முன்னுரை
பண்பாடு என்பது பண்பட்ட மனதின் வெளிப்பாடேயாகும். சங்க கால மக்களின் வாழ்க்கை நிலையையும். பின்புலத்தையும் இது எடுத்து காட்டுவதாகவும் வருங்காலச் சந்ததியினருக்கு நல்ல நினைவுச் சின்னமாகவும் விளங்குகின்றது.

பண்பாட்டுக் கூறுகள்:
அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்களும், நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் பண்பாடாக அமைகின்றன.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' (நச்சினார்க்கினியர் உரை, கலித் தொகை, கலி. 16)

என்னும் கலித்தொகை வரி பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் என்னும் ஒழுக்கமும் பண்பாடு என்று கூறுகின்றது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் தனித்தனிப் பழக்கவழக்கங்கள் உண்டு. அவை பிற சமூகத்தினரிடமிருந்து தங்களை தனித்துக் காட்டுகின்ற அடையாளங்களாகும். அவ்வகையில் நவீன இலக்கியவாதியான இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை இலங்கை தமிழ் மக்களின் நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் மையமாக வைத்துத் தனது படைப்புகளில் விளையாட்டு, திருவிழா, மருத்துவம், உணவுப் பழக்கம் போன்றவற்றைப் படைத்துள்ளார்.

விளையாட்டுக்கள்
'விளையாட்டு என்பது வெளித்தூண்டுதலின்றி மனமகிழ்ச்சியூட்டும் வெயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி உடல்நலம்,மனநலம் பேணுவதாகவும் உள்ளது' என்று சு. சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் (ப. 246) குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் குழந்தைகளும் ஆண்களும், பெண்களும் ஒன்று கூடிப் பொழுதுபோக்காக மட்டுமல்லாது பெரும் விழாவினைப் போலவே விளையாடுகின்றனர். சில சமயங்களில் இவை சூதாட்டமாகவும் மாறிவிடுகின்றன.

கடுதாசி விளையாட்டு
கடுதாசி விளையாட்டினைச் சீட்டு விளையாட்டு என்றும் வாய்ப்பு நிலை விளையாட்டு என்றும் குறிப்பிடுவர். இவை உடல் திறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெற்றி தோல்வியை மட்டும் மையமாக வைத்துப் பொழுதுபோக்காவும், சூதாட்டமாகவும் விளையாடுகின்றனர்.

எஸ்.பொவின் 'சடங்கு' நாவலில் செந்தில்நாதன் நண்பர்களின் வற்புறுத்தலால் கடுதாசி விளையாட்டில் ஈடுபடுகின்றான்.

'புறியம் காட்டாமல் குந்தும் ஒரு கை குறையுது' (சடங்கு. 104)

இதுபோன்று 'நிழல் என்ற சிறுகதையில் 'அண்ணாவி கூத்துக்கலை நலிந்து பிழைப்பில்லாமல் வருந்தும் போது சூதாட்டமாக கடுதாசி விளையாடடில் ஈடுபட்டு பணத்தை இழந்து குடிக்கு அடிமையாகின்றான்' (நிழல். 202)

இவ்வாறு விளையாட்டுக்கள் சிலசமயம் சூதாட்டமாக மாறி மகாபாரத காலத்தில் இருந்து இன்றுவரை பல குடும்பங்களை அழித்து வருகின்றன என்பது இவரின் புனைகதை மூலம் அறியமுடிகிறது.

போர் தேங்காய் விளையாட்டு
'புதுவருடப் பிறப்பின் நான்காம் நாள் பொது இடத்தில் ஊரார் இரு பிரிவினராகப் பிரிந்து ஒருவருடைய அணித் தேங்காயை மற்றவருடைய அணித் தேங்காயால் அடித்து உடைத்தலே போர் தேங்காய் விளையாட்டாகும்' என்று பா. இரவிக்குமார் எஸ்.பொ. உறவுகள் (ப. 78) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தேர் சிறுகதையில் 'கறித் தேங்காய்களையெல்லாம் போர்த் தேங்காய்களாக்கி, தேர்ந்தெடுத்த தேங்காய்களைக் கொண்டு முற்றத்திலே போர்த் தேங்காயடி நடைபெற்றது' (தேர். 59) என்று எஸ்.பொ. இலங்கை மக்களுக்கே உரிய விளையாட்டாக இதனை வெளிப்படுத்தியுள்ளார். அதன் மூலம் அம்மக்களின் ஒற்றுமையும், பகிர்ந்துணர்வும் வெளிப்படுகின்றன.

சிறுவர் விளையாட்டு
ஆண்மை - 9 என்ற சிறுகதையில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் இணைந்து ஒளிந்து விளையாடும் விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று 'அநித்தியம்' என்ற சிறுகதையில் கடற்கரையில் வீடு கட்டி விளையாடும் விளையாட்டையும் காட்டியுள்ளார்.

திருவிழாக்கள்
'கொண்டாட்டம், குதூகலம் என்பது மனித உயிர்களின் தணியாத தாகம். நமது முன்னோரக்ள் கடவுளோடு பக்தியை மட்டுமல்லாது கொண்டாட்டத்தையும் சேர்த்து விட்டார்கள்' என்று திருவிழாவினைக் குறித்து அருணன், தனது மானுட விசாரணை என்ற நூலில் ( ப. 24) குறிப்பிடுகின்றார்.

நன்மையினை வேண்டி உருவாக்கப்படும் இவ்விழாக்கள் நாடு, இனம், மொழி, குழு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. எஸ.பொ. இலங்கை மக்கள் கொண்டாடுகின்ற விசாக் திருவிழா, புதுவருட பண்டிகை, சிறுதெய்வ வழிபாடு போன்றவற்றைத் தனது புனைக்கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

விசாக் திருவிழா
இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தப்படும் விழாக்களுள் வெசாக் திருவிழா முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

'வெசாக் பண்டிகை என்பது வைகாசி மாத பௌர்ணமியன்று புத்தரின் பிறப்பு, துறவு, மெய்ஞ்ஞானம், மகா, பரி நிருவாணம் ஆகிய நான்கினையும் மையமாக வைத்து நடத்துகின்ற திருவிழாவாகும்' என்று ப. இராமஸ்வாமி, புத்தர் போதனைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக். 7-8)

மாயினி நாவலில் வெசாக் திருவிழாவைப் பற்றிக் கூறுகையில்,'களனி கங்கைக்கரையில் மூங்கிலினால் ஒரேயொரு வெளிச்சக் கூடாவது கட்டி அதனுள்ளே மெழுகுவத்தியை ஏற்றி வைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். (மாயினி. 55)

வெசாக் கூடு என்பது புத்த பகவான் பெற்ற நிப்பாண ஒளியை உருவகப்படுத்துவதாகும். இவ்வொளியின் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒளிபெற்று மகிழ்ச்சியாக வாழ்வதைக் குறிக்கிறது.

ஆண்மை - 4 என்ற சிறுகதையில் 'றபான்' (தோல் கருவி) அடித்து உணவுப் பொருட்களைத் தானம் வழங்கும் செய்தியும் இடம்பெற்றுள்ளது.

புதுவருட பண்டிகை
தேர் சிறுகதையில் புதுவருடப் பிறப்பன்று வெளியூரில் இருக்கின்ற பிள்ளைகள் தந்தைக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்து, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார். இப்பண்டிகையன்று,

'மருந்து நீராடிக் கும்பம் வைத்து கைவிசேடம் கொடுக்கிற பழக்கமும் கூறப்படுகின்றன'. (தேர். 49)

சிறுதெய்வ வழிபாடு
மக்கள் திருவிழாவினை மட்டுமல்லாது சிறுதெய்வ வழிபாட்டினையும் பக்தியுடன் கொண்டாடுகின்றனர். 'அச்சவுணர்வும் குற்றவுணர்வும் இறைவழிபாட்டின் தோற்றக் காரணங்களாக இருக்கலாம்' என்ற ஃப்ராய்டின் இறைவழிபாட்டுக் கருத்தை அ.நா. பெருமாள் நாட்டுப்புறவியல் சிந்தனைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். (ப. 45)

எஸ்.பொ. ஆண்மை - 11 என்ற சிறுகதையில் மட்டக்களப்பில் உள்ள கிராமத்தில் 'நாகதம்பிரான்' என்ற தெய்வத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை பொங்கல் வைக்கும் வழிபாட்டுச் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்று 'எச்சில்' என்ற கதையில் மாமாங்கப்பிள்ளையார் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு காணப்படுகிறது.

இவ்வாறு இயற்கை சீற்றத்தாலும் மேல் சாதியினரின் அடக்குமுறையாலும் தங்களுக்கு எந்த ஆபத்து ஏற்பட கூடாது எனபதற்காக இவ்வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

மருத்துவம்
நாட்டுப்புற மருத்துவத்தை மக்கள் தங்கள் வாழ்வியலோடு தொடர்புபடுத்தி உணவே மருந்து என்ற வகையில் உட்கொள்ளுகின்றனர். மருத்துவம் தொடர்பான பல நம்பிக்கைகளும் இவர்களிடம் காணப்படுகின்றன.

'அமாவாசையில் நோய்மிகும் என்பதும் பௌர்ணமியில் நோய் குறையும்' என்றும்,'ஆயிரம் பேரை (வேரை)க் கொன்றவன் அரை வைத்தியன்' என்ற பழமொழியும் நாட்டுப்புற மருத்துவத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன.

எஸ்.பொ. இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் தனது புனைகதைகளில் பல மருத்துவக் குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார். மாயினி நாவலில் நாட்டுப்புற மருத்துவமான செந்தூர மூலிகைப் பற்றிய செய்தி காணப்படுகின்றது.

'மூலிகையின் வேரைப் பதப்படுத்தி வாகடம் விதித்துள்ளவாறு செந்தூரம் தயாரித்து அதிலே ஒரு பேண்பிடியளவு உண்டால் அவனுக்கு முன்னைய பிறப்புகள், சரித்திர நிகழ்வுகள் தரிசனமாகும்' என்று செந்தூர மூலிகையின் அபூர்வத்தை வெளிக்காட்டியுள்ளார. (மாயினி. 19)

வேலி என்ற சிறுகதையில் 'அட்டைக்கடிக்கு கடிபட்ட இடத்தில் வெற்றிலைக் கக்கல் இடும் வழக்கம்' (வேலி. 86) கூறப்படுகின்றது. இதுபோன்று தேர் என்ற கதையில் தலைவலிக்கும், காய்ச்சலுக்கும், சீனிச்சுருளும் தேயிலைச் சாறும் வெற்றிலைப் பாக்கும் கலந்து தயாரிக்கும் மருத்துவ செய்தி இடம்பெற்றுள்ளது.

உணவுப் பழக்கம்
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக கருதப்படுவது உணவு. 'பசி வந்திட பத்தும் பறந்து போகும்' என்ற பழமொழி உணவின் இன்றியமையாமையை விளக்குகின்றது. இலங்கை மக்கள் அவர்களின் வாழ்வியலுக்குத் தக்கவாறு உணவுகளைத் தயாரித்து உட்கொள்ளுகின்றனர் என்பதை எஸ்.பொ. தனது படைப்புகளில் வெளிக்காட்டியுள்ளார்.

நாம் தினமும் காலையில் அருந்தும் காபி போன்று இலங்கையில் முட்டைக் கோப்பி எனும் உணவு வகையைக் குறிப்பிடுகின்றார். 'காபிக் கொட்டை. மல்லி,சுக்கு மூன்றையும் வறுத்துப் பொடியாக்கி, மிதமான சூட்டில் உள்ள முட்டையுடன் கலந்து தாயரிக்கும் முட்டைகோபி என்னும் புதுமையான உணவை மக்கள் கடைபித்தனர் என்பதைச் சடங்கு, மாயினி நாவலிலும், ஆண்மை - 5, தேர், மறு என்ற சிறுகதைகயிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

'சடங்கு' நாவலில் உணவைப் பற்றிக் குறிப்பிடும் போது இறால் மூஞ்சிகளைப் போட்டு உள்ளி, மிளகு - தட்டிச் சேர்த்துச் செய்யும்உணவைக் குறிப்பிடுகின்றார். இதுபோன்று மாயினி நாவலில் 'இடியாப்பம், கட்டாச் சம்பல், அறுக்குளா மீனில் கிரிமாலு, நெத்திலி பிரட்டல்' (மாயினி. 93) போன்ற உணவு வகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர் சிறுகதையில் நல்லெண்ணெயில் வெதும்பிய கத்திரிக்காயுடன் மூன்று நீற்றுப்பெட்டி பிட்டு,சுட்ட மரவல்லிக் கிழங்கு, பச்சை மிளகாய் சேர்த்து உணவு தயாரிக்கும் முறையை அவரது புடைப்புகளின் வாயிலாக அறியமுடிகின்றது.

முடிவுரை
நவீன இலக்கியவாதியான எஸ்.பொ. இலங்கை மக்களுடன் ஒன்றி வாழ்ந்ததாலும், இயற்கையோடு இயைந்து காணப்பட்டதாலும் ஆரோக்கியமான உணவின் மீது அக்கறை கொண்டதாலும், தனது படைப்புகளில் இலங்கை தமிழ் மக்கள் பெரிதும் போற்றுகின்ற பண்பாட்டுக் கூறுகளான போர் தேங்காய் விளையாட்டையும், வெசாக் திருவிழாவினையும், செந்தூரம் என்னும் அரியவகை மூலிகையையும், முட்டைக் கோபி எனும் புதுவகை உணவையும் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அம்மக்களின் ஒன்றுமை, பகிர்ந்துணர்வு, மனமகிழ்ச்சி போன்வற்றை அறிய முடிகின்றன.

துணைநூற்பட்டியல்

1. அருணன், மானுட விசாரணை, வசந்தம் வெளியீட்டகம், மதுரை. 2002.
2. இரவிக்குமார், பா., (தொ.ஆ). எஸ்.பொ உறவுகள், அர்ச்சனா பதிப்பகம், சென்னை. 2004.
3. இராமஸ்வாமி. ப.,புத்தர் போதனைகள், முல்லை நிலையம், சென்னை. 1996.
4. எஸ்.பொ., மாயினி, மித்ர ஆர்ட்ஸ்ரூ கிரியேஷன்ஸ், சென்னை. 2008.
5. எஸ்.பொ., சடங்கு, மித்ர ஆர்ட்ஸ ரூ கிரியேஷன்ஸ், சென்னை.
6. எஸ்.பொ., எஸ்.பொ. கதைகள், மித்ர ஆர்ட்ஸ ரூ கிரியே­ன்ஸ், சென்னை. 2005
7. சக்திவேல்,சு,. நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2002.
8. நச்சினார்க்கினியர் உரை, கலித்தொகை, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1996.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R