண்ணம் அவரின் பிள்ளைகள் செய்வதே அவரின் ஆன்ம ஈடேற்றத்துக்குச் சாந்தியை அளிக்கும். -
வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையா னது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்று விடும். பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால் 'வன்னி ' நாவல் அப்படியானதன்று. தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என் பது எனது எண்ணமாகும்.
மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருப க்கச் சார்பானதாகும். வன்னி நாவலையும் தமிழரின் மஹாவம்சமாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் பழைய மஹாவ ம்சத்துக்கும் இதற்கும் பாரியவேறுபாடு. வன்னி நாவல் உண்மையை சொல்லி நிற்கிறது. ஊத்தைகளையும் காட்டுகிறது. உலுத்தர்களையும் காட்டுகிறது. எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது. இது இந்த நாவலின் சிறப்பு எனலாம்.
நாவலின் முக்கிய பாத்திரம் மேஜர் சிவகாமி. அந்தச் சிவகாமியே எம்மை எல்லாம் காடு, மேடு,போர்க்களம் , கொழும்பு , என்று கூட்டிச்செல்வதோடு குடும்பம் , மகிழ்ச்சி , இன்பம் , துன்பம் ,பிரிவு , வஞ்சகம் , சூழ்ச்சி , நட்பு , நம்பிக்கைத் துரோகம் , மிருகத்தனம் , மனிதத்தன்மை , இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லுகின்றார்.
பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் திருப்பூர் சக்தி விருது 23/6/24 ஞாயிறு மாலை மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது
தலைமை: கே பி கே பாலசுப்ரமணியம் ( முத்தமிழ்ச்சங்கம்). அறிமுக உரைகள் : சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி ரவி, தூரிகை சின்னராஜ். சிறப்பு விருந்தினர்: சமூக சேவகி ஆர். ராஜம்மாள் அவர்கள். முன்னிலை: சத்ருக்கன், ராஜா மற்றும் மக்கள் மாமன்ற நிர்வாகிகள்.
"இந்திய சமூகத்தில் மன நோய் அதிகரித்து வருகிறது. மன அழுத்தங்களுடன் பலர் வாழ்கிறார்கள். அவர்களின் பாரங்களை இறக்கி வைக்கும் இடமாக மன நல ஆலோசகர்கள் அதிகரித்து வருகிறார்கள். குடும்பம் என்பது பாரத்தை இறக்கி வைக்கக் கூடியது, அவ்வகை குடும்பச்சூழல்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீடு என்பது பாதுகாப்பானது. மன அழுத்தங்களிலிருந்து விடுபட இலக்கியம் சிறந்த கருவி.. வாசிப்பும் மஅழுத்தங்களிலிருந்து நம்மைப் பாதுக்கும் கலங்கரை விளக்கம் " என்று சமூக சேவகி ராஜம்மாள் விழாவில் குறிப்பிட்டார்.
லண்டனில் எஸ். அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலும் அவரின் புதல்வி நவஜோதி ஜோகரட்னத்தின் ‘பூப்பும் பறிப்பும்’ சிறுகதைத் தொகுப்பும்; கடந்த வாரம் (8.6.2024) ஹரோ ஐயப்பன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலுக்கு தலைமை தாங்கிப் பேசிய எழுத்தாளர் ந. சுசீந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில்: ’எஸ். அகஸ்தியர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஜேர்மனியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கிய மகாநாட்டில் அகஸ்தியர் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்தியதில் நான் பெருமைப்படுகின்றேன். அவரது நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுகள் என்பன ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஈழத்து முற்போக்கு எழுத்தாளரான மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அரசன்பே சரித்திரத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஆய்வு நூல் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எளிமையாகப் பழகவல்ல அகஸ்தியர் அவர்கள் வாழ்நாளின் இறுதிக் காலங்கள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த இலக்கியப் பெருமகன் ஆவார். அவர் மறைந்த இருபத்தியொன்பது ஆண்டுகள் கழித்து இந்நூல் அவரது புதல்வி நவஜோதி ஜோகரட்னம் வெளியிடுவது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது. கனடாவின் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப்லாங்க் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு நாள் என்பது உட்பட பல காரணங்களுக்காக இந்த திகதி சட்டரீதியான விடுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் 2001 ஆம் ஆண்டு முதல் வடமேற்குப் பிரதேசங்களில் ஒரு சட்டப்பூர்வ பிராந்திய விடுமுறையாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் யூகோன் பகுதியில் இருந்தும் கொண்டாடப்படுகிறது. கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிகழ்வை தேசிய பழங்குடி மக்கள் தினம் என்று மறுபெயரிடுவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் ஏனைய பகுதிகளுக்குச் சட்டரீதியான விடுமுறை கொடுக்கப்படவில்லை.
இந்த நாள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது. இலங்கையில் சிறுபாண்மை இனத்தவரான ஈழத்தமிழர்கள் யுத்தம் என்ற போர்வையில் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது, அவர்கள் அனாதைகளாக போவதற்கு இடமின்றித் தவித்த போது, கனடியப் பழங்குடி மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டித் தங்கள் நிலத்தில் எங்களைக் குடியிருக்க வைத்தார்கள். இன்று கனடியத் தமிழர்கள் அரசியல் பொருளாதாரத் துறைகளில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அன்று அவர்கள் பெருந்தன்மையோடு எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்றதேயாகும்.
அசோக மன்னரால், இலங்கைக்கு அரசமரக் கன்றுடன் அனுப்பிவைக்கப்பட்ட அவரது புதல்வி சங்கமித்திரை பற்றி வரலாற்றில் அறிந்திருப்பீர்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் அன்று அன்பையும் அகிம்சையையும் இலங்கைக்கு போதிக்க வந்த சங்கமித்திரை பற்றி, இந்தப்பதிவில் நான் ஏன் நினைவூட்டுகின்றேன் ? காரணம் இன்றி காரியம் இல்லை. இலங்கையில் இன முரண்பாடு தோன்றி, அது ஆயுதப்போராட்ட வடிவமெடுத்தபோது நெருக்கடிகள் உக்கிரமடைந்தன. 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் வடமராட்சிப் பிரதேசத்தில் விமானங்கள் குண்டுகளை பொழிந்து அப்பாவிப்பொது மக்களின் உயிர்களை பலியெடுத்தன. இந்தத் தாக்குதல் சம்பவத்தை Operation Liberation என்று அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர். அவ்வேளையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக இந்திய விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி வடமராட்சி வான்பரப்பில் பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வீசியது.
இதனைக்கண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் மட்டுமன்றி அரசும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையையடுத்து வடமராட்சித்தாக்குதல் நிறுத்தப்பட்டு, ஜே. ஆரின். அரசு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதனால் பிறந்த குழந்தைதான் இலங்கை – இந்திய ஒப்பந்தம். அதனால், 13 ஆவது திருத்தச்சட்டம் என்ற மற்றும் ஒரு குழந்தையும் பிறந்தது. எனினும் இந்தக்குழந்தைகள் வளர்ச்சியடையவில்லை. பிறந்த இடத்திலேயே நிற்கிறது.
நீர்கொழும்பில் முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்களா..? என்று இன்றும் கேட்கும் தமிழர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். இதுபற்றி ஏற்கனவே நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன். எனது இந்த முதல் சந்திப்பு தொடரில் இடம்பெறும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் பெரிய தந்தையார் சண்முகம் கதிர்வேலு விஜயரத்தினம் ( எஸ். கே. விஜயரத்தினம் ) அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரின் நகரபிதாவாக ( மேயர் ) இருந்தார் எனச்சொன்னால், இக்கால தலைமுறைத் தமிழர்கள் நம்புவார்களா..? அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியிலமைந்திருந்த இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தலைவராக இருந்தபோதுதான் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின் போது எனக்கும் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்து , விவேகானந்தா வித்தியாலயம் அன்று தொடங்கியது. அவரது தம்பி எஸ். கே. சண்முகமும் புதல்வன் ஜெயம் விஜயரத்தினமும் நீர்கொழும்பு மாநகர சபையில் அந்த மூன்றாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். 32 தமிழ்க்குழந்தைகளுடன் ஆரம்பமான அந்த வித்தியாலயம்தான் பின்னாளில் அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் வடமேற்கில் இன்றும் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாகத் திகழுகின்றது.
- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் சக்தி விருது தங்களின் இலக்கியப் பணிக்காக வழங்கும் விழா பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.தங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். சக்தி விருது 2024 ( 20ம் ஆண்டு )
எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர். அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்). தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.
பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும். பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம் (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது.
அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். இந்நாளில் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணின் நினைவுகள் எழுகின்றன. எந்தை, தாயுடன் கழித்த இனிய தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.
என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா (நடராஜா நவரத்தினம் - நில அளவையாளராகப் பணி புரிந்த காலத்தில் அவரைப் பலர் 'Tall Nava' என்று அறிந்திருக்கின்றார்கள்). தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணன், பி.ஜி வூட்ஹவுஸ், டி.இ.லாரண்ஸ் ('லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia), டால்ஸ்டாய் என்று பலரின் நூல்கள் அவரது 'புக் ஷெல்வ்'வில் இருந்தன.
கல்கி, குமுதம், விகடன், ராணி, ராணி முத்து, பொன்மலர், பால்கன், சுதந்திரன்ம், ஈழநாடு, தினமணி, The Hidnu, கலைமகள், மஞ்சரி, பொம்மை, பேசும்படம், தினமணி, தினமணிக்கதிர் என்று தமிழில் வெளியான வெகுசன சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளால் வீடு நிறைந்து கிடந்தது. ஒரு தடவையாவது வாசி என்று அவர் கூறியது இல்லை. சூழல் எம்மை வாசிக்க வைத்தது. போட்டி போட்டு வாசித்தோம்.
ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள் அடங்கிய முழுத்தொகுப்பு, புலியூர்க்கேசிகனின் சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்கள் இவை எப்போதும் வீட்டில் இருக்க வேண்டிய நூல்கள் என்று வாங்கி வைத்தார். ஆரம்பத்திலேயே இவற்றுடனான தொடர்பு ஏற்படக் காரணம் அப்பாவின் இப்போக்குத்தான். அப்பாவுக்கு இராமாயணம், மகாபாரதத்தின் மீதிருந்த ஈடுபாடு எதுவரை இருந்ததென்றால் எங்கள் அனைவருக்கும் பெயர்கள் வைக்கும் அளவுக்கு இருந்தது. கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி, தேவகி இவை அனைத்தும் அந்த ஈடுபாட்டின் விளைவுதான்.
- தெளிவாகப் பார்ப்பதற்குப் படத்தை ஒரு தடவை அழுத்தவும். -
வென்மேரி அறக்கட்டளையின் ஆற்றல்மிகு ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா 2024 கனடா. - தகவல்: வென்சிலாஸ் அனுரா, நிறுவனர் வென்மேரி அறக்கட்டளை -
வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா கனடாவில் Audley Recreation center 1955 Audley Rd, Ajax, ON L1Z 1V6 என்னும் இடத்தில் 11/08/2024 அன்று பி.ப. 2 மணிக்கு நடைபெற உள்ளது. தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
கனடா வென்மேரி அறக்கட்டளையின் மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ளது. தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு மதிப்பளித்து, பாராட்டி, கெளரவித்து ஏனையோர்க்கு முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாக வரலாற்றில் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே வென்மேரி அறக்கட்டளை. மேற்படி அறக்கட்டளையின் முதலாவது விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு யாழ் . நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டுக்கான இரண்டாவது சர்வதேச விருது வழங்கும் விழா பிரான்ஸில் நாட்டில் நடைபெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி 2024ம் ஆண்டுக்கான மூன்றாவது சர்வதேச விருது வழங்கும் விழா கனடாவில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு Audley Recreation center Ajax என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
எழுத்துலகில் சிகரம் தொட்டு பொன்விழாவைக் கொண்டாடிய திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு: ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’.
சிறுகதையோ, நாவலோ அல்லது கட்டுரையோ வாசித்து முடித்தபின்பு பல எண்ணங்கள் வாசகரின் மனதில் உருவாகும்.
சில சமயங்களில் மகிழ்ச்சியாய் இருக்கும். சிரிப்பு வரும். முடிவு சில சமயங்களில் துக்கத்தைக் கொணரும். தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதோ பற்பல உணர்வுகள் ஒருசேர எம்மைச் சூழ்ந்து கொள்ளும்.
நிறையவே எம்மைச் சிந்திக்கத் தூண்டும். எமது கடந்த கால வாழ்வில் நாம் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எண்ணங்களை மீட்டிப் பார்க்கச் சொல்லும். எமது வாழ்வின் அர்த்தத்தை தேடச் சொல்லும்.
கிருஸ்ணபகவானை தனது பக்தியால் அருச்சுனன் கட்டிப்போட்டது போல தாமரைச்செல்வி அவர்களின் படைப்புகள் வாசகர்களாகிய எம்மைக் கட்டிப்போட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது.
ஒரு பொழுதுபோக்காக வாசித்து முடித்துவிட்டு எம்பாட்டில் கடநது செல்வதற்கு அவரது எழுத்துகள் எம்மை அனுமதிப்பதில்லை. எம் மனதில் பல மாற்றங்களை உருவாக்கும். எம் எண்ணங்களில் உள்ள கறைகளைக் களையச் சொல்லும்.