தோரணை! - சுப்ரபாரதிமணியன் -
ஓவியம் : AI
ஜோதிக்கு சாவு வீட்டுக்குச் செல்லும் சரியானத் தோரணை வந்துவிட்டது. தோரணை என்றால் அதற்கான இணக்கமாக்கிக் கொண்டு சாவு வீட்டுக்குச் செல்வது. முதலில் பொட்டு இடுவதை தவிர்த்து விடுவாள். சாதாரண சேவை உடுத்துவாள். எந்த வகையிலும் கவனம் பெற தக்க வகையில் சேலை இருக்காது. ஜாக்கிரதையாக சோகத்தை வரவழைத்துக் கொள்வாள். சாவு வீட்டுக்குச் செல்வதற்கான சரியான ஏற்பாட்டில் கண்ணீரை உற்பத்தி செய்து கொள்வாள். அப்படித்தான் சுகுமாரன் உறவு சார்ந்த ஒரு சாவிற்கு அன்று செல்ல வேண்டி இருந்தது.
சுகுமாரனின் அண்ணன் மகளின் மாமனார் இறந்து விட்டார். அதற்காகச் செல்வதற்கான ஆயத்தங்களில் சுகுமாரன் இருந்தான். இதுபோன்று இழவு காரியங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் செல்ல வேண்டும் என்று பல சமயங்களில் சுகுமாரன் நினைப்பான். ஆனால் அந்த ஜாக்கிரதைத்தனம் எதுவும் இல்லாமல் சென்று விடுவான்.
வருத்தம் தரும் நேரங்களில் அதுவும் ஒன்றாகிவிடும்.
இப்போது கூட எந்த உடை அணிந்து கொள்வது என்பது தான் குழப்பம் இருந்தது வழக்கமாக அவன் அணியும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அவனுக்கு எப்போதும் ஒத்துழைப்புத் தந்து கொண்டிருக்கிறது. அதை பல நாட்களாக அவன் பயன்படுத்தி வந்தான். பத்து நாட்கள்., பதினைந்து நாட்கள் அணிந்துவிட்டால் பின்னர் அதை அழுக்குக் கூடைக்கு அனுப்புவான். அப்படி அழுக்கோடு இருப்பது தான் அந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உயர்ந்த பட்ச அழகு என்பது அவனுடைய எண்ணம். பிறகு அழுக்கும் சாதாரணமாகி விடுகிறது. அடிக்கடி பேண்ட் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.