கொயாட்டா நகரமே அதிக காலம் யப்பானிய அரசின் தலைநகராக இருந்தது. இதில் (Heian period (794–1185) இக்காலத்தில் மன்னருக்கு பலமற்று போகப் பிரபுக்கள் உருவாகினார்கள். அவர்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள். கிட்டத்தட்ட ஆங்கிலேயப் பிரபுக்கள் போன்றவர்கள் . இக்காலத்தில் அதிக போர் நடக்கவில்லை என்பதால் மேலும் சீனாவின் அரசு பலமற்று போனதால் அக்காலத்தில் அமைதி நிலவியது: இலக்கியம் வளர்ந்தது என்கிறார்கள். இக்காலத்தில் யப்பானில் கவிதை மற்றும் இலக்கிய நூல்கள் பல உருவாகின.அதில் பெண்கள் முதன்மையானவர்கள். உலகம் இலக்கியங்கள் என்ற வரிசையில் ஒரு முக்கியமான நூல் ஜென்ஜின் கதை 11ம் நூற்றாண்டில் பெண் ஒருவரால் எழுதப்பட்டது (The Tale of Genji) . சிலர் இதை யப்பானின் முதல் நாவல் என்பார்கள். ஆங்கில மொழி பெயர்ப்பு 1000 பக்கங்கள் வரும். இதில் கதாநாயகனாக வருவது மன்னரின் வைப்பாட்டியான பெண்ணுக்குப் பிறந்தவன், காதல், காம விடயங்களுடன் அரசராக முயற்சிக்கும் விடயங்கள் கொண்டது என அறிந்தேன். அத்துடன் பௌத்த மதத்தைக் கடைப்பிடிக்க அரசவையில் நடக்கும் வரம்பு மீறிய செயல்கள் விவரிக்கப்படும். இது தற்கால நாவல் போன்றது அல்ல. இதை எழுதிய பெண், பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் . அத்துடன் மன்னராக வருபவரைத் திருமணம் செய்யக் காத்திருந்தவர் என மேலும் அறிந்தேன்.
யப்பானில் மத்திய காலத்துத் தலைநகராக இருந்தது கொயாட்டா நகரின் தெற்கே உள்ள ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) பெரிதானதும் பிரபலமானதுமாகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொர்க்கத்துக்கு பாதைகள் ரோறி வாசல்கள்(Torii gate) வரிசையாக உள்ளன. யப்பானது உல்லாசப் பயணத்திற்கான விளம்பரப் படங்களில் வருவது இந்த கதவுகள், வரிசையாக செம்மஞ்சள் நிறத்தில் மரங்கள் அமைந்திருக்கும். இது சின்டோ மதத்தின் மட்டுமல்ல, யப்பானின் அடையாளமுமாகும். இதனூடாக போவது ஒரு விதத்தில் சொர்க்கத்திற்கு செல்வதான படிமமானது. உங்கள் பாவங்களிலிருந்து பரிசுத்தமாக்கி காமி என்ற தேவனிடம் அழைத்துச் செல்கின்ற வழியாகும்.
எங்களது ஊர்களில் கோயிலுக்கு மிருகங்களை நேர்ந்து விடுவது , மொட்டை அடிப்பது, உடலை வருத்தி மலையேறுவது போன்ற காரியமாகக் கருதப்படுகிறது. அதாவது இறைவனிடம் ஒன்றைக் கேட்டு அதற்கு நாம் செலுத்தும் கைமாறு அல்லது கொடுக்கல், வாங்கல் போன்றது. இந்த ரோறி வாசல்கள் ஆலயத்தில் அமைக்க நாம் பணம் கொடுக்க வேண்டும் .
எழுவைதீவில் உள்ள முருகன் கோவிலில் பிரதானமான முருகன் பின்பகுதியில் பிள்ளையார் மட்டும் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனால் , வாசலருகே வைரவருக்குச் சிறு கோவிலைக் கட்டுவதற்கு, நான் சிறுவனாக இருந்தபோது எனது தாத்தா பணம் கொடுத்தார் என நினைக்கிறேன். அப்பொழுது தாத்தா என்ன நினைவில் கொடுத்தாரோ நினைவில்லை. ஆனால் , பிற்காலத்தில் அம்மா உட்பட மற்றவர்கள் தங்களது வேண்டுகோளைச் சிக்கனமாக, மாதாவுக்கு மெழுகுவர்த்தி, அம்மனுக்கு முடி இறக்குவது என அதிக பணச் செலவில்லாது தங்கள் வேண்டுகோளை வைத்து, ஒழுங்காக நேர்த்திக்கடனை அடைத்தார்கள்.
இந்த ஷின்டோ கோவில்களில் இந்த கதவை வைப்பதற்குத் தங்கத்தில் கொடுக்க வேண்டும் என்றார் வழிகாட்டி . இந்த கதவுகள் எல்லாம் ஒரு வளைவாக அமைக்கப்பட்டு பிரதான கோவிலுக்குச் செல்லும் . இந்த கதவுகளுக்கு அப்பால் இருப்பது கடவுளின் பிரதேசம்.
ஒருவரைப் பின்பற்றி மற்றவர்கள் இந்த கதவுகளைச் செய்வதால் இப்பொழுது ஆயிரத்திற்கு மேலாக உள்ளன. தற்போது இடநெருக்கடியால் இவை நெருக்கமாக இருந்து ஒரு சுரங்க வழி போலாகிவிட்டது. சாதாரணமாக மக்கள் மட்டுமல்ல யப்பானிய கம்பனிகளும் இதைச் செய்கின்றனர்.
கதவுகளை அமைப்பதுடன் உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அத்துடன் ஒரே தருணத்தில் பணத்தைக் விடமுடியாது. நெட்பிளிக்ஸ்க்கு (Netflix) சாந்தா மாதிரி நீங்கள் பணத்தைக் கொடுப்பதை நிறுத்தி விட்டால் இந்த கதவு வேறொருவருக்குப் போய்விடும்.
நாங்கள் போன ஷின்டோ ஆலயம் பிரசித்தி பெற்றது. யப்பானியர்கள் மட்டுமல்ல உல்லாச பிரயாணிகள் வருவதால், நித்தமும் தேர்த்திருவிழாபோல் கலகலப்பாக இருந்தது . மனிதர்கள் அற்ற அந்த ரோறி வாசலை படம் பிடிக்க பல நிமிடநேரம் காத்திருந்து படம் பிடித்தேன்.
இங்குள்ள ஷின்டோ ஆலயத்தினுள்ளே விக்கிரகம் இல்லை ஷின்டோ தெய்வங்களில் முக்கியமானது காமி எனப்படும் சூரியனே .
எகிப்தில் அகநாட்டான் என்ற அரசன் 4000 வருடங்கள் முன்பு சூரியனை ஏக தெய்வமாக வழிபட்டான். ஷின்டோவில் ஏக தெய்வமோ , வேதப்புத்தகமோ இல்லை. மற்றைய இயற்கை சக்திகள் சிறு தெய்வம் ஆகிறது. நாம் தெய்வங்களின் பெயரைப் பிள்ளைகளுக்கு வைப்பது போல் இவர்களும் வைக்கிறார் . உதாரணத்திற்கு யப்பானிய எழுத்தாளர் முரகாமி நமது சிவகாமி போன்ற பெயராகும்.
ஷின்டோவில் அடிப்படை தத்துவத்தில் மனிதன் பிறக்கும்போதும் இறக்கும்போதும் பரிசுத்தமானவன் . இடையில் செய்யும் பாவ காரியங்கள் அவனை அழுக்காக்கிறது. இவற்றிலிருந்து அவன் தன்னை சுத்திகரிக்கப் பல சடங்குகளைச் செய்யலாம். அவை தானாகச் செய்ய முடியும். அத்துடன் ஷின்டோ பூசாரி மூலமும் செய்ய முடியும். அதில் ஒன்று ஆலயங்களுக்கு செல்வதாகும் . இவை எல்லம் இந்துமதத்தைப் போலிருந்தாலும் இல்லாதது ஒன்றுள்ளது. ஷின்டோவில் சூழலை அழுக்குப்படுத்துதல் பரிசுத்தமற்ற விடயமாகிறது. இந்தியாவில் நடக்கும் கும்பமேளா அல்லது பம்பாயில் நடக்கும் விநாயக சதூர்த்தி சின்டோ மதத்தில் நடக்க சாத்தியமில்லை.
நான் நினைக்கிறேன் யப்பான் சுத்தமாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் நமது மதங்களில் இது இல்லாதது பெரிய குறையாகும். ஷின்டோவின் பல விடயங்கள் புத்தமதத்தை ஒத்துப்போவதால் பல யப்பானியார்கள் பௌத்தர்களாகவும் ஷின்டோகளாகவும் ஒரே காலத்தில் இருக்க முடிகிறது.
சொர்கத்தின் வாசல்கள் மனிதர்களின் ஆன்மாவை சுத்தப்படுத்தும் காரியம் போல், விருப்பங்களை கடிதத்தில் எழுதி ஷின்டோ ஆலயத்தில் தொங்கவிடல் முக்கியமான தொன்று. மற்ற மதங்களில் கடவுளை அழுது அல்லது இறைந்தோ கேட்பவைகளை இங்கு எழுதுதல் இலகுவானது: எழுதித் தொங்கவிடுதல் என்பதற்கு அறிவிப்புப் பலகைகள் அங்கு காணப்பட்டது.
இந்தியாவில் நாம் கிளி சோதிடக்காரரை பார்த்திருப்போம். அல்லாதவர்கள் தமிழ்ப்படங்களில் பார்த்திருக்கலாம். அதை ஒத்தது இங்கு ஒன்று உள்ளது. நீங்கள் சிறிதளவு பணத்தைக் கொடுத்தால் அங்கு பீப்பாய் போன்றதை உருட்டிவிடுவார்கள். அப்போழுது விழும் சீட்டில் உங்களது எதிர்காலத்தைப் பார்க்கலாம். உங்கள் விதி யாரோ ஒருவரது பேனையால், அங்கு ஒரு தாளில் எழுதப்பட்டிருக்கும்.
பல செயல்களில் நமது இந்து மதத்தை ஒத்த விடயங்கள் இங்கு தெரிந்தது. மனிதர்கள் இயற்கை சக்திக்குப் பயந்து அவற்றை வழிபடத் தொடங்கினர்கள். பிற்காலத்தில் சில விடயம் தெரிந்தவர்கள், அதை கடவுளென்றார்கள் அல்லது தங்களை கடவுளின் குமாரர் என்றார்கள். சின்டோவிலும் காமி எந்த வடிவமற்றது. எப்பொழுது கண்டங்கள் அதிரும் , கடல் சுனாமியாகப் பொங்கும் அல்லது எரிமலை வெடித்து நெருப்பைத் தள்ளும் என மேலும் யப்பான் போன்ற நாட்டில் பிறந்துவிட்டு இயற்கைக்கு பயப்படாது முடியுமா?
புவியின் சகல இயக்கத்திற்கும் காரணமான சூரியனை அவர்கள் கொண்டாடுவது நமக்கு எதைக் காட்டுகிறது ?
காமி முக்கியம் என்பதே!
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.