முடிவுரை
உலகம் ஒரு புதிய சகாப்தத்துள் காலடி எடுத்து வைத்துள்ளது. தொழிநுட்பம், மூலதனம், உற்பத்தி, விநியோகம், மூலப் பொருட்களின் இருப்பு - இவற்றில் எதை எடுத்தாலும் - இவை மனித வாழ்வுக்கு அல்லது உலகின் அசைவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைகளாகின்றன. இற்றை நாள்வரை, இவை தொடர்பாய் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா அல்லது மேற்கு நாடுகளின் செல்வாக்கு இன்றுவரை இவை தொடர்பில் இருந்து வந்தாலும், இன்று இது குறைந்த மட்டத்திலேயே செயல்படுவதாகத் தெரிகின்றது. அதாவது, ஒப்பீட்டளவில் ஆதிக்கம் இங்கே குறைந்துள்ளதாகவே காணக்கிட்டுகின்றது.
சீனத்தின் எழுச்சியும், ரஷ்யாவின் இருப்பும், இந்தியா, பிறேசில், தென்னாபிரிக்கா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் புதிய வடிவம் - உலகின் முகத்தை இன்று மாற்றி இருப்பதாகக் கருதப்படுகின்றது.
F-35 அல்லது F-16 விமானங்கள் இன்று வீழ்ந்து நொறுங்குவது சகஜமாகியது – அவை மத்திய கிழக்கின் ஈரானிய போர்முனையாக இருக்கலாம் அல்லது உக்ரைனிய போர்முனையாக இருக்கலாம் அல்லது இந்தியா-பாக் போர்முனையாகக் கூட இருக்கலாம் - ஒரு காலத்தில், இவ்விமானங்கள், கண்ணுக்குத் தென்படாத தொழிநுட்ப வளர்ச்சியின் சாதனைகள் என போற்றிப் புகழப்பட்டிருந்தன. அதாவது, நேற்றுவரை கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்த இவ்விமானங்கள் இன்று சுட்டு வீழ்த்தப்படுவது சகஜமாயிற்று.
உக்ரைனின் போர் நிலவரம் அல்லது மத்திய கிழக்கின் ஈரானிய போர் நிலவரம் இன்று உலகத்தைப் புதிய செய்திகளுடன் அணுகுவதாக் காணப்படுகின்றது. எதிர்பாராத திருப்பங்கள், எதிர்பாராத விளைவுகள் அங்கே காணக்கிட்டுகின்றன. இஸ்ரேலிய வீடுகள், இஸரேலின் நகர்களிலேயே வைத்து தாக்கப்படுவதும் அல்லது அவர்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் இதுவரையிலும் உலகம் கேள்வியுறாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இந்நடைமுறை இன்று வித்தியாசப்பட்டுள்ளது. அந்தளவில், சீன -ரஷ்ய --இந்தியத் தொழிநுட்ப ங்கள், விண்வெளி தொடக்கம் நவீன ட்ரோன்கள் வரை வளர்ந்து நீள்வதாய் உள்ளன.
கேள்வி, இவ் வளர்ச்சியை உலகம் இனி எப்படி தாங்கி, உள்வாங்கிக் கொள்ளப் போகின்றது என்பதேயாகும்.
ஒருமுனை உலக ஒழுங்கின் வாழ்தகவு இன்று கேள்விக்குள்ளான நிலையில், இதற்கு எதிரான, உலகின் பல்முனை உலக ஒழுங்கு இன்று புதிதாய்ப் பிறந்து தன்னை நிலைநாட்டிக் கொள்வதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகின்றது. ஆனால், இது ஒரு மென்மையான, ஒய்யார பாதை அல்ல. கரடுமுரடான பயணம். பல நெளிவு சுளிவுகளைக் கொண்டது. இருக்கலாம். வேறு வார்த்தையில் கூறுவதானால், இரு அணிகளும் இறுதிவரை போராட திண்ணம் கொண்டுள்ளதை இன்றைய உலக நடப்புகள் காட்டுவதாய் உள்ளன.
சீனாவின் அண்மித்த கூற்று:
“நாடுகள் இன்று உலகின் ஒருமுனை ஒழுங்கிற்கும், பல்முனை உலக ஒழுங்கிற்கும் இடையிலான தேர்வை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எதிர்நோக்குகின்றன…. அமெரிக்க வரி விதிப்புக் கொள்கையானது இதுவரை அறியப்பட்ட அல்லது உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கும் விதிகளுக்கும் புறம்பானதாகவும் எதிரானதாகவும் இருக்கின்றது. சீனத்தைப் பொறுத்தமட்டில் வளர்முக நாடுகளுக்கான சீனாவின் வரிவிதிப்பு ஏறத்தாழ பூச்சியமாகின்றது. ஆப்ரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளுக்கும் இது முற்றாக பொருந்தும் ஒன்று” (12.07.2025).
இது சீனாவின் முகத்தை மாத்திரமல்ல, விநியோகத்திற்காக அல்லது வியாபாரத்திற்காகச் சீனத்தை அணுகக்கூடிய பல நாடுகளின் மாறிய சிந்தனைகளையும் காட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கப்போகின்றது. வேறு வார்த்தையில் கூறினால் இம்மாற்றங்கள் சீனாவின் முகத்தைப் போல, உலகின் முகத்தையும் மாற்றவே செய்யும் என எதிர்ப்பார்க்கலாம்.
இதேவேளை, ட்ரம்ப், கிட்டத்தட்ட ஆறு சுற்று தொலைபேசி உரையாடல்களைப் புட்டினுடன் நிகழ்த்தியதாகவும் இறுதிப் பேச்சினை அடுத்து, இந்தப் பழமும் புளிக்கின்றதே எனக் கூறியுள்ளதாகவும் தகவல்.
அதாவது, உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை அமெரிக்கா மீளத் தொடர உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதே போன்று மூன்று வருட காலப் பூரண நிசப்தத்தின் பின், பிரான்சின் மெக்ரோன், புட்டினைத் தொலைபேசி உரையாடல் ஒன்றுக்கு அழைத்ததாகவும் தகவல். மெக்ரோனால் அல்லாமல் புட்டினால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு இது என மேற்கின் ஊடகங்கள் வர்ணித்தன. (Guardian:02.07.2025). உள்நோக்கத்துடன் ஆற்றப்படும் இவ்வகை பொய்ப் பிரச்சாரங்களை, நிகழ்த்துவது மேற்கின் கடமைகளில் ஒன்றாகின்றது. விடயங்களைத் திரித்துக் கூறல் என்பது, அவை பிரதிநிதித்துவப்படுத்தும் நலன்களின் அடிப்படை கோரிக்கையாகின்றது. ‘நலன்கள் சம்பந்தப்படும் எனில் கேத்திர கணிதத்தின் விதிகள் ஈறாக மாற்றியமைக்கப்படும்’ எனும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே இன்று BRICSஇன் எழுச்சி பூதாகரமாய் எழத் தொடங்கியுள்ளது.
உலக பொருளாதாரத்தின் 40 சதவீதத்தைத் தெற்கு உலகே கொண்டுள்ளது என்றும், G-7 நாடுகளின் வாங்கும் திறனானது 57 ட்ரில்லியன் டாலர்களாகவே இருக்கும் வேளை BRICS நாடுகளின் வாங்கும் திறன் 77 ட்ரில்லியன் டாலர்களாக அதனையும் விஞ்சி காணப்படுகின்றது என்றும் உலக சனத்தொகையின் பெரும்பகுதி BRICS நாடுகளுக்குள் அடங்குவர் என்பதும், அண்மையில் நடந்து முடிந்த BRICS மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புட்டின் ஆற்றிய உரையின் முக்கிய விடயங்களாகின்றன (08.07.2025).
இது போக, டாலரின் ஆதிக்கத்தை இன்று ஆட்டம் காணச் செய்துள்ள BRICS அமைப்பை, முடிந்தால் பூண்டோடு அழித்து விடுவது என்பது மேற்கின் இன்றைய திட்டமாகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, இன்று ட்ரம்பினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிவிதிப்பு கொள்கையானது எதேச்சையானது என்றும் உலக ஆதிக்கத்தைத் தனது பிடியில் நிலைநாட்டிக் கொள்ளும் சாணக்கியம் தரும் நகர்வு இது எனவும் வர்ணிக்கப்படுகின்றது. BRICS நாடுகளை மண் கவ்வச் செய்துவிடும் என வர்ணிக்கப்படும் இவ்வரிவிதிப்பு கொள்கையானது, ஏற்கனவே இருக்கும் உலகின் ஒருமுனை ஒழுங்கைக் கட்டிக் காக்க முயலும் இறுதி முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது. வரலாற்றுச் சக்கரங்களைப் பின்நோக்கிச் சுழலச் செய்யும் இம்முயற்சியானது இன்றைய இழுப்பறிகளின் தொடர்ச்சியாக உணரப்படுகின்றது.
ஒருதலைப் பட்சமானது எனவும், உலகின் வர்த்தக மையத்திற்கு (WTO) எதிரானது எனவும் இது கூறப்பட்டாலும் இப்புதிய வரிவிதிப்பு கொள்கை மூலமாக நாடுகளை தமது ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிய செய்யும் எண்ணத்தை உள்ளடக்குவதாக உள்ளதே ஒருதலைபட்சமான கொள்கை எனவும், புதிய வரிவிதிப்பை அடுத்து, அந்நந்த நாடுகளைப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வரச் செய்யும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒன்றாகவும், இதற்கூடாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதே மேற்கின் திட்டமாகின்றது எனவும் கூறப்படுகின்றது. கூடவே ஓர் நாட்டின் அரசியலையும், அதன் அரசியல் தலைமையையும் மாற்றிவிடும் இலக்கை கொண்டு செயல்படுவதாயும் உள்ளது எனக் கருதப்படுகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, இந்நிகழ்வுகள், ஒரு தர்க்கப்பூர்வமான தமது அடுத்த கட்டத்தை நோக்கி நகருமானால், அவை யுத்தங்களிலேயே சென்று முடிவடைய கூடும் என்பது நியதியாகின்றது. அதாவது ஒருமுனை உலக ஒழுங்குக்கும் பல்முனை உலக ஒழுங்குக்கும் இடையிலான இவ் இழுபறித் தொடரலாம் என்பது ஒருபுறமிருக்க இவை யுத்தத்தில் முடியுமா, இல்லையா என்பது கேள்வியாகின்றது. இதன் ஒரு துளியையே நாம் மேலே வாதிப்பதாய் இருந்தது.
நெதன்யாகுவும், செலன்ஸ்கியும் மேற்கின் இப்புதிய வரிவிதிப்பு கொள்கையை ஆராதிக்கலாம். ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று அல்லது பங்களாதேஷின் யூனூஸ்சைப் போன்று அல்லது துருக்கியின் எர்டோகனைப் போன்று ஒரு முனை உலக ஒழுங்கின் வழிபாட்டாளர்களாகவும், இதன் காரணமாக மேற்கினால் புகழ்ந்து போற்றப்படுபவர்களாகவும் இருப்பது இயல்பே. ஆனால், இவர்களின் இந்தப் போற்றுதலானது ஒரு தூற்றுதல் வடிவிலேயே அமையக் கூடும் என்பதே இன்றைய உலகு உரைக்கும் அரசியலாகின்றது.
இதுபோக, மேற்படி வரிவிதிப்பு கொள்கையானது BRICS அமைப்பைத் துவம்சம் செய்து விடுமோ அல்லது எதிர் விளைவுகளை உருவாக்கி, அமைப்பினை உறுதி செய்து விடுமா என்பது கேள்விக்குறி. காரணம், மிக அண்மையில், தனது உற்ற நண்பனாகிய பாகிஸ்தானுக்கு, ஏற்கனவே கொடுப்பதாய் உறுதி அளித்திருந்த J-35 அதி நவீன விமானங்களை இனியும் கொடுப்பதற்கில்லை எனச் சீனா கையை விரித்து விட்டது (13.07.2025).
இது எதைக் காட்டுகின்றது? ஒரு சீன-ரஷ்ய-இந்தியக் கூட்டு உதயமாகுவதையா அல்லது இது சீன-பாகிஸ்தான் உறவுகளின் வீழ்ச்சியையா?
அண்மைக்கால வரிவிதிப்புகள்போக மேலே கூறப்பட்டுள்ள ரஷ்ய கொண்டாட்டங்கள் - ஆகிய அனைத்தும் சில நிகழ்ச்சி நிரல்களை தோற்றுவிப்பது சகஜம் என்றாலும் இவை பல்முனை ஒழுங்கிற்கான முயற்சிகள் என வரையறுக்கப்படலாமா என்பதெல்லாம் கேள்வியாகின்றன. இப்புதிய மாற்றங்களை உள்ளெடுக்கத் தவறும் உழைக்கும் மக்களின் அரசியல் சற்று கேள்விக்குறியாகவே இருக்கும் எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.