சொப்கா என்று அழைக்கப்படும் கனடாவில் கடந்த 16 வருடங்களாக இயங்கும் பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் ஆண்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை மிசசாகா காவ்த்ரா வீதியில் உள்ள ஜான் போல் போலாந்து கலாச்சார மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய சில பிரமுகர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து கனடிய தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.
வரவேற்பு உரையை செல்வி றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் மற்றும் அபிசேக் பிரபாகரன் ஆகியோர் நிகழ்த்தினர். ‘சொப்கா குடும்ப மன்றத்தில் அங்கத்தவராக இருப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன’ என்ற தலைப்பில் தான் பெற்ற அனுபவங்களைக் குறிப்பிட்டு இளைய தலைமுறையினரான செல்வி கயூரி வேல்நாதன் உரையாற்றினார்.
தொடர்ந்து மன்றத் தலைவர் யாழினி விஜயகுமாரின் தலைமை உரையும், திரு. ஈசா பரா ஈசானந்தா, திவானி நாராயணமூர்த்தி ஆகியோரின் உரையும் இடம் பெற்றன. அதன்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய மன்ற ஆலோசகருமான குரு அரவிந்தன் அவர்களின் உரை இடம் பெற்றது.
அவர் தனது உரையில் இந்தப் 18 வருடங்களைக் கடந்து வருவதற்குக் காரணமான, இதை ஆரம்பித்து தலைமைதாங்கி நடத்திய திரு. பொன்குலேந்திரன், திரு ஏ. யேசுதாசன், திருமதி வாணி செந்தூரன் மற்றும் இளையதலைமுறையினரான தற்போதய தலைவர் யாழினி விஜயகுமாரையும் மற்றும் குலசேகரம் செல்லையா, குலரஜனி குலசேகரம் ஆகியோரையும் பாராட்டி உரையாற்றினார். மேலும் தனது காலத்தில் சொப்பகா பெண் அங்கத்தவர்களுக்குச் சிறுகதைப் பயிலரங்கு நடத்தி அதன்பின் அவர்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட்டிருந்ததையும், கனடாவில் வெளிவந்த 16 தமிழ் பெண் எழுத்தாளர்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு அதுதான் என்பதையும், அந்த நூல் கனடாவில் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டி இருப்பதையும் நினைவு கூர்ந்தார்.
அடுத்து பிரதம விருந்தினரான சட்டத்தரணி செல்வி டிலானி மோகன் அவர்களின் உரை இடம் பெற்றது. அடுத்து முன்னாள் பொருளாளரும் மூத்த உறுப்பினருமான பாலசுப்பிரமணியம் அவர்களின் கடந்தகால பணியைப் பாராட்டி வைத்திய கலாநிதி மோகன் மற்றும் எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டார்.
சிறியோர் நடனம், இளையோர் நடனம், கும்மி, கோலாட்டம், திரையிசைப் பாடல்கள், வீணை இசை போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இளைய தலைமுறைப் பெண்களால் நடிக்கப் பெற்ற நாட்டிய நாடகம் இடம் பெற்றது. கனடாவில் பிறந்து வளர்ந்த சுமார் 20 இளைய தலைமுறைப் பெண்கள் இதில் பங்கு பற்றி மிகச் சிறப்பாகத் தமிழில் உரையாடி நடித்திருந்தது பாராட்டுக்குரியது. இந்த நாடகத்தை குலரஜனி குலசேகரம் நெறிப்படுத்தி இருந்தார்.
செல்வன் அபிலாஸ் சந்திரமோகன் மற்றும் செல்வி நிலானி கிருஸ்ணகுமார் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். மன்றச் செயலாளர் செல்வி தக்சா பாலநாதனின் நன்றி உரையைத் தொடர்ந்து வருகை தந்தோர்க்கு இரவு உணவும் வழங்கப்பட்டு, விழா இனிதே நிறைவடைந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.