முன்னுரைவாய்மொழி வழியாகத் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், நவீன இலக்கியம் என புதிய செய்திகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கின்றது. இதனைத் தொல்காப்பியர்,
"உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே" (நூ. 1162)
பொருளியல் எனும் நூற்பா மூலம் விளக்குகின்றார். அவ்வகையில் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவரான போகரின் சப்தகாண்டம் என்னும் நூலில் இடம்பெறும் சைவசமயக் கடவுளான சிவபெருமான் பற்றிய புராணச் செய்திகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
போகர் வரலாறு
கடவுள் மனிதனைப் படைத்தார் எனும் ஆத்திகவாதியானாலும், மனிதன் கடவுளைப் படைத்தான் எனும் நாத்திகவாதியானாலும் அவர்களின் அறிவுக்கு எட்டாத பரம்பொருள் ஒன்று உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அது இயற்கை சக்தியாகவோ அல்லது இறை சக்தியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப பெயர் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் பரம்பொருள் ஒன்றுதான். இதனைக் கண்டுணர்ந்தவர்கள் சித்தர்கள். அந்தச் சித்தர்களில் குறிப்பிடத்தக்கவர் போகர் ஆவார்.
பதினெண் சித்தர்களில் ஒருவர் போகர். இவரின் முழுப்பெயர் போகநாதன். இவர் தன்னைப் போகநாதன், கைலாச போதரிசி எனக் கூறிக் கொள்கிறார். இவரின் குருநாதன் காலாங்கி நாதர். போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தர் ஆவார்.
போகரின் காலம்
போகர் ஏழாயிரத்தில் 15-16ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட சொல் வழக்குகள் மிகுதியாக உள்ளன. இட்டிலி, எருமுட்டை, சடுதி, சொச்சம், பராக்கு, மதாச்சாரம், பண்டு,சீசாபோன்ற சொல் வழக்குகள் அறப்பள்ளிச்சுர சதகத்திலும் காணப்படுவதால் இவர்காலம் கி.பி. 1701க்கு முற்பட்டதென்பது தெளிவு. சந்த காண்டத்தில் காணப்படும் துட்டு, கிளாசு போன்ற சொற்கள் 16ஆம் நூற்றாண்டில் தான் தமிழில் புகுந்தன. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பற்பம், மரியாதை போன்ற சொற்களும் இவரால் கையாளப்படுகின்றன. எனவே இவரது காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டதென்பது தெளிவு.
போகர் சன்னதியில் போகர் வழிபட்டதாகக் குறிக்கப்பட்டு வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ள உமாமகேசுவரி, துர்க்கை, முருகன், சிவன் முதலியோரின் செப்புத் திருமேனிகள் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எனவே இவரது காலம் 16ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்டது என்பது தெளிவு. குமரகுருபரர், அதிவீரராம பாண்டியன் போன்றவர்கள் பற்றிய செய்திகள் போகர் ஏழாயிரத்தில் இடம் பெறுவதால் இவது காலம் கி.பி. 15,16ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். போகரின் காலம் 15.16ஆம் நூற்றாண்டு எனில் அப்போதைய தமிழக நிலை என்னவாக இருந்தது. தமிழகத்தின் சமுதாய நிலை என்ன, மக்களின் சமய வழிபாட்டு முறை எவ்வாறு இருந்தது. எந்த மாதிரியான இலக்கியங்கள் தமிழகத்தில் நிலவியது என்பதனை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
கி.பி.1309 இல் வீரபாண்டியன், சுந்தர பாண்டியனுக்கு இடையில் நிகழ்ந்த வாரிசுரிமைப் போரால் தென்னிந்தியாவிற்கு வருகைபுரிந்த மாலிக்காப்பூர் தென்னிந்தியப் பகுதிகளை வென்று அங்கு முகலாய ஆட்சியினை நிறுவியதோடு தமிழகத்தில் நிலவிய பேரரசுகளின் ஆட்சிமுறை முடிவுக்கு வந்து சிற்றரசுகளும், குறுநில மன்னர்களும் தோன்றினர். தென்னகத்தில் ஆட்சி அமைத்த முகலாயர்கள் இந்துக் கோயில்களை இடித்தும் இந்துக்களையும் கொன்றுகுவிக்க ஆரம்பித்தனர். இந்து மதத்தை அடியோடு அழிக்க எண்ணினார். இவர்களுக்கு அஞ்சி இந்து சமயவாதிகள் காடுகளில் சென்று மறைந்து வாழ முற்பட்டனர். இந்து சமயத்தை அழிக்க வேண்டும், அடக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எண்ணியதாலையே கி.பி. 16ஆம் நூற்றாண்டில் எண்ணிலடங்கா தல புராணங்கள் தோன்றலாயின. மு.அருணாசலம் அவர்கள் 16ஆம் நூற்றாண்டைப் புராண இலக்கிய காலம் என்றே கூறியுள்ளார்.
எப்பொழுதெல்லாம் அடக்குமுறை அதிகமாகின்றதோ அப்பொழுதெல்லாம் அதற்கான எதிர்வினைகள் வீரியத்துடன் எழுகின்றது. மத நம்பிக்கையை அழிக்க வேண்டும் என்று எண்ணியதாலையே அது மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேரூன்றி வளர ஆரம்பித்தது. இறை நம்பிக்கைத் தொடர்பான நூல்களும், புராணங்களும் 16ஆம் நூற்றாண்டில் மிக அதிகமாகப் பரவியது. எனவேதான் அக்காலத்தில் வாழ்ந்த போகர், சிவபெருமான் தொடர்பான பல பாடல்களைத் தம் நூலில் பதிவு செய்துள்ளார்.
போகர் ஏழாயிரத்தில் சிவன்
சித்தர்கள் சிவனைக் குருவாகவும், முழு முதல் நூலில் சிவனே தெய்வமாகவும் கொண்டவர்கள். பிற தெய்வங்களை எல்லாம் தூற்றுபவர் இல்லை எனினும் போற்றுபவர் இல்லை. போகரும் தம் பரம்பொருள் பிற தெய்வங்களை மனிதப்பிறவியில் முக்தி பெற்றவர் எனக் கூறியுள்ளார். சிவ வழிபாடு இன்று நேற்று தோன்றிய வழிபாட்டு முறையன்று. மிக நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. அதனை சர்சான்மார்ல் துரைமகனார் பின்வருமாறுக் கூறியுள்ளார்.
''மொகஞ்சதரோ, அரப்பா ஆகிய அகழ்ந்தெடுக்கப்பட்ட புதைபொருள்களால் நமக்குப் புலனாகும் செய்திகள் பலவற்றுள் முதன்மை வாய்ந்ததும் நிகரற்றதுமாகத் திகழ்வது சைவ சமயத்தின் வரலாறெனின் அது மிகை ஆகாது. செம்புக் காலத்திற்கும், சுற்காலத்திற்கும் முற்பட்ட தொல் பழங்காலத்தில் சைவசமயத்தின் வரலாறு தொடங்குவதும், உலகப் பழம்பெருஞ் சமயங்களில் மிகப்பழைய சமயமாகச் சைவசமயம் வீறுடன் நின்று நிலவுவதும் இடங்களில் குறிப்பிடத்தக்கனவாகும்'' (சு.வெள்ளைவாரணார், சைவசித்தாந்த சாத்திர வரலாறு பக்.08)
இவ்வாறு மொகஞ்சதரோ காலம் முதல் தற்போதைய காலம் வரைசைவசமயத்தின் வரலாறு என்பது மிக நீண்டதாகும்.
சிவன் போகர் சந்திப்பு
போகர் தன் நூலான போகர் ஏழாயிரத்தில் ரசவாதம், குண்டலினி யாகம் முதலான அனைத்து யாகம், மூலிகை சம்மந்தமான செய்திகளையும் பாமரனும் புரிந்து கொள்ளும் விதமாக எளிய தமிழில் எழுதியதால் சினம் கொண்ட பிற சித்தர்கள் சிவனிடம் முறையிட சிவன் போகரைக் கைலாயம் அழைத்து விசாரனை நடத்தி போகரின் பொதுத் தொண்டினை வெகுவாகப் பாராட்டினார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகின்றது.
"அழை என்று நாம்சொன்னால் வருவதில்லை
அதீதமாம் கயிலாய தட்சிணாமூர்த்தி
குழையென்ற குருவண்டை அனைவருந்தான்போந்து
குனிந்துமே அடிவணங்கி இருக்கும் போது
தழை வென்ற அனைவருந்தாம் ஒருமித்தாற்போல்
சடுதியாய் வந்ததென்ன என்றுகேட்க
விழைவென்ற போகரென்று முனிவர்தாமும்
பேரான சத்திரந்தான் புகன்றிட்டாரே ”
(போகரர் ஏழாயிரம் முதல் காண்டம் பா.825)
இப்பாடலின் மூலம் சித்தர்கள் பரம்பொருளான சிவனுடன் நேரடியாக உரையாடும் இயல்பினை உடையவர்கள் என்னும் சித்தர்கள் தங்களுக்குள் எழும் பூசல்களைச் சிவனிடம் முறையிட்டுத் தீர்த்துக் கொண்டனர் என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.
இலிங்கபாடாணம்
போகர் இலிங்கபாடானம் தோற்றம் பற்றி பின்வருமாறு கூறுவதாகப் பாடல்,
''திருவுகின்ற சிவன் தானும் முப்புரத்தைச்
சினந்தெரிக்க வெந்துமேதான் எரிந்து போச்சு
உருகின்ற ருத்திரமூஞ் சப்போ தானார்
உயர்ந்தநெற்றிக் கண்ணினாலே பொரியை வீசி
நருவுகின்ற ரசகந்தி நிலத்தே வீழ
நடுங்கியேதான் லயமா கிலிங்க மாச்சே' (பா. 20181)
கொடிய பாம்பின் நஞ்சில் இருந்து மருந்து எடுப்பதைப் போன்று இவ்வுலக உயிரினங்களுக்கும் தேவர்களுக்கும் துயரினை அளித்து வந்த அசுரர்களையும் அவர்களின் மூன்று உலகையும் அழித்து மக்களைக் காத்ததோடு மட்டும் அல்லாமல் அந்த அசுரர்களை அழித்த நெருப்புக் குழம்பைக் கொண்டு மூலிகை செய்து மக்களின் நோய்களை நீக்கி உடல் பொலிவுடன் வாழ வழியினையும் சிவபெருமான் புரிந்தார் என்பதை அறிந்துக் கொள்ளமுடிகின்றது.
சிவன் மணக்கோலம்
'வந்துமே தான் அவரவர்கள் வரிசையாக
வகையாக அவரவர்கள் இருக்கத் தக்க
தந்துமேதான் இடத்திலுமே யிருந்திட்டார்கள்
தயானிததியாமம் சிவனுமணக் கோலமாகி" (பா.2933)
இப்பாடலில் சிவன், பார்வதி அன்னையின் திருமணத்தைத் தேவர்கள் முன்னிலையில் பிரம்ம தேவன் நடத்தி வைத்தார் என்னும் செய்தியினைப் போகர் பதிவு செய்துள்ளார். சாயுச்சியம் எனும் இறைவனோடு ஒன்றிணைந்து நிற்கும் நிலையினை அடைந்த போகர் பரம்பொருளான சிவபெருமானின் திருமணத்தை நேரில் கண்டுகளித்து உள்ளம் மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் அந்நிகழ்வினைப் படித்துணர்ந்து கொள்ளும் விதமாக தம்நூலில் அந்நிகழ்வினை அழகாக விளக்கியுள்ளார்.
போகர் ஆயிரத்தெட்டு சிவாலயபட பெருமைக்கூறல்
போகர் ஆயிரத்தெட்டு தம் சீடரான சிவாலயங்கள் புலிப்பாணி சித்தரிடம் குறித்தும் ஒவ்வொரு திருத்தலத்தின் பெயர் அவை அமைந்திருக்கும் ஊர் முதலியவற்றையும் பஞ்சபூத தளங்கள் பற்றியும் மிக விரிவாகத் தம் பாடலில் கூறியுள்ளார்.
"தானான பஞ்சபூத சுதலமேதென்றால்
தாக்கான காளசுதிரி காஞ்சியாகும்' (பா.எண்.6912)
முடிவுரை
பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் தம் பாடல் மூலம் சிவத்தொண்டு புரிந்து மக்களும் பரம்பொருளான சிவனை அடைந்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று விளங்கிட வழிவகை செய்துள்ளார் என்பதை அவர்தம் பாடல் மூலம் அறிந்துக்கொள்ள முடிகின்றது.
துணை நின்ற நூல்கள்
1. போகர் ஏழாயிரம் பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி.
2. எஸ். சந்திர சேகர், போகர் ஏழாயிரம், கிண்டில் மின்னூல் பதிப்பு, லியோ புக் பப்ளிஷர்ஸ்
3. எஸ். சந்திர சேகர், அதிசய சித்தர் போகர், கற்பக புத்தகாலயம், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.