'மண்ணின் குரல்' - என் ஆரம்ப நாவல்களின் தொகுப்பு. - வ.ந.கிரிதரன் -
- மண்ணின் குரல் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியானது (1998) -
'மண்ணின் குரல்' என் ஆரம்ப கால நாவல்களின் தொகுப்பு. குமர்ன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளியானது. இதிலுள்ள நாவல்கள் பெரு நாவல்கள் அல்ல. சிறு நாவல்கள். இவற்றில் 'மண்ணின் குரல்' மொன்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. இறுதி அத்தியாயம் வெளி வராமல் , முழுமைபெறாமல் நின்று போனதற்குக் காரணம் சஞ்சிகை நின்றுபோனதுதான். பின்னர் முழுமையாக்கப்பட்டு , 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள், கவிதைகளுடன் ஜனவரி 1987இல் மங்கை பதிப்பக வெளியீடாக நூலுருப் பெற்றது. இதனால் கனடாவில் நூலுருவில் வெளியான முதலாவது தமிழ் நாவல் மண்ணின் குரலென்று கூறலாம்.
மண்ணின் குரல் நாவல் இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வெடித்தெழுந்தபோது , எவ்விதம் இளைஞர்கள், யுவதிகள் போராட்டத்தில் இணைகின்றார்கள் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறு நாவல்.