உணர்வுசார் நுண்ணறிவை வளர்ப்போம்! - ஸ்ரீரஞ்சனி -
- இன்று பெப்ருவரி 3 'உங்கள் குழந்தையை நூலகத்து அழைத்துச் செல்லுங்கள் தினம்' (Take Your Child to the Library Day). அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. -
உணர்வுகளை அடையாளம்காண்பதற்கும், அவற்றை விளங்கிக்கொள்வதற்கும், தகுந்த முறையில் அவற்றைக் கையாள்வதற்குமான திறன், உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. இது எம்மைச் சூழவுள்ளவர்களுடன் வினைத்திறனாகத் தொடர்புகொள்வதற்கும், எமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், எமது மனத்தகைப்பைக் குறைப்பதற்கும் உதவிசெய்கிறது.
வாழ்க்கைக்கு அவசியமான இந்த உணர்வுசார் நுண்ணறிவைப் பயிற்சியின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளமுடியும். உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாக இருக்கும்போது, நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகச் செய்யவும், எமது உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உறவுகளை நல்ல முறையில் பேணவும் அது உதவும்.
எமது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது வேலையிலோ உணர்வுசார் நுண்ணறிவு அதிகமாகவிருக்கும் ஒரு சிலரையாவது நாம் சந்தித்திருப்போம். எந்த நிலைமையிலும் எம்மை எரிச்சலூட்டாமல் அல்லது புண்படுத்தாமல் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அத்துடன், தமது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்திருக்கும் அவர்களால், கண்டனங்களை ஏற்றுக்கொள்ளவும், பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை, அமைதியான முறையில் காணக்கூடியதாகவும் இருக்கும். எமது பிரச்சினைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, தீர்வொன்றைக் காண்பதற்கு அது உதவாமல் போனாலும்கூட, எம்மில் அவர்கள் காட்டும் கரிசனை எமக்கு ஆறுதலைத் தரும்.