* ஓவியம் - AI
மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக மறதி நோயும் மாறிவருவதை நாங்கள் பார்க்கின்றோம். மனிதரின் ஆயுள் காலத்தை மருத்துவத் துறையின் முன்னேற்றம் அதிகரித்திருப்பதால், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் அளவும் அதிகரித்திருக்கின்றது என்றும் நாங்கள் பொருள்கொள்ளலாம். அதேவேளையில் ஒருவரின் வாழ்க்கைமுறையும் இதற்குப் பங்களிக்கிறது என்பதும் விஞ்ஞானம் கூறும் ஓர் உண்மையாகும். மறதி நோயை விளங்கிக்கொள்வது, அதன் அறிகுறிகளை விரைவில் இனம்காண்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்குத் தேவையான உதவிகளைப் பெற்று, வாழ்க்கைத் தரத்தை ஓரளவாவது பேணிக்கொள்வதற்கும் உதவிசெய்யும்.
மனித மூளையைப் பாதிக்கும் பல்வேறு வகையான ஒழுங்கீனங்களின் (dementia) மிகப் பொதுவான ஒரு ஒழுங்கீனமாக அல்சைமர் நோய் (Alzheimer's disease) காணப்படுகிறது. (Alzheimer’s Association, 2024). இந்த நோய் யாருக்கும், எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும்கூட, 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமே இது அதிகமாகக் காணப்படுகிறது.
மூளையிலுள்ள புரதங்களான beta-amyloid மற்றும் tauஇல் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், plaques மற்றும் tangles (புரதக்கட்டிகள், இறந்த நரம்புகளின் சுருக்கங்கள்) உருவாகக் காரணமாகின்றன என்றும், அவை நரம்புக் கலங்களையும், அவற்றின் இணைப்புக்களையும் சேதப்படுத்துவதால் மூளையின் செயற்பாடு பாதிக்கப்படுகின்றது என்றும் ஜேர்மன் மருத்துவரான Alois Alzheimerதான் முதன்முதலாக அல்சைமர் நோய் பற்றி விபரித்திருந்தார் (Alzheimer’s Association, 2024).
மனிதர்களின் சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், திட்டமிடும் திறன், மொழித் திறன், தொடர்பாடல் திறன், ஞாபகசக்தி, காலம் மற்றும் இடம் தொடர்பான விளக்கம், சூழல் பற்றிய விழிப்புணர்வு போன்ற வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளுக்கும், நடத்தைகளுக்கும் மூளையும், அதன் 100 பில்லியன் நரம்புக் கலங்கள் உருவாக்கும் தொடர்பாடல் வலையமைப்புக்களும் உதவிசெய்கின்றன. எனவே மூளைக் கலங்கள் செயலிழக்கும்போது, மூளையில் ஏற்படும் பரவலான சிதைவுகள் மூளையுடன் இணைந்த தொழில்பாடுகளைப் பாதிக்கின்றன, அதுவே அல்சைமர் நோய்க்குக் காரணமாகின்றது (Alzheimer’s Association, 2024). இந்தச் சேதங்கள் மீட்சியடைய முடியாத சேதங்களாக இருப்பதால், காலப்போக்கில் அல்சைமர் நோய் மோசமானதொரு நிலையை அடைகிறது, அதனால் மறதி நோயுடன் வாழும் நோயாளர்கள், ஒரு கட்டத்தில் நாளாந்தச் செயல்பாடுகளைக்கூடச் செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
மருத்துவர்களால் இந்த நோய் கண்டறியப்படல், “மறதி நோயின் ஆரம்பக் கட்டத்தை” அடையாளப்படுத்துகின்றது (Alzheimer Society Canada, 2012). பல்வேறுபட்ட காரணிகளால் தூண்டப்படுகின்ற இந்த நோய், முதுமையின்போது இயற்கையாக நிகழும் மாற்றங்களிலிருந்தும், மறதியிலிருந்தும் மிகவும் வேறுபட்டதாக இருக்கும், ஆனால் அவற்றை அது மேலும் துரிதப்படுத்தும்.
அல்சைமர் நோயின் பொதுவான அறிகுறிகள்:
இலகுவான சொற்களைக்கூட மறந்துவிடல்
கிரகிப்பதில் பிரச்சினை
வசனங்களைப் பூர்த்திசெய்ய முடியாமை
தாமதமான பதிலளிப்பு
குளிரூட்டிக்குள் கைக்கடிகாரத்தை வைத்தல் போன்ற பொருத்தமற்ற செயல்கள்
ஓரிடத்துக்குச் சென்றால் எப்படி அங்கு சென்றது என்பதோ அல்லது வீட்டுக்கு எப்படித் திரும்பிச்செல்வது என்பதோ தெரியாமல் இருத்தல்
காலநிலைக்குப் பொருத்தமற்ற ஆடைகளை அணிதல்
மனநிலை, ஆளுமை மற்றும் நடத்தையில் மாற்றங்கள்
தொட்டுணர முடியாத விடயங்கள் பற்றிச் சிந்திப்பதில் பிரச்சினைகள்
அல்சைமர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து இதனைப் பொதுவாக மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம் (Alzheimer’s Society Canada, 2022).
1. ஆரம்ப நிலை:
பாதிப்புக்குள்ளானவர்கள் சுதந்திரமாகச் செயல்படக்கூடும், இருப்பினும் நினைவாற்றல் மற்றும் சமூகரீதியான செயல்பாடுகளில் அவர்களுக்குச் சிரமங்கள் இருக்கும். உ+ம். காலையில் என்ன சாப்பிட்டது என்பதை மறந்துவிடல், அடுப்பை அணைக்க மறத்தல், எதைச் சொல்லவருகிறார்கள் என்பதைச் சரியாகச் சொல்லமுடியாமலிருத்தல்.
அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய உத்திகள்
• குறிப்புகள், நாள்காட்டிகள், அலாரங்கள், குறித்த நேரத்துக்கான குளிகைகளைக் கொண்ட pill dispenser பயன்படுத்தல்
• தொலைபேசிக்கு அருகில் அவசரகால நிலைக்கான இலக்கங்களைக் கொண்ட அட்டைகளை வைத்தல்
• மூளையைத் தூண்டும் செயல்பாடுகளில் (crosswords, puzzles) ஈடுபடுத்தல்
• முதியோருக்கான பகல் நிகழ்ச்சிகளில் (programs) பங்குகொள்ளச் செய்தல்
• அவர்களுடனான தொடர்பாடல்கள் தெளிவாகவும் அன்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்தல்
• நண்பர்களுடனும் குடும்பத்தவர்களுடனும் அவர்கள் தொடர்பில் இருப்பதை உறுதிசெய்வதற்காக கிரமமான சந்திப்புக்களை ஒழுங்குசெய்தல் அல்லது Facebook போன்ற சமூக ஊடகங்களில் ஈடுபடுத்தல்
* வாழ்க்கையின் முடிவு தொடர்பான தெரிவுகள், மருத்துவரீதியான மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உள்ளடங்கலாக முன்கூட்டிய பராமரிப்புத் திட்டமிடல் பற்றி மறதி நோயுடன் வாழும் நோயாளர்களுடன் குடும்பத்தவர்கள் பேசுவதும், உயில், தத்துவப்பத்திரம் போன்றவற்றை எழுதுவது பற்றி யோசிக்கச் செய்வதும் நல்லது. அத்துடன் கார் ஓட்டமுடியாத நிலை ஒரு கட்டத்தில் வரும் என்பதை அவர்களுக்கு நேரத்துடனேயே தெரியச்செய்தல், அந்த நேரம் வரும்போது அவர்கள் அதைக் கையாளுவதைச் சுலபமாக்கலாம்
2. இடை நிலை:
பாதிப்புக்குள்ளானவர்கள் அதிக மறதியுள்ளவர்களாகவும், மனநிலை நேரத்துக்கு நேரம் மாறுபவர்களாகவும், பராமரிப்பு அதிகம் தேவைப்படுபவர்களாகவும், பெரிதாகத் தனித்தியங்க மாட்டாதவர்களாகவும் இருக்கக்கூடும். உ+ம். உறவினரின் பெயரை மறந்துவிடல், பேரப்பிள்ளைகளைத் தங்களின் பிள்ளைகளாகக் கருதல், தானாகச் சாப்பிட, குளிக்க முடியாமை, விரைவில் கோபமடைதல்/விரக்தியடைதல்
அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய உத்திகள்:
• வழங்கும் செய்திகளைத் தெளிவாக்குவதற்கான உடல் சைகைகளைப் பயன்படுத்தல்
• தெரிவுகளின் எண்ணிக்கையை ஒன்று அல்லது இரண்டாக எல்லைப்படுத்தல் உதாரணம், “தேநீர் வேண்டுமா?” அல்லது “சாப்பாடு வேண்டுமா?”
• அவர்களுக்குப் பிடித்த இசையை அல்லது நிகழ்ச்சியைக் கேட்கச்செய்தல்
• அவர்களுக்குப் பொருத்தமான நேரங்களுக்குச் செயல்பாடுகளை (உணவுண்ணல், குளித்தல் போன்றவை) மாற்றல்
3. இறுதி நிலை:
இந்த நிலையில் உறவினர்களை அல்லது நண்பர்களை மறதி நோயுடன் வாழ்பவர்களால் அடையாளம் காணமுடியாதிருக்கும். அத்துடன் தொடர்பாடவோ, தங்களைக் கவனிக்கவோ அவர்களால் இயலாமலிருக்கும். அதனால் 24 மணி நேரப் பராமரிப்புத் தேவைப்படலாம்.
பயனுள்ள உத்திகள்
• தொலைக்காட்சி மற்றும் கவனச்சிதறல்கள் அற்ற, அமைதியான மற்றும் இரைச்சலற்ற சூழலில் உணவை வழங்கல்
• கழிப்பறைக்கான அட்டவணை ஒன்றை உருவாக்கல்
• அவர்களுக்குப் பிடித்தமான பாடல்களை, தேவாரங்களை, பிரார்த்தனைகளை ஒலிக்கச்செய்தல்/ பாடுதல் / வாசித்தல்
• அவர்களுடன் அமைதியாகப் பேசுதல், கதைகள் சொல்லல், கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தல்
அல்சைமர் நோயுடன் வாழும் ஒருவர் அந்த நோயின் இறுதிக் கட்டத்தில் இருக்கும்போது, அவரின் வாழ்க்கைக் காலத்தின் நீட்சி மற்றும் சிகிச்சையில் அன்றி, அவரின் வாழ்க்கைத் தரம் மற்றும் செளகரியம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தப்பட வேண்டும். (Alzheimer Society Canada, 2022).
ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மறதி நோய் வகைகள் இருந்தால், அது வேறுபட்ட மறதி நோய்களின் கலவையாக இருக்கும் (National Institute of Neurological Disorders and Stroke, n.d). Alzheimer’s disease மற்றும் Vascular dementia (மூளைக்கான குருதி விநியோகத்தில் ஏற்படும் தடையால் ஏற்படும் மறதி நோய்) ஆகிய இரண்டும் இணைந்திருப்பது வேறுபட்ட மறதி நோய்களின் கலவையின் மிகப் பொதுவான ஒரு வடிவமாகும். வேறுபட்ட மறதி நோய்களின் கலவை இருப்பதற்கான சாத்தியம் வயதுக்கேற்ப அதிகரிக்கிறது, 85 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களில் இது அதிகமாக உள்ளது.
Vascular Dementia (மூளைக்கான குருதி விநியோகத்தில் ஏற்படும் தடையால் ஏற்படும் மறதி நோய்) க்குப் பக்கவாதம் பொதுவான ஒரு காரணமாகும். அல்சைமர் நோய்க்கு அடுத்ததாக மறதி நோயின் பொதுவான இரண்டாவது வகை இதுவாகும் (National Institute on Aging). இதன்போது அல்சைமர் நோயின் அறிகுறிகளுடன் தசைகளின் அசைவுகள் மற்றும் ஒருங்கிணைப்பிலும், பார்வைப் புலனிலும் பிரச்சினைகள் இருக்கலாம். அதிக கொலஸ்ரோல், உயர் குருதியமுக்கம், அதிக உடல் பருமன், நீரிழிவு மற்றும் மாரடைப்பு நோய், புகைத்தல் போன்றவை இந்த நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.
அடுத்த வகையான Frontotemporal Dementia (முன்பக்க மூளையின் நரம்புக்கலங்களில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் மறதி நோய்) அல்சைமர் நோயுடன் ஒப்பிடுன்போது ஏற்படுவது குறைவாகவுள்ளது. இது இளம் வயதினரையே பொதுவாகப் பாதிக்கிறது, அத்துடன் இது விரைவாகத் தீவிரமடைகிறது.
* மறதி நோய் ஒவ்வொருவரிலும் வித்தியாசமாக வெளிப்படலாம், அத்துடன் நோய்க்குறிகள் தீவிரமடைதல் மற்றும் அவற்றின் சேர்க்கைகள் மாறுபடலாம் என்பதைக் கருத்திலெடுத்தல் முக்கியமாகும். துல்லியமான நோயறிதல் மற்றும் தகுந்த மேலாண்மைக்கு நிபுணத்துவர்களின் மருத்துவரீதியான மதிப்பீட்டைப் பெறுவது அவசியமாகும்.
இன்னொரு வகையான Lewy Body Dementia (LBD) என்பது Lewy bodies எனப்படும் புரதங்களின் அசாதாரணமான குவியல்களால் வகைப்படுத்தப்படும் ஒரு தீவிரமடையும் மறதி நோய் ஆகும் (National Institute on Aging, 2021). இது அல்சைமர் நோயின் நோய்க்குறிகளை ஒத்திருந்தாலும் பின்வரும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கும் (National Institute on Aging, 2021).
• விழிப்புணர்வு மற்றும் தூக்கக் கலக்கங்கள்
• மாறிக்கொண்டிருக்கும் சிந்திக்கும் திறன்
• காட்சிப் பிரமைகள்/மாயத் தோற்றங்கள்
• மெதுவான உடல்ரீதியான இயக்கங்கள்
• Parkinsonian (தசை விறைப்பு, நடுக்கம்) அம்சங்கள்
பின்வருவன உள்ளடங்கலான காரணிகள் dementia உருவாகும் ஆபத்தை அதிகரிக்கலாம் (Seniors Daybreak, 2015)::
• Parkinson’s நோய் (கடுமையான தசைத்தளர்ச்சியையும் கைகால் நடுக்கத்தையும் ஏற்படுத்தும் நோய்)
• மூளையில் ஏற்படும் ஊறு
• Huntington’s disease
• Creutzfeldt-Jakob disease
• பாரதூரமான ஈரல் அல்லது சிறுநீரக நோய்
• மிக அதிகமாக மதுபானம் குடித்தல்
• Encephalitis (மூளையழற்சி)
• Brain Tumor* (மூளையில் கட்டி)
• Hydrocephalus*(மூளையில் அதிகளவிலான பாயம்)
• மன அழுத்தம்*
• மருந்துகளின் பக்க விளைவுகள்*
• தைரொயிட் பிரச்சனைகள்*
• மோசமான உணவுப்பழக்கம்*
• உயிர்ச்சத்துக் குறைபாடுகள்*
• சில தொற்றுகள்*
• 65க்கு மேற்பட்ட வயது
*குறிப்பு: இந்தப் பட்டியல் விரிவானதோ அல்லது அனைத்தையும் உள்ளடக்கியதோ அல்ல. நட்சத்திரக்குறியால் குறிக்கப்பட்டிருக்கும் நிலைகள் மீளக்கூடியதாகவோ அல்லது சிகிச்சையளிக்கக்படக்கூடியதாகவோ இருக்கலாம், இதுவும் சரியான நோயறிதலுக்காக மருத்துவர் ஒருவரை அணுகுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது (Seniors Daybreak, 2015).
அல்சைமர் நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும், ஆனால் அதனைக் குணப்படுத்த முடியாது. நினைவாற்றல் குறைவு, தொடர்பாடலில் ஏற்படும் சிரமங்கள், சிந்திக்கும் திறன் மற்றும் நடமாட்டத் திறன் குறைவு போன்ற அறிகுறிகளுக்கு உதவும் பல மருந்துகள் உள்ளன. அத்துடன் மூளையின் தொழிற்பாட்டை ஒழுங்காக்குவதற்கு சூரிய வெளிச்சம் படல் முக்கியமென்பதால் காலையிலும் சூரிய அஸ்மனத்தின் முன்பும் வெளியில் நடக்கச் செல்வதும், மதுபானம், caffein சேர்க்கப்பட்ட குடிபானங்கள், மற்றும் நிக்கொற்றினை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.
அல்சைமர் நோய் பரம்பரைக்கூடாகக் கடத்தப்படுவது மிக அரிதாகும். அதற்கான சாத்தியம் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இந்த நோய் உள்ளவரின் குடும்பத்தினர் மரபணுச் சோதனை செய்துகொள்ளமுடியும்.
மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வாழ்க்கை முறைத் தெரிவுகளை மேற்கொள்வதன் மூலம் அல்சைமர் வருவதற்கான ஆபத்தை ஒருவர் குறைக்கமுடியும், ஆனால் அது அவருக்கு அல்சைமர் வராது என்பதற்கு உத்தரவாதமல்ல என்றாலும், அது ஆபத்தைக் குறைப்பதற்கு மிகவும் வினைத்திறனான ஒரு முறையாக உள்ளது.
குறிப்பு: மருத்துவத்துறையில் மொழிபெயர்ப்பாளராக இருப்பதால் நான் பெற்றுக்கொண்ட அறிவையும், அறியும் ஆர்வத்தினால் நான் தேடியெடுத்த விபரங்களையும் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
உசாத்துணை:
McGill Dementia – Your Companion Guide
Finding Your Way – Living Safely with Dementia
https://apnahealth.org
https://www.alz.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.