“ வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. “
சங்கரலிங்கம், சகல கலா வல்லி மாலையை மெய்யுருக பாடிக்கொண்டிருந்தார். ஊரில் பாடசாலையில் முதலாம் வகுப்பில் அவர் படிக்கும்போது, பண்டிதர் நமசிவாயம் ஒரு நவராத்திரி காலத்தில் சொல்லிக்கொடுத்தது.
சங்கரலிங்கத்திற்கு தற்போது எழுபத்தியைந்து வயதும் கடந்துவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு அவர் வந்து நாற்பது வருடங்களும் விரைந்து ஓடிவிட்டன. ஆனால், ஐந்து வயதில் பண்டிதர் சொல்லித்தந்த சகலகலா வல்லி மாலை அவரைவிட்டு ஓடிவிடவில்லை.
புகலிடத்திற்கு வந்த காலம் முதல் நவராத்திரியின்போது மட்டுமல்ல, நல்லூர் கந்தனுக்கு கொடியேறினாலும் சிவன்ராத்திரி காலம் வந்தாலும், ஊரில் சித்திவிநாயகர் ஆலயத்தில் சதூர்த்தி உற்சவம் தொடங்கினாலும், சங்கரலிங்கம் விரதம் அனுட்டிப்பவர்.
வருடாந்தம் இலங்கையிலிருந்து மறக்காமல் பஞ்சாங்கமும் தருவித்துவிடுவார். இலங்கையில் ரயில்வே திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்திலும் நவராத்திரி வரும்போது, அவர்தான் அலுவலகத்தில் கலைமகள் விழாவை ஏற்பாடு செய்வார். ஒரு தடவை போக்குவரத்து அமைச்சரையும் அழைத்தார். அவர் பெளத்த சிங்களவர். பிள்ளையாரை கணதெய்யோ எனவும், சிவனை ஈஸ்வர தெய்யோ எனவும், முருகனை கதரகம தெய்யோ எனவும் சரஸ்வதியை அதே பெயரில் சரஸ்வதி தெய்யோ எனவும் அழைக்கத்தெரிந்த அமைச்சர்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும், இங்கே தேடிக்கொண்ட நண்பர்களிடமும், தான் போக்குவரத்து அமைச்சரை கலைமகள் விழாவுக்கு அழைத்த கதையை விஸ்தாரமாக எடுத்துச்சொல்லிவிடுவார்.
அந்த பழங்கதையை கேட்டுக்கேட்டு அவரது மனைவி சுகுணேஸ்வரிக்கு அலுத்துவிட்டது.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள், காலையில் வீட்டை சுத்தம் செய்து இரவு சரஸ்வதி பூசைக்கு தயாராகும்போதும் மனைவியிடம் தனது பதவிக்காலத்தில் ஒரு சரஸ்வதி பூசை நாளன்று போக்குவரத்து அமைச்சரை அழைத்த கதையை மீண்டும் சொல்வதற்கு தயாரானபோது, “ அந்த அமைச்சரும் செத்துப்போய் பல வருடமாகிவிட்டது. நீங்கதான் இன்னமும் அந்த ஆளை நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க… “ என்றாள் சுகுணா.
“ சுகுணா… ஏன் மீண்டும் சொல்கிறேன் தெரியுமா..? இம்முறை எங்கட நாட்டு பிரதமர் ராஜபக்ஷ, அலரிமாளிகையில் நடக்கும் சரஸ்வதி பூசைக்கு இந்தியாவிலிருந்து சுப்பிரமணிய சுவாமியை அழைத்திருக்கிறார். இவ்வாறு அரசியல் பிரமுகர்களை சரஸ்வதி பூசைக்கு அழைக்கும் கலாசாரத்தை நான்தான் பல வருடங்களுக்கு முன்பே அங்கே அறிமுகப்படுத்தினவன். “ என்றார் சங்கரலிங்கம்.
“ இதைச் சொல்வதற்காகவாவது இம்முறை உங்கட நண்பர்களின் குடும்பங்களை சரஸ்வதி பூசைக்கு வீட்டுக்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உங்களுக்கு வந்துவிட்டதாக்கும். பரவாயில்லை. அடுத்த முறையும் ராஜபக்ஷ , சுப்பிரமணிய சுவாமியையோ, நித்தியானந்தா சுவாமியையோ அழைக்கட்டும். அப்போதாவது இந்த கொரோனா இல்லாமல் போய்த் தொலையட்டும், நீங்கள் உங்கள் நண்பர்களை அழைத்து அந்த பள்ளம் விழுந்த ரெகோர்டை போட்டுக்காண்பியுங்கள் “ சுகுணா எரிச்சலுடன் சொல்லிவிட்டு, குளியலறைக்குச்சென்றாள்.
இம்முறை சரஸ்வதி பூசைக்கு சங்கரலிங்கத்தால் நண்பர்கள் குடும்பத்தினரை அழைக்க முடியவில்லை. கொரொனோ பெருந்தொற்றினால், மாநிலம் முடக்கப்பட்டு, மாநில எல்லைகளும் மூடப்பட்டுக்கிடப்பதுடன், பதினைந்து கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் அவராலும் செல்ல முடியவில்லை. நூறு கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பாலிருக்கும் அவரது பிள்ளைகளின் குடும்பங்களும் இதர நண்பர் குடும்பங்களும் வர இயலவில்லை.
நவராத்திரி காலம் தொடங்கிய நாள் முதல், இந்த பெருந்தொற்று விரைவில் உலகைவிட்டு நீங்கிவிடவேண்டும் எனவும் பிரார்த்திக்க அவர் தவறவில்லை.
சுகுணா வழக்கம்போல் இம்முறையும் கடலை, அவல், சக்கரைப்பொங்கல், வடை, மோதகம் தயார் செய்து சரஸ்வதி, துர்க்கை, லெட்சுமி, பிள்ளையார், சிவன், பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை காட்சிதரும் படங்களுக்கு முன்னால் வெள்ளித்தட்டுக்களில் பரப்பி வைத்திருந்தாள். நவராத்திரி தொடங்கும் முன்பே கொலு பொம்மைகளையும் வரிசையாக அடுக்கி தயார் செய்திருந்தாள்.
வாழை, மா, அப்பிள், திராட்சை, தோடை முதலான ஐவகை பழங்களும் படைக்கப்பட்டன. சிங்கப்பூரில் வாங்கிவந்த பச்சை நிற பிளாஸ்ரிக் வாலை இலைத்தட்டில் பொங்கலை வைத்தாள்.
சங்கரலிங்கம் சகலகலா வல்லிமாலையை மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்தார். சுகுணா அருகில் நின்று கண்களை மூடியவாறு கணவன் சொல்லச்சொல்ல தானும் இணைந்து வாயால் முணுமுணுத்து பாடினாள்.
“ மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. “
என்ற இறுதி வரிகளை அவர் பாடிக்கொண்டிருந்தபோது, வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
சங்கரலிங்கம் சுவர்க்கடிகாரத்தைப்பார்த்தார். இரவு ஏழு மணி கடந்து பத்து நிமிடமாகியிருந்தது.
சுவாமி படங்களுக்கு தீபாராதணை காண்பிக்க அவர் தயாரான அவ்வேளையில் யார் வந்து கதவைத்தட்டுவது…?
“ சுகுணா போய்ப்பாரும்…. யார்… இந்த நேரத்தில்…? “
“ என்னால் முடியாது. நீங்க போய்ப்பாருங்க… “
‘ சிலந்தி, கரப்பொத்தானை கண்டுவிட்டாலும் கத்தி ஊரைக்கூட்டுபவள்தான் இவள். எப்படி இரவுவேளையில் எதிர்பாராமல் வரும் ஓசை கேட்டு கதவு திறப்பாள்…? நான் இல்லாத காலத்தில் என்னதான் செய்வாளோ..? ஈஸ்வரா…. ‘ சங்கரலிங்கம் மனதில் குமைந்துகொண்டு, கதவருகில் சென்று உட்புறமாக நின்றுவாறு, முதலில் Who …? என்றும் பின்னர் யார்..? என்றும் கேட்டார்.
“ நான்தான் சரஸ்வதி வந்திருக்கிறேன். கதவைத்திற சங்கரலிங்கம் “ என்ற குரல் கதவுக்கு அப்பால் எதிர்ப்புறமிருந்து அசரீரிபோன்று கேட்டது.
“ யாரப்பா… இந்த நேரத்தில்…. “ மனைவி தயங்கிக்கொண்டு பின்னால் வந்து நின்றாள்.
“ யாரோ… சரஸ்வதியாம்… அந்தப்பெயரில் உமக்கு யாரையாவது தெரியுமா..? “
“ என்ன கதைக்கிறியள்… உங்களுக்குத் தெரியாத யாரையாவது இங்கே எனக்குத்தெரியுமா…? “ மீண்டும் கதவு தட்டப்பட்டது.
சங்கரலிங்கமும் மீண்டும், “ Who …? யார்…? “ என்று சொல்லிப் பார்த்துவிட்டார்.
“ ஏன்… வேறும் மொழிகள் தெரிந்தால் கேட்டுப்பார்க்கவேண்டியதுதானே..? பல்லின கலாசார நாட்டில் பல மொழிகளும் பேசுகிறார்கள்தானே…? உனக்கு எத்தனை மொழி தெரியும்… ? அதுபற்றி பிறகு பேசுவோம். முதலில் கதவைத்திற….. நான்தான் நீ வணங்கும் சரஸ்வதி வந்திருக்கிறேன். “
சங்கரலிங்கமும் சுகுணாவும் ஒருவரையொருவர் கண்ணிமைக்காமல் பார்த்தனர். இருவருக்கும் குளிர்காலத்திலும் வியர்த்தது. மீண்டும் கதவு தட்டப்பட்டது.
“ ஏனப்பா… ட்றிபிள் ஸீரோவுக்கு போன் பண்ணி பொலிஸை கூப்பிடுவோமா..? “ என்று நடுக்கத்துடன் கேட்டாள் சுகுணா.
“ ஏய்… சங்கரலிங்கம், பொலிஸ் வந்தாலும் என்னை அடையாளம் காண மாட்டார்கள். உனக்குத்தான் இந்த கொரொனோ காலத்தில் மூளை பிசகிவிட்டது என்று அம்புலன்ஸை அழைப்பார்கள். நான் சொல்வதைக்கேள்…. சரஸ்வதிதான் வந்திருக்கின்றேன். கதவைத்திற. என்னால் அத்துமீறி ஆவிபோன்று உள்ளே நுழைய முடியும். ஆனால், அது நாகரீகம் இல்லை. “ சரஸ்வதி தேவி வெளியே நின்றவாறே மீண்டும் குரல் கொடுத்தாள்.
சங்கரலிங்கம் தயக்கத்துடன் கதவைத்திறந்தார். சுகுணா பயத்துடன் பின்வாங்கி, வீட்டின் சுவாமி அறைக்கதவு நிலையை பிடித்துக்கொண்டாள்.
“ ஈஸ்வரா… “ என்று முணுமுணுத்தவாறு சங்கரலிங்கம் கதவைத்திறந்தார். அவரது முகத்தை நோக்கி வெளிச்சம் பாய்ந்தது. ஒரு பெண் கண்கள் மின்ன அவரை விலத்தியவாறு உள்ளே வந்தாள். அந்த முகத்தில் பிரகாசம்.
“ நான்தான் சரஸ்வதி. என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா..? நீ தினமும் வணங்கும் படத்திலிருப்பவள் போன்ற தோற்றத்திலிருக்கின்றேனா… சொல்… இல்லையென்றால், அந்தத் தோற்றத்திலே வந்தால்தான் நம்புவாயா….? சங்கரலிங்கம்…. சொல்… “
கணவனும் மனைவியும் திக்பிரமை பிடித்தவர்களாக உள்ளே வந்த பெண்ணையே பார்த்தவாறு நின்றனர்
சரஸ்வதி , நான்கு அறைகள் கொண்ட அந்த பெரிய வீட்டை சுற்றிப்பார்த்தாள்.
“ நான் காண்பது கனவா… நனவா..? சொல்லுங்கள் தாயே…. “ சங்கரலிங்கம் நடு நடுங்கியவாறு பிதற்றினார்.
“ நீதான் இவரது மனைவியா…? நீயும் என்னைப்போல ஒருத்தி… எதற்காக பயப்படுகிறாய். நீதானே இந்த ஆளுக்காக மூன்று பிள்ளைகளை வயிற்றில் சுமந்து பெற்றுக்கொடுத்து வளர்த்து ஆளாக்கி, உரிய காலத்தில் அவர்களை கரைசேர்த்துவிட்டவள். இன்னமும் உனக்கு ஓய்வில்லை. “ எனச்சொல்லிக்கொண்டே சரஸ்வதி அந்த சுவாமி அறைக்குள் பிரவேசித்தாள்.
அங்கு ஊதுவத்தி வாசனை பரவியிருந்தது. இரண்டு பெரிய குத்துவிளக்குகளில் தீபங்கள் சுடர்விட்டன.
கொழுவுக்கு முன்பாக படைக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களுடன் ஐவகைக்கனிகளும் மலர்களும் அறைக்கு மேலும் மெருகூட்டின.
“ இத்தனை உணவுகளையும் நீதானே சமைத்தாய்…? “ சரஸ்வதி , சுகுணாவின் பக்கம் திரும்பிக்கேட்டாள்.
அதற்கு அவள் நடுங்கியவாறு தலையசைத்தாள். வடை, கடலை, மோதகம், அவல், பொங்கல்… இவ்வளவும் நீ செய்து முடிக்கும் வரையில் உன் கணவன்… இந்த சங்கரலிங்கம் என்ன செய்துகொண்டிருந்தார்….? நீ…. சொல்லவேண்டாம்… எனக்குத் தெரியும் . முகநூலில் நோண்டிக்கொண்டிருந்திருப்பான். “ என்று சொன்ன சரஸ்வதியிடம், “ இல்லை தாயே… இன்று முழுவதும் நான் முகநூலில் உங்கள் படத்தைப்போட்டு, சரஸ்வதி தோத்திரப்பாடல்களையும் பதிவேற்றிக்கொண்டிருந்தேன் தாயே…. “ என்றார் சங்கரலிங்கம்.
“ உன் பெயர் சுகுணாதானே….. “ சரஸ்வதி மீண்டும் சுகுணேஸ்வரி பக்கம் தனது பார்வையை திருப்பினாள்.
“ இல்லையம்மா.., முழுப்பெயர் சுகுணேஸ்வரி. இவரும் மற்றவர்களும் சுருக்கமாக சுகுணா என்று அழைக்கிறார்கள் “
“ எனக்கும் பல பெயர்கள் இருக்கின்றன தெரியும்தானே…? இந்தப்பெரிய வீட்டில் இருப்பது நீயும் உன்ர புருஷனும் மாத்திரம்தான். இதனை துப்புரவுசெய்து சுத்தமாக வைத்திருப்பதற்காகவாவது உன்ர புருஷன் உனக்கு உதவுகிறாரா..? “
“ அவருக்கு இயலாதம்மா. அவர் இதய நோயாளி. சில வருடங்களுக்கு முன்னர் பைபாஸ் சத்திர சிகிச்சையும் செய்தவர். அத்தோடு நீரிழிவு, ஆஸ்த்மா, ஆர்த்ரைட்டீஸ், பிரஷர், அல்சர்… இப்படி சில உபாதைகளும் இருக்கின்றன. எல்லாம் அவர் தினமும் எடுக்கும் மாத்திரை மருந்துகளின் பக்க விளைவுகள்தான். “
சரஸ்வதி அதனைக்கேட்டுவிட்டு, சங்கரலிங்கம் பக்கம் திரும்பி பரிதாபப்பார்வை ஒன்றை உதிர்த்தாள்.
“ சரி… இந்த ஆளுக்கு இத்தனை உபாதைகள். உனக்கு எத்தனை..? “
“ எனக்கு கொஞ்சம் பிரஷர் இருக்கிறதம்மா. “
“ இந்த ஆளை கட்டிய பிறகு வந்திருக்கலாம் “ என்றாள் சரஸ்வதி.
“ அம்மா… வந்தது முதல் நின்றுகொண்டே பேசுகிறீர்கள். இங்கே எங்கள் வீட்டில் இன்று சரஸ்வதி பூசை நாளன்றே நேரில் வந்து காட்சி தந்துள்ளீர்கள். நாம் அதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை தாயே….. எம்மை முதலில் ஆசிர்வாதியுங்கள். அதன் பிறகு நீங்களும் நான் இன்று படையலுக்கு செய்த உணவுப்பதார்த்தங்களை சாப்பிட வேண்டும் “ எனச்சொல்லிக்கொண்டே சுகுணா, சரஸ்திவதியின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து பாதங்களை தொட்டு வணங்கினாள்.
அந்த மென்மையான பாதங்களில் குளிர்மை தோய்ந்திருந்தது. அங்கு பிரகாசமான வெளிச்சம் பரவியிருந்தமை கண்டு அவள் மெய்சிலிர்தாள்.
சங்கரலிங்கமும் சரஸ்வதியின் பாதங்களை பணிந்து வணங்கினார். ஆனால், தீண்டவில்லை.
சுகுணா ஒரு வெள்ளித்தட்டத்தில் படைக்கப்பட்ட பதார்த்தங்களை பக்குவமாக எடுத்துவைத்து பரிமாறி சரஸ்வதியிடம் நீட்டினாள்.
“ வடையில் எண்ணெய்… கடலையிலும் எண்ணெய்… அவல், பொங்கல், மோதகத்தில் இனிப்பு… இவ்வளவும் சங்கரலிங்கத்திற்கு ஆகாது அல்லவா..? உங்கள் இரண்டுபேருக்காக ஏன் இவ்வளவு செய்திருக்கிறாய் சுகுணா..? “
“ மிஞ்சினால்… எங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து நாளையும் சாப்பிடலாம் தாயே… “
“ இதனைத்தானே இந்த புகலிடத்தில் எல்லா வீடுகளிலும் செய்து வருகிறீர்கள். பழுதடைந்துவிட்டால் கழிவுகளுடன் கொட்டிவிடுவீர்கள். இவ்வாறு இங்கே எத்தனை வீடுகளில் தேவைக்கு அதிகமாக சமைத்து சாப்பிடாமல் வெளியே கொட்டுகிறார்கள் தெரியுமா…?
சரஸ்வதி தட்டத்தை காலிசெய்துவிட்டு சுகுணாவிடம் நீட்டினாள்.
“ அம்மா… இன்று ஏன் எங்களைத்தேடி வந்தீர்கள்… ? அதிலும் இந்த கொரோனோ காலத்தில் நகரம் முடக்கப்பட்டுள்ள வேளையில் எப்படி வந்தீர்கள்..? வழியில் எவரேனும் உங்களை தடுத்து விசாரிக்கவில்லையா..? நீங்கள் முகக்கவசமும் அணியாமல் வேறு வந்துள்ளீர்கள். பொலிஸிடம் பிடிபட்டால் தண்டப்பணம் செலுத்தநேரும் அம்மா. “ சங்கரலிங்கம் மிகவும் பவ்வியமாகச் சொன்னார்.
“ நான் யாவும் தெரிந்துகொண்டுதான் வந்திருக்கின்றேன். இதோ பார்… என்னிடம் ஒன்றல்ல… நான்கு முகக்கவசங்கள் இருக்கின்றன. “ எனச்சொல்லிக்கொண்டே சரஸ்வதி வலது கை விரல்களை விரித்து காண்பித்தாள். அங்கு பல வர்ணங்களில் முகக்கவசங்கள். மீண்டும் விரல்களை மடித்து திறந்தாள். அவற்றை காணவில்லை.
சங்கரலிங்கத்திற்கும் சுகுணாவுக்கும் கடந்த ஆண்டு அவர்களின் வீட்டருகில் அமைந்துள்ள ஷொப்பிங் சென்டருக்கு வந்து குழந்தைப் பிள்ளைகளுக்கு மெஜிக் ஷோ காண்பித்த முகம் மறந்துபோன மனிதன் நினைவுக்கு வந்தான்.
“ சங்கரலிங்கம் இன்று நான் இந்த சரஸ்வதி பூசை நாளில் உன்னைப்பார்க்க ஏன் வந்திருக்கின்றேன் தெரியுமா..? “
“ இல்லை தாயே…! நீங்கள் இப்படி வந்து காட்சி கொடுத்த அதிர்ச்சியிலிருந்தே இன்னமும் நாமிருவரும் மீளவில்லை. சொல்லுங்கள் தாயே.. “ சங்கரலிங்கம் குனிந்து வணங்கி கேட்டார்.
“ அம்மா… நீங்கள் அருந்துவதற்கு பால் எடுத்துவரட்டுமா… “ சுகுணா அருகே வந்துகேட்டாள்
“ அருந்திவிட்டேனே… அங்கே பார்… “ என்று சரஸ்வதி காண்பித்த சுவாமி அறையில் எட்டிப்பார்த்தாள் சுகுணா. அங்கு படையலுடன் வைக்கப்பட்டிருந்த பால் தம்ளர் காலியாக இருந்தது.
அவளுக்கு மீண்டும் ஷொப்பிங் சென்டரில் கண்ட மெஜிக்காரன்தான் நினைவுக்கு வந்தான்
சரஸ்வதியும் சங்கரலிங்கமும் அந்த வீட்டின் விசாலமான கூடத்தில் எதிரெதிராக அமர்ந்தனர். அவர் முதலில் அமரத் தயங்கினார். சரஸ்வதிதான் அமருமாறு சைகை செய்தாள்.
“ உன்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் “
“ கேளுங்கள் தாயே… என்ன கேட்கப்போகிறீர்கள்..? “ சங்கரலிங்கம் தயங்கினார்.
“ நீ எத்தனை வருட காலமாக இப்படி எனக்காக சரஸ்வதி பூசையும் நடத்தி சகல கலா வல்லிமாலையும் பாடுகிறாய்…? “
“ அம்மா… தாயே.. நான் ஊரில் ஆரம்ப வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து மட்டுமல்ல, பல்கலைக்கழகம் சென்றும் பாடியிருக்கின்றேன். அது மட்டுமில்லை தாயே. நான் இலங்கையில் ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும்போதும் சரஸ்வதி பூசை காலத்தில் எங்கள் அலுவலகத்திற்கு அமைச்சர்களையெல்லாம் அழைத்து சிறப்பாக கலைமகள் விழாவை நடத்தியிருக்கின்றேன். அதுமட்டுமல்ல உங்களுக்குத் தெரியும்தானே, ஏ.பி. நாகராஜன் என்று ஒரு சினிமா இயக்குநர் இருந்தார். அவர் பல புராணப்படங்கள் எடுத்தவர். அவர் எடுத்த சரஸ்வதி சபதம் படம் கொழும்பில் வெளியானபோது, நானே பல சிங்கள ஊழியர்களை அழைத்துச்சென்று டிக்கட் வாங்கிக்கொடுத்து அந்தப்படத்தை பார்க்க வைத்துள்ளேன். நானும் சுகுணாவும் அதனை பலமுறை பார்த்துள்ளோம். ஆனாலும் ஒரு கவலை இருக்கிறது தாயே… “
“ என்ன சொல்லு…? “
“ அந்தப்படத்தில் சரஸ்வதியாக நடித்த நடிகையர் திலகம் சாவித்திரி, பின்னாளில் மதுவுக்கு அடிமையாகி குடித்துக்குடித்தே செத்துப்போனாள்.. அவளைப்பற்றியும் ஒரு படம் வந்திருக்கிறது. “ என்றார் சங்கரலிங்கம்.
“ அவளை விடு. அவள் நடிகை. நடிகைகள் எல்லாம் சரஸ்வதி ஆக முடியுமா..? “
“ நாம் எமது குலதெய்வமாக உங்களைத்தான் வணங்குகின்றோம். எமது மூத்த மகளுக்கு கலைவாணி என்றும் இரண்டாவது மகளுக்கு கலைச்செல்வி என்றும் மகனுக்கு கலைவாணன் என்றும்தான் பெயர்வைத்துள்ளோம். பேரக்குழந்தைகளுக்கு சரஸா, வாணி, கலா தேவி என்றெல்லாம் பெயர்வைத்துள்ளோம். “
“ பெரிய பக்திமான் போன்று பேசுகிறாய்… “
“ ஆமாம் அம்மா. அது எங்கள் பரம்பரை எமக்கு விட்டுச்சென்ற பண்பாட்டுக்கோலம். நாம் இலங்கையில் கந்தபுராணக் கலாசாரம் மிக்க மாநகரிலிருந்து வந்தவர்கள். அப்படித்தான் இருப்போம் “ என்றார் சங்கரலிங்கம்.
“ அப்படியா…? அந்த மாநகரத்தில்தான் இந்த நவராத்திரி காலத்தில் ஒரு சீருடை தரித்த பொலிஸ் அதிகாரி ஆலயத்துக்குள் பாதணியுடன் வந்திருக்கிறான் அல்லவா..? “
“ ஆம் தாயே முகநூலில் பார்த்தேன். அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் “
“ எப்படி எடுப்பாய்… ? நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியவர்களுக்கே இப்போது பொது மன்னிப்பு கிடைக்கும் காலத்தில், போயும் போயும் ஒரு சப்பாத்துக்காலுக்கா தண்டனை கிடைக்கப்போகிறது…?! அது கிடக்கட்டும், நீ வருடாந்தம் வெளிநாட்டுப்பயணங்கள் செல்வாய். தல யாத்திரையெல்லாம் போவாய் அல்லவா..? “ சரஸ்வதி இருவரையும் மாறி மாறிப்பார்த்து கேட்டாள்.
“ ஆமாம் அம்மா. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும்தான் போகவில்லை. காரணம் உங்களுக்குத் தெரியும்தானே.. கொரோனோ பெருந்தொற்று இன்னமும் அடங்கவில்லை. இல்லையென்றால் இம்முறையும் காசி , இராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் , சிதம்பரம், புட்ட பர்த்தி , எங்கும் சென்று வந்திருப்போம். ஊரிலும் கடந்த இரண்டு வருடமாக சதுர்த்திக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. “ என்று தாம் செல்லும் இலங்கை – இந்திய தல யாத்திரைகள் பற்றி சங்கரலிங்கம் விஸ்தாரமாக எடுத்துரைத்தார்.
“ சரி… நீ சொல்வது அனைத்தும் எனக்குத் தெரியும். தல யாத்திரைக்கும் ஊர் கோயில் திருவிழாவுக்கும் நீயும் உனது மனைவியும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். “
“ ஆனால், என்ன செய்வது தாயே… இவ்வளவு புண்ணியம் செய்தும் எனக்கிருக்கும் நோய் உபாதைகள் குறையவில்லை தாயே… “
“ குறையாது… நிச்சயம் குறையாது…. “
“ ஏன் தாயே… என்ன இப்படிச்சொல்லிவிட்டீர்கள். “
“ எனக்கு எத்தனை பெயர் தெரியும்தானே… சொல் “ சரஸ்வதி , சங்கரலிங்கத்தை ஏறிட்டுப்பார்த்துக்கேட்டாள்.
“ சரஸ்வதி, வாணி, கலைமகள், நாமகள், ஹம்சவாகினி, ஜகநி, புத்திதாத்ரி, வாணீஸ்வரி, வரதாயினி… மேலும் இருக்கின்றன. ஆனால், இப்போது நினைவுக்கு வரவில்லை.
“ பாரதி என்றும் ஒரு பெயர் இருக்கிறது. தெரியுமா..? “
“ ஆம்… அந்தப்பெயரில் ஒரு பெரிய கவிஞர் இருக்கிறார். மகாகவி பாரதியார். “
“ ஆம். அதெல்லாம் உனக்குத் தெரிகிறது…. ஆனால், அவர் சொன்னதுதான் உனக்குத் தெரியவில்லை. . “ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் , அன்னவாயினும் புண்ணியங்கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “ என்றும் அவர் எழுதிவைத்துவிட்டு போய்விட்டார். நீ தல யாத்திரைக்கு எவ்வளவு செலவு செய்திருப்பாய். வருடாந்தம் கோயில் உற்சவங்களுக்கு எவ்வளவு பணம் அனுப்பியிருப்பாய். ஏன்… இன்றைக்குக் கூட உங்கள் இரண்டுபேருக்காக இவ்வளவு உணவுப் பதார்த்தங்கள் படைத்து, மிஞ்சுவதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து இரண்டு நாட்களில் வீசப்போகிறீர்கள். இந்தப்பணத்தையெல்லாம் உனது பூர்வீக ஊரில் தாய், தகப்பன் இல்லாத ஒரு ஏழைப்பிள்ளையின் கல்விக்கு கொடுத்து உதவியிருக்கலாம்தானே..? “ எனக்கேட்டாள் சரஸ்வதி.
“ தாயே… நான் சரஸ்வதி பூசை காலத்தில் எல்லாம் கவிதைகள் எழுதி பத்திரிகைகள், முகநூலில் எல்லாம் வெளியிட்டு வருகிறேன். அவ்வாறு செய்தாலும் புண்ணியம் கிடைக்காதா..? “ - சங்கரலிங்கம் எழுந்து சென்று ஒரு பெரிய கொப்பியை எடுத்துவந்து காண்பித்தார். அதில் சில பக்கங்களில் அவர் எழுதிய கலைமகள் பற்றிய கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகளின் நறுக்குகள் ஒட்டப்பட்டிருந்தன. சில மஞ்சள் நிறமாக மங்கியும் இருந்தன.
சரஸ்வதி வேகமாக அவற்றை படித்துப்பார்த்தாள். சில கவிதைகளின் வரிகள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்பட்டிருந்தன. சங்கரலிங்கத்தின் கற்பனை வரட்சியையும் சரஸ்வதி இனம் கண்டாள்.
“ எல்லாம் சரி… சங்கரலிங்கம்… எனது கேள்வி இதுதான்… என்னை நினைத்து நீ உனது வாழ்நாளில் இவ்வளவு செயல்களை செய்திருக்கிறாய்…? ஆனால், என்றைக்காவது ஒரு ஏழைப்பிள்ளையின் கல்வித் தேவைக்கு நீ உதவியிருக்கிறாயா.. அதற்காக ஒரு சதமேனும் செலவழித்திருக்கிறாயா..? இதனைக்கேட்கத்தான் இன்று இங்கே வந்து உனக்கு காட்சியளித்தேன். முகநூலில் நேரத்தை செலவுசெய்வதை விடுத்து , உனது மனைவிக்கும் வீட்டு வேலைகளில் உதவி செய். அவள்தான் உனக்கு வேர். அதனால்தான் நீ வீழ்ந்துவிடாதிருக்கிறாய் . நான் புறப்படுகின்றேன் “
சாத்தியிருந்த கதவின் ஊடாகவே சரஸ்வதி வெளியேறிச்சென்றாள்.
சங்கரலிங்கத்திற்கு மேலும் வியர்த்தது. சுகுணா துடைப்பதற்கு டவலை எடுத்து வந்து நீட்டினாள்.
அதற்கும் அவள்தான் அவருக்குத் தேவைப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.