திரைப்படம் விமர்சனம்: இந்தியன் – 2 - சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்! - முருகபூபதி -
வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து, அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில் பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில், தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில், சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்து அதில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்திய தேசத்தில் நீடித்திருக்கும் ஊழலை, சொத்து சேகரிப்பை , கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து, கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது. இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது.