தமிழை வளர்ப்பது என்றால் எப்படி? தமிழ் நூல்களை அதிக அளவில் தேடிப்பிடித்து இணையத்தில் அல்லது அச்சில் வெளியிடலாம். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை , வெளியிட்ட சஞ்சிகைகளை, நூல்களை, பத்திரிகைகளைச் சேகரிக்கலாம். ஆனால் இவற்றைச் செய்வதற்கு மிகுந்த உழைப்பு தேவை. பலரின் பங்களிப்பு தேவை. ஆனால் இவற்றையெல்லாம் பல சுய இலாபமற்று இயங்கும் அமைப்புகள் செய்து வருகின்றன. உதாரணத்துக்கு மதுரைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். நூலகம் அறக்கட்டளையைக் குறிப்பிடலாம். இணையக்காப்பகத்தில் கூட (Archive.org)) பல அரிய தமிழ்ப்படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியை வளர்ப்பதற்கு உதவ விரும்பினால் இவை போன்ற இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்குக் கொடுங்கள். உதவுங்கள். ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இவற்றை விட எவற்றைச் சாதிக்கப்போகின்றது? எத்தனை மில்லியன்கள் சேர்த்துள்ளார்கள். 2030இல் பார்ப்போம் ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தமிழ் இருக்கை தமிழ் மொழி வளர்க்க என்ன செய்திருக்கின்றதென்று.
இப்பல்கலைக்கழகத்தமிழ் இருக்கை மேலும் நிதி சேகரிக்க உதவக்கூடும். ஆளுமைகளுக்குப் பெருமை சேர்க்க உதவக்கூடும். ஆனால் தமிழ் வளர்க்க இவை உதவப்போவதில்லை. ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மதுரைத்திட்டம், நூலகம் போன்ற அமைப்புகளின் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களுக்கு கொடுக்க வேண்டும். கொடுத்தால் அவை வளர அது நிச்சயம் உதவும்.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒருமுறை சிறைக்கைதி ஒருவர் மேற்படி இருக்கைக்கு நிதி அளித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது அச்சிறைக்கைதி கூறினாராம் "ஹார்வர்டு உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் வளராது; வெளிநாட்டில் இப்படியான பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் வளரும். அதனால்தான் பணம் அனுப்பினேன்" என்று . பாவம் அந்தச் சிறைக்கைதி. தமிழ் இன்று வரை நிலைத்து நிற்பதற்கே காரணம் தமிழகம் தான் என்பதை உணராத சிறைக்கைதி.
இன்று தமிழ் மொழி வளர்கிறதென்றால் , இன்னும் இப்புவியில் நிலைத்து நிற்கின்றதென்றால் அதற்கு முக்கிய காரணம்: தமிழகத்தமிழர்கள்தாம். அவர்கள் சங்க காலத்திலிருந்து ஆற்றி வந்த தமிழ்ப்பணிதான் முக்கிய காரணம். சேகரித்து வந்த தமிழ் இலக்கியப் படைப்புகள்தாம் முக்கிய காரணம். இன்றும் தமிழ் எழுத்தாளர்கள் ஆற்றிவரும் பங்களிப்புத்தான் முக்கிய காரணம். ஆனால் இன்றும் தமிழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் தமது நூல்களைச் சுயமாக வெளியிடுவதற்குப் போதிய வாய்ப்புகளில்லை. இந்நிலை மாற வேண்டும். ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு நிதி சேகரிப்பவர்கள் தமிழகத்தின், உலகத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் திட்டங்களுக்கு நிதி சேகரிக்கலாம். தமிழ் எழுத்தாளர்கள் தம் தமிழை, தமிழ் எழுத்தை நம்பி வாழும் சூழலை ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்தலாம். எழுத்தாளர்களின் நூல்களை வாங்கி உலகத்தமிழ் நூலகங்களுக்கு வழங்கலாம். இவ்விதம் பலவற்றைச் செயற்படுத்தலாம். இவ்விதம் செய்தால் நிச்சயம் தமிழ் மேலும் வளரும். நிலைத்து நிற்கும்.