நினைவு கூர்வோம்: கவிஞர் திருமாவளவன் & கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் - வ.ந.கிரிதரன் -
கவிஞர் திருமாவளவனைப் பற்றிய நினைவுகள் அவ்வப்போது எழுவதுண்டு. இன்றும் அவ்விதமே எழுந்தது. இப்பொழுதுதான் உணர்ந்தேன் அவரது நினைவுதினம் அக்டோபர் ஐந்து, 2021. எவ்வளவு இலகுவாக அவரை மறந்து விட்டிருக்கின்றோமென்று தோன்றியது. கவிஞர் திருமாவளவனைப் பற்றி எண்ணியதுமே கூடவே கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் நினைவும் எழுந்து விடுகின்றது. திருமாவளவனின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். திருமாவளவன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் பதிவுகள் இணைய இதழ் மூலம் அறிந்து மனம் வாடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கவிஞர் திருமாவளவன் மறைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் அக்டோபர் 15, 2015 அன்று அவரும் மறைந்து விட்டார்.
சந்திக்கும் நேரங்களில் எல்லாம் இலக்கியம் பற்றி என்னுடன் கதைத்த, கதைக்கும் கனடா எழுத்தாளர்கள் வெகு சிலர். பலரும் இலக்கியம் தவிர்ந்த வேறு பல விடயங்களைத்தான் கதைப்பார்கள். இவ்விதம் இலக்கியம் பற்றிக் கதைத்த ஒரு சிலரில் கவிஞர் திருமாவளவன் ஒருவர். கவிஞராக அறியப்பட்டாலும் சிறந்த சிறுகதையாசிரியரும் கூட. இது போல் பதிவுகள் இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பும், என் மீது மிகுந்த அன்பும் வைத்திருந்தவர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன். இறுதிவரை பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவ்வப்போது கனடா வந்திருந்தபோது என்னை நேரில் சந்திக்க முடியாமல் போனது பற்றி வருந்தி எழுதிக்கொண்டிருந்தார்.
அக்டோபரில் மறைந்த இவ்வீர் இலக்கிய ஆளுமைகளையும் காலம் கடந்தாவது இத்தருணத்தில் நினைவு கொள்கின்றேன். கூடவே கவிஞர் திருமாவளவன் பற்றி அவ்வப்போது எழுதிய எனது குறிப்புகளிலிருந்து சில பகுதிகளையும் பகிர்ந்துகொள்கின்றேன். கூடவே வெங்கட் சாமிநாதன் திருமாவளவனின் உடல் நிலை குறித்து அனுப்பிய மின்னஞ்சலையும் பகிர்ந்துகொள்கின்றேன்.