அத்தியாயம் எட்டு!
வீட்டு வாசலில் அவுக கார் வந்து நின்றது.
“அம்மா….. குட்டி ஐயா வீட்டுலயிருந்து, எல்லாருமே வந்திட்டாங்க….”
சமையல்காரப் பையன் சத்தமாகக் கூவினான். எனக்கென்று ஒரு வாழ்க்கை கிடைக்கப்போவதையிட்டு, மனப்பூர்வமான மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஜீவன்களில் ஒன்றான அவனது முகத்திலே பூரிப்பு மெருகேறிக்கொண்டிருந்தது.
அவனிடம் மெதுவாக அம்மா கேட்டாக.
“டேய்…. அது என்னடா குட்டி ஐயா…..”
“ஆமா…. அம்மாவுக்கு – ஐயா….. சின்னம்மாவுக்கு – சின்னையா…… அப்பிடீன்னா…. குட்டியம்மாக்கு – குட்டி ஐயாதானே……”
அவன் பேச்சை ஆதரிப்பதுபோல தலையை ஆட்டியபடி அம்மா சிரித்தாக.
“பரவாயில்லையே….. ஓங்கிட்டக் கேட்டுத்தான் உறவுமொறைகளத் தெரிஞ்சிக்கணும்…..”
நேரத்தக் கவனித்தேன். சரியாக ஒன்பது முப்பது மணி.
காலங்கள் நேரங்களுக்கு மதிப்பளித்து அவுக பணியாற்றும் முறை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவர்களுடன் கூடவந்த தரகர், அவர்களைக் கூட்டிவந்து அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவசரமாக கிளம்பினாக.
ஏன் என்று புரியாமல் அம்மா விழித்தபோது,
“ஒண்ணும் யோசிக்காதீங்க அம்மா….. பெரியவங்க உங்களமாதிரி ஆச்சார ரசனை உள்ளவங்க….. எந்தவொரு சுபகாரியம் பண்ணுறதாயிருந்தாலும்,ஐயர் வெச்சுப் பண்ணினா திருப்தியாய் இருக்கும்ங்கிற செண்டிமெண்டில ஊறிப்போனவங்க…. அதே நேரத்தில, மதுரையிலயிருந்தே ஐயரைக் கூட்டிக்கிட்டு வர்றதில கொஞ்சம் செரமங்கள் உள்ளதால, லோக்கல்ல இருந்து, ஐயரைக் கூட்டிக்கிட்டு வர ஏற்பாடுகள் பண்ணியிருக்கோம்…. இப்ப போயி கூட்டிக்கிட்டு வர்ரேன்….’’
தரகர் காரிலே புறப்பட்டாக.
நேற்றயதினம் என்னவர் வாற்சப்பில் புகைப்படமாக அறிமுகப்படுத்தியவகதான் வந்திருந்தாக. வந்தவக கீழேயுள்ள ஹாலில் உக்காந்திருந்தாக…. அம்மாவோ அவுகளுக்கு சமீபமாக அடக்கமாக நின்னுகிட்டிருந்தாக.
மாடியிலிருந்து மெதுவாகக் கீழே வந்த நான், இருகரமும் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்தேன். கீழே குனிந்து பஞ்சாங்க நமஸ்காரம் செய்யமுடியாமல் தடுமாறும் எனது தவிப்பைப் புரிந்துகொண்ட என் அத்தை, எழுந்துவந்து என்னைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாக.
“கவலைப்படாதம்மா….. உங்க சூழ்நெலை எல்லாத்தையுமே தெரிஞ்சுகிட்டுத்தான் வந்திருக்கோம்….. நீ இனி எங்களுக்கு மருமக இல்ல…. மக…. இனி எத நெனைச்சும் நீ கவலைப்படக் கூடாது….. புரிஞ்சிச்சா…..”
என் நெற்றியில் முத்தமிட்டாக.
என் மகள் என்னை “சித்தி” என்று அழைப்பாள் என எதிர்பார்த்தேன். அருகே வந்தவள் என்முகத்தை நன்கு பார்த்தாள்.
“அம்மா…. நான் உங்க மடியில் உக்காந்துக்கலாமா……”
கல்யாணம் ஆகாமல், கர்ப்பம் தரிக்காமல் எனக்கு , கள்ளமில்லா உள்ளமொன்றால் தரப்பட்ட “அம்மா” என்னும் உறவு…..
அதையடுத்து எனக்குள்ளே தோன்றும் இனம்புரியாத மகிழ்வு…. துடிப்பு…..
ஓ…. இதுவும் ஒருவகையில் தாய்மைப் பூரிப்பின் தொடக்க நிலையாக இருக்கலாம்…..
உள்ளுக்குள் ஏற்கனவே, என் மகளாக இதழ்விரித்த அந்த அரும்பின் நறுமணமானது, இப்போது நந்தவனமெங்கும் பரவி நிறைந்துபோன உணர்வினைத் தந்து, பூரிக்கச் செய்தது.
“ஏம் பொண்ணு….. ஏம் பொண்ணு….. ஏம் பொண்ணு……”
அப்படியே உணர்ச்சிவசப் பட்டவளாக, என்மகளைத் தூக்கி மடியில் வைத்து, நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். கண்ணிலே பெருகிய ஆனந்தப் பிரவாகத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
நான் அமர்ந்திருக்கும் நீள நாற்காலியிலே எனக்கு அருகிலே உட்கார்ந்தாக அத்தை. அடுத்து மாமனார், எதிரே நாத்தனாரும் கணவரும். அனைவருக்கும் காப்பி உள்பட , திருநெல்வேலி, “இருட்டுக் கடை” அல்வா, மற்றும் பூந்தி, மிக்சர் என்று ஓடியோடிப் பரிமாறியபடி தனது அன்பை வெளிப்படுத்தினான் சமையல்காரப் பையன்.
என்னவரின் அப்பா, அதாவது என் மாமனார் பேசினாக.
“வீட்டுக்கு வீடு வாசல்படி ” ன்னு சொல்லுவாங்க…. ஒங்க வீட்டுப் பெரச்சினை எங்களுக்கும் தெரியும்ங்கிறதால, பொண்ணோட அக்காளும், அவுங்க குடும்பமும் இதில கலந்துக்க மாட்டாங்கண்ணுதான் எதிர்பாத்தோம்…. நெனைச்சமாதிரி நடந்து போயிரிச்சு….”
சட்டென்று குறுக்கிட்டான் சமையல்காரப் பையன்.
“வேற ஒண்ணுமில்லீங்க….. குட்டியம்மாவைப் பொண்ணுபாக்க வர்ரீங்கன்னு தெரிஞ்ச நேரத்திலயிருந்து, சின்னம்மா பம்பரமா சுத்திச்சுத்தி வேலைபாத்தாங்க….. நேரமாகியிடக்கூடாதுண்ண அவசரத்தில, மாடிப்படியில வேகமாக வந்தாங்க….. கால் சிலிப்பாகி, விழுந்து உருண்டிட்டாங்க….. அதனால பங்சனை நல்லபடியா கவனிச்சுக்கன்னு எங்கிட்ட சொல்லிப்புட்டுத்தான், அவுங்களை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க எங்க சின்னய்யா….”
“பரவாயில்லை….. வேலை குடுத்துக் காப்பாத்திறவங்களை விட்டுக்குடுக்காம பேசிறே….. கெட்டிக்காரன்தான்…..”
என் நாத்தனாரின் கணவர் பாராட்டுரை வழங்கினாக.
அத்தை என்னிடம் கேட்டாக ;
“என்னம்மா….. என் பையனைப் புடிச்சிருக்கா…..”
இத்தனைக்கும், நேற்றுப் பகல் முழுவதும் வாற்சப் வீடியோ காலில் முகம்பார்த்து நன்கு பேசி, சிரித்து, பழக்கத்தை நெருக்கப்படுத்திய போதிலும்,
இப்போது நிமிர்ந்து என்னவர் முகம் பார்த்துப் பதில்சொல்ல என்னால் முடியவில்லையே. தமிழ்ப் பண்பாட்டினைத் தாங்கிநிற்கும் தூண்களில் ஒன்றான “நாணம்” எத்தகைய வலிமை மிக்கது என்பதை எனது நேரடி அனுபவத்தில் இப்போதுதான் முதன் முதலாக அனுபவிக்கின்றேன்.
சினிமாக்களிலும், சிறுகதை மற்றும் நாவல்களிலும் மட்டுமே அனுபவித்துக்கொண்ட “தாய்மை” மற்றும் “நாணம்” என்னும் வார்த்தைகளை அனுபவ பூர்வமாக விளக்கும் வகுப்பறையாக அந்த இடம் மிளிர்ந்தது.
“என்னம்மா பதிலையே காணோமே……” மீண்டும் அத்தை.
அப்போதும் என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எனக்குள்ளே ஒரு குரல்.
“என்னாச்சுடி உனக்கு….. நேத்து பகல் பூராவும், அவுங்க வாற்சப் வீடியோ கால்ல சின்னப்புள்ளைக்கு கிளாஸ் எடுக்கிறமாதிரி, தெளிவா எடுத்துச் சொன்னப்போ, பெரிய இவளுமாதிரி ஓகே ஓகே ன்னு சீன் போட்டுட்டு இப்போ இப்பிடிக் கவுத்துப்புட்டியே….. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கக்காளையே போட்டு அந்த வாங்கு வாங்கினே….. அப்ப இருந்த தைரியத்தில கொஞ்சம்கூட ஓங்கிட்ட காணமேடி…..”
நாத்தனாரின் கணவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, அங்கு கலகலப்பூட்டினாங்க.
“ஓஹோ…. மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி…. அப்பிடித்தானே தங்கச்சி….”
எல்லோரும் சிரித்தாங்க.
வாழ்நாளில் “அண்ணன்” என்னும் உறவு எத்தகையது என்பதைத் தெரியாதிருந்த எனக்கு , “தங்கச்சி” என்னும் வார்த்தை ஒருவித புதிய தெம்பைக் கொடுத்தது.
அவங்க உள்ளத்தைப் பொறுத்து எப்படியோ…. ஆனால், என் உள்ளத்தில் அவங்க, ஒரு அண்ணனாகவே பிரகாசித்தாக.
அதேவேளை அவங்க மனைவியும், என்னவரின் தங்கையுமான,
என் நாத்தனார்…. எழுந்துவந்து என்னவரிடம்,
“என்ன பிரதர்….. ஏற்கனவே நாம பேசிக்கிட்டது ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்…. நான் ஏற்கனவே உனக்கு சொன்னமாதிரி, எங்கண்ணி தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாத்திப்புட்டாங்க….. சரி….சரி…. கழுத்தில கெடக்கிர செயினைக் கழட்டிக்கலாமா….”
என்னவர் முகத்திலே தோற்றுப் போன சாயல் தோன்ற, எனக்குச் “சுரீர்” என்றிருந்தது.
முதன் முதலில் சந்தித்த வேளையிலேயே என்னால் அவுகளுக்கு ஏற்பட்ட தோல்வி, என்னை மிகவும் நோக வைத்தது. அதேவேளை, அவுக தோல்விக்கு ஆரம்ப அறிகுறியாக அவுக கழுத்திலிருந்த சங்கிலி கைவிட்டுப் போகவும், ஒரு “துர் அதிஷ்டம்” கொண்ட மருமகளாக என்னை நானே காட்டிக்கொள்ளும் பரிதாபத்துக்கு ஆளானேன்.
தனது கழுத்திலுள்ள செயினைக் கழற்றி, தனது தங்கையின் கையில் கொடுக்கும்போது, என்னவர் திரும்பி என்மீது செலுத்திய பார்வையில் தெரிந்த பரிதாபம், என்னச் சாகடித்து மீண்டது.
“உன்னய நம்பிப், போட்ட மொதல் ஆட்டத்திலேயே என்னை நாக் – அவுட் ஆக வெச்சுப்பிட்டியேடி பாவி….. இனி எப்பிடித்தான் வாழ்க்கை பூராவும் உங்கூட இருந்து குப்பை கொட்டப் போறேனோ.....”
என்று கேட்பதைப் போல இருந்தது.
எங்களின் சார்பில் அம்மாவும், என்னவர் சார்பில் அத்தையும் தட்டுக்களில் பழம், பாக்கு,வெற்றிலை உள்பட நிச்சயார்த்தத் தட்டுமாற்றலுக்கான தாம்பூலப் பொருட்களை பார்த்துப் பார்த்து நிரப்பினாக.
தரகர், ஐயருடன் வந்து சேரும்போது, மணியோ ஒன்பது நாற்பத்தைந்து ஆகிவிட்டது.
சடங்கு வைபவங்கள் இனிதே நடைபெற்று, தட்டுக்கள் மாற்றும் தருணம் வந்தபோது, அம்மாவைப் பார்த்து ஐயர் கேட்டாக.
“மாப்பிள்ளை பக்கமிருந்து அவங்கம்மா அப்பா, தட்டுமாத்திக்க வர்ராங்க…. பொண்ணு சார்பில யாரு வர்ரிய…. உங்க பெரிய பொண்ணையும், மருமகனையும் காணமே…. அவுகளைக்
கூப்பிடுங்கோ ….”
சம்பிரதாயப்படி இதுதான் உண்மை என்றாலும், இதுவரை நேரமும் இதைப்பற்றி யோசிக்கவே மறந்துவிட்டோம்.
ஒரே நிசப்தம்.
அம்மாவும், நானும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்தோம்.
தக்க தருணத்தில் யாருமே இல்லையே என்னும் தவிப்பில், அம்மாவின் வேதனையானது வெடித்துச் சிதறத் தயாராகிக்கொண்டிருந்தது. அத்தனை பேரின் முன்பும் அழுதுகொட்டிவிடுவாகளோ என்னும் பயம்கலந்த தவிப்பு என்னை ஆட்டிப்படைத்தது.
மறுகணம் -
நாங்கள் நினைத்தும் பார்க்க முடியாத வரப்பிரசாதமாக, சில நொடிப்பொழுதுக்கு முன் எனக்கெனத் தோற்றம்பெற்ற என் அண்ணன்….. அதாவது, எனது நாத்தனாரின் கணவர், திடீரென்று எழுந்தாங்க…. ஐயரை நோக்கி அவுக பார்வை சென்றது.
“சாமி…. பொண்ணு வீட்டார் சார்பில, பொண்ணுக்கு அண்ணனான நானும், அண்ணியான என் பொண்டாட்டியும் இருக்கோம்…..”
பேசியபடியே, யாரது பதிலையும் எதிர்பாராமல் எங்கள் சார்பான தட்டினை, எடுத்துக்கொண்டாக. அடுத்து, யாரும் எதிர்பார்த்திராத சம்பவமாக, என் அண்ணியார், சற்று நேரத்துக்குமுன், தனது அண்ணனான என்னவரிடமிருந்து வென்றெடுத்த தங்கச் சங்கிலியை என் கழுத்திலே போட்டாக.
இதில் வேடிக்கை என்னவென்றால் –
என்னவருக்குத் தங்கை என்னும் கோணத்திலே நோக்கும்போது, நாத்தனாராகவும்……
என் அண்ணனுக்கு மனைவியாக நோக்கும்போது அண்ணியாராகவும் மாறிடும், முறைப் பெயர்களில்,
ஏற்கனவே தெரிந்து எதிர்பார்த்திருந்த நாத்தனாரை விட, எதிர்பாரா நேரத்திலும், சூழ்நிலையிலும் உறவுக் கரம் கொடுத்த அண்ணியாரே மேலாகத் தெரிந்தாக.
என்னவரின் தங்கைக்கு ஒரு அண்ணியாக நான் இருந்து, அதிகாரம் செய்யும் தகுதியை விட , என் அண்ணனின் மனைவிக்குக் கட்டுப்பட்ட நாத்தனாராக மாறுவதில், எனக்கு மகிழ்ச்சி அதிகம் என்று, அவர்கள் காட்டிய அன்பு என்னை முடிவெடுக்க வைத்தது.
என்னையறியாமலே என் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை, என்னைக் கேட்காமலே அண்ணியின் வலக்கரம் துடைத்துவிட்டது.
என் காதோரம் நெருங்கி மெதுவாகப் பேசினாக.
“ரிலாக்ஸ் மதனி…. டேக் இட் ஈசி……”
அதே சூழ்நிலைக்கு ஆளான என் அம்மாவின் கண்ணீரை, என் அத்தை துடைத்துவிட்டாக.
தாம்பூலப் பொருட்களால் சுமாரன அளவு பாரத்தைச் சுமந்து, தட்டுகள் கனத்தன. மாற்றப்படும்போது , இருவீட்டார் சார்பிலுமுள்ள பாசத்தையும் சுமந்து ஜொலித்தன.
நிறைந்த மனத்தோடு அம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்வதை என்னால் கவனித்து உணர முடிந்தது.
அடுத்து என் அண்ணனார் ஐயரிடம் வைத்த கோரிக்கை அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தது.
(தொடரும்)