எழுத்தாளர் தேவன் (யாழ்ப்பாணம்) ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தைத் தமிழில் 'பெண்பாவை' என்னும் பெயரில் நாடகமாக்கியதாக எழுத்தாளர் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றித் தினகரன் பத்திரிகையில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது."
'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்' நூலிலும் அறுபதுகள், எழுபதுகளில் வெளியான நாடகங்களிலொன்றாகப் 'பெண் பாவை' குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தேவனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
என் பால்ய , பதின்ம வயதுகளில் இவரது 'மணி பல்லவம்' நாவல் என்னிடமிருந்தது. றோபேர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் புகழ்பெற்ற நாவலான 'புதையல் தீவு' (Treasure Island) நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு. எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நாவல்களிலொன்று. தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆய்வுக்குரியதோர் விடயம்.
இப்பதிவினை முகநூலில் இட்டிருந்தபோது எழுத்தாளர் அ.யேசுராசா பின்வருமாறு கூறியிருந்தார்: "யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த வேர்ணன் அபேசேகரவின் நெறியாள்கையில் இது மேடையேற்றப்பட்டதாகப் பின்னர் அறிந்திருக்கிறேன்." இது பற்றிய மேலதிக விபரங்களையும் விசாரித்துப் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் மேற்படி நாடகம் பற்றி மேலதிகத் தகவல் அறிந்தவர்கள், நாடகத்தைப் பார்த்தவர்கள் அது பற்றி அறியத்தரவும். நாடகத்தை அவர் பத்திரிகை, சஞ்சிகை ஏதாவதொன்றில் எழுதினாரா? நாடகம் பற்றி எங்காவது விமர்சனம் வந்துள்ளதா என்பது பற்றிய தகவல்களிருப்பின் அவற்றையும் பகிர்ந்துகொள்ளவும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.