ஆய்வு: மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும் - முனைவர் ம இராமச்சந்திரன் -
உலகில் சிந்தனையாலும் பண்பாட்டாலும் வளர்ச்சியடைந்த தொல்குடி தமிழ்ச்சமூகம். இதற்கு இரண்டாயிரமாண்டு கால சிந்தனை மரபு உண்டு. வாழ்தல் சார்ந்த, உழைப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாக்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான பனுவல்களே தக்கச் சான்றாக அமைகின்றன. அந்த வகையில் தமிழரின் மழை சார்ந்த பகுத்தறிவு சிந்தனை எப்படி கருத்துமுதல்வாதச் சிந்தனைக்குச் சென்றது அதற்கான சமூகக் காரணங்களை இலக்கியத்தில் இருந்ததும் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் இருந்தும் முன்வைத்து ஒரு உரையாடலை கட்டமைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாறு அறியும் காலம் சங்க காலம். சங்க கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள தொல்லியல் சான்றுகள் தொடங்கி பல சான்றுகள் கிடைக்கின்றன. என்றாலும் சங்க இலக்கியம் புனையும் வாழ்க்கைச் சித்திரம் முழு நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குவதை இந்திய சமூக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சங்கப் பனுவல்களுக்கு மூலமாக விளங்கியது தொல்காப்பியம். ஒரு சமூகத்தின் முதற் பொருள் என்பது நிலமும் பொழுதும் என்ற வரையறை தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சாணி கொம்பு. அனைத்து நிலத்திற்கும் பொதுவானது மழை. மழை பெய்யும் காலத்தைக் கார் காலம் என்று கூறும் முறையில் தமிழர்ச் சிந்தனை வியந்து நிற்கிறது. இதனை,