முன்னுரைபழமொழிகள் அச்சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக்கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும், தெளிவுடனும், சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதற்காக கம்பர் தம் இராமாயணத்தில் தேவைப்படும் இடங்களில் பழமொழிகளை பயன்படுத்தியுள்ளதை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
தொல்காப்பியத்தில் பழமொழி
தமிழில் பழமொழி இலக்கியத்திற்கு முதன் முதலாக வரையறை தந்தவர் தொல்காப்பியரே.
“பாட்டு உரை நூல் வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ்”
(தொல்காப்பியம்- செய் 78)
நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும், இன்னோரன்ன விளங்கித் தோன்றிக் கருதிய பொருளைக் காரணத்தொடு முடித்துக் கூறுதல் முதுமொழி என்று கூறுவர்.
“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப”
(தொல்காப்பியம்-செய் 175)
பழமொழியின் வேறு பெயர்கள்
முதுமொழி, பழஞ்சொல்,சொலவடை,சொலவாந்திரம்,முதுசொல் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பழமொழி உள்ள நூல்கள்
சங்க இலக்கியம், பழமொழி நானூறு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற நூல்களில் காணப்படுகிறது
பழமொழிகள் குறித்து வெளிநாட்டு அறிஞர்கள் கூற்று
அரிஸ்டாட்டில்: பழமொழிகள் அறிவின் வளர்ச்சியிலே பிறந்தவை.சுருக்கம், தெளிவு, பொருத்தம் ஆகிய சிறப்புக்களால்,நாள்தோறும் இறந்துகொண்டிருக்கும் இவ்வுலகில் என்றும்இறவாமல் வாழ்கின்றன என்கிறார்.
ஆர்ச்சர் டெய்லர்: பலரின் அறிவு ஒருவரின் குரலில் குவிந்து பேசுவதே பழமொழி என்றும் ஒரு பாட்டின் கருத்தைத் தழுவி மக்களின் பேச்சுக் கருத்தைத் தழுவி மக்களின் பேச்சிலே கலந்து பழகி வரும் செறிவு மிக்க அறிவு வாக்கியமே பழமொழி என்கிறார்.
செர்வன்டசு: நீண்ட அனுபவத்தில்பிறந்த குறுகிய வாக்கியங்கள் என்பார்.
ஆக்ஸ்போர்டு அகராதி: வாழ்வை ஊன்றி கவனித்து உணர்ந்த உண்மையின் துணுக்குகள் என்கிறது. (தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி, யாழ் வெளியீடு, சென்னை,1999.)
கம்பராமாயணத்தில் இடம் பெறும் பழமொழிகள்
புலி தானே புறத்து ஆக குட்டி கோட்படாது, வாழைப்பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல, ஒளி இருக்குமாயின் நெருப்பும் உண்டு, தம்பியுடையான் படைக்கு அஞ்சான், கம்மியன் தெருவில் ஊசி விற்றல் போல, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இராமன் இருக்கும் இடமே அயோத்தி, எள்ளு போட இடம் இல்லையோ, இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன கடலில் கரைத்த பெருங்காயம் பூனை வாயில் அகப்பட்ட கிளிபோல் பாம்பறியும் பாம்பின்கால், விஷத்தை வைத்தே விஷத்தை முறிப்பது போல என்பன போன்ற பழமொழிகள் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ளன.
1.புலி தானே புறத்து ஆக குட்டி கோட்படாது
இலட்சுமணன், சூர்ப்பணகை மூக்கை அறிந்ததால், அவள் தன் குலத்தோரைக் கூவி முறையிட்டு புலம்புகிறாள். ஊழியின் இறுதி காலத்திலும் நிலைகுலையாத மும்மூர்த்திகளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் மேம்பட்ட வலிமை உடையவனே, தாய் புலி பின்னே இருக்க, அதன் குட்டி எவ்உயிராலும் கவர்ந்து கொள்ளப்படாது என்ற ஒலியை உடைய கடலால் சூழப்பட்ட உலகத்தினர் உரைக்கும் பழமொழி பொய்யோ? தாய்ப்புலி போன்ற நீ அண்மையில் இருக்கவும் யான் அடைந்த துன்பத்தைப் பார்க்க வரமாட்டாயோ என்று கூறி அழைக்கிறாள்.
“புலி தானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும்உரைபொய்யோ ஊழியினும்”
(சூர்ப்பணகைப் படலம் 318)
2.வாழைப்பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல
இராமனின் அந்த அம்பானது நீரும், நீரைத் தோற்றுவித்த நெருப்பும், அந்த நெருப்பைத் தோற்றுவித்த வலிய காற்றும், இவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பூமியும் ஆகிய இந்த நான்கும் கொண்ட வன்மையைப் பெற்றுள்ள வாலியின் மார்பைப் பழுத்த மிக்க சுவையுடைய வாழைப்பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல எளிமையாகத் தைத்து சென்றது என்றால், அந்த அம்பின் ஆற்றலைக் குறித்துக் கூற வேண்டியது என்ன இருக்கிறது என்று வாலி வதைப்படலத்தில் கூறப்பட்டுள்ளது.
“கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது எனச் செப்ப”
(வாலி வதைப்படலம் 292)
3.ஒளி இருக்குமாயின் நெருப்பும் உண்டு
இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடைபெறும் போது, இராகவன் இராவணன் வில்லைத் துண்டித்தான். இராமன் ஒளி இருக்குமாயின் நெருப்பும் உண்டு எனும் இப் பழமொழி உண்டு. அது போல் இவனது தோளில் இருக்கும் வரை வெல்லற்கரிய வலிமை இவனுக்கு உண்டு என நினைத்து அவ்வில்லினை முறிக்க இடி இடித்தது போன்ற ஒரு நெடிய அம்பினை இராவணன் மீது செலுத்தினான்.
“எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஓர்
சொல் உண்டாயது போல் இவன் தோளிடை”
(இராவணன் வதைப் படலம் 3 8 2 5)
4.வெந்த புண்ணில் பாய்ச்சிய வேல் போல
இராம- இராவண யுத்தம் முடிந்த பிறகு இராமன் சீதையைக் கடிந்து கொண்டான். நாணத்தால் தரையைப் பார்த்துத் தலை கவிழ்ந்து நின்ற சீதை இத்துணை காலம் இராமனைப் பிரிந்து வருந்தியவள், இப்போது இராமன் சொன்ன கடுச்சொற்களைச் செவியேற்றதும் புண்ணில் கோலிட்டுக் கிளறியது போன்ற மிக்க துன்பத்தால் தன் இரண்டு கண்களினின்றும் குருதியும், நீரும் மிகுதியாய் சிந்த மனத்தில் தன் நினைவு தவறி பெருமூச்சு விட்டாள்.
“கண் இமை உதிரமும் புனலும் கான்றுக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள்”
(மீட்சிப் படலம் 39 62)
5.தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
இந்திரஜித்தனைப் போரில் வென்ற இலக்குவணனைப் பார்த்த இராமன், கம்பத்திலே கட்டப் பெற்ற மதம் மிக்க யானை, படையுடைய அரசனாகிய ஜனகன் பெற்ற பூங்கொம்பு போன்ற ஜானகியும், இனி வந்தடைந்து விட்டால் என்று உள்ளம் குளிர்ச்சி அடைந்தேன் வாசனை மிக்க மலர் கோயில் உள்ள பிரம்மதேவன் உலகத்திலே தம்பியை உடையவன் யாரும் படையைக் கண்டு பயப்பட மாட்டான் என்னும் சொற்களை நீ உண்டாக்கி விட்டாய் என்று இராமன் கூறினான்.
“கம்ப மதத்துக் களியானைக் காவல் ஜனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்றகம் குளிர்ந்தேன்
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் எனும் மாற்றம் தந்தனையால்”
(இந்திரஜித் வதைப்படலம் .- மிகைப்பாடல்கள் 67-1)
6.கம்மியன் தெருவில் ஊசி விற்றல் போல
இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடைபெறும் போது இராமன் ஞானக்கணையினைச் செலுத்தினார். கார்மேகம் போன்ற நிறத்தை உடையவனே, இரும்புத் தொழில் செய்கின்ற கொல்லனுக்கு நூல் நிலை போகக்கூடிய ஊசி ஒன்றினைச் செய்து விருப்பமுடன் விலைக்குப் பெற்றுக் கொள்வாயாக என்று கூறுகின்ற அறிவில்லாதவன் போன்று கடுமை வாய்ந்த திசை யானையின் தந்தத்தினால் துளைக்கப்பட்ட தோள்களை உடையவனான இராவணன் அருமையான மாயாஸ்திரத்தைத் தொடுத்தான்.
“இருப்பு கம்மியருக்கு இழை நுழை ஊசி என்று இயற்றி
விருப்பின் கோடியால் விலைக்கு எனும் பதடியின் விட்டான்
கருப்புக் கார் மழை வண்ண அக்கடுந் திசை களிற்றின்
மருப்புக் கல்லிய தோள்வன் மீள அரு மாயம்”
(இராவணன் வதைப் படலம் 37 62)
உள்ளங்கை நெல்லிக் கனி, விதை இல்லாமல் முளைக்கும் மரம் ஒன்று இல்லை.
பிரகலாதன் தன் தந்தை இரணியனுக்கு அறிவுரை கூறும் போது, மன்னவனே விதை இல்லாமல் முளைக்கும் மரம் ஒன்று இல்லை நீ மயக்க உணர்வை கைவிட்டு உண்மையை அறிவாயா என் தத்துவப் பொருளை அறியும் வகையைச் சொல்வேன். நான் சொல்வது சிறிதும் விடாமல் ஊன்றி அறியத்தக்கது என நினைத்து, கையின் இடத்தில் உள்ள நெல்லிக்கனியைப் போல அதை உள்ளபடி விளங்க உணர்வாய் என்று கூறினான்.
“வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்தநின்
பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன்
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று எனா
கைத்து ஒன்று நெல்லிஅம் கனியின் காண்டியால் “
(இரணியன் வதைப் படலம் 187)
7.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
காக வடிவில் காம எண்ணத்தில் வந்த இந்திரன் புதல்வனான ஜெயந்தன் மீது பாயும்படி ஒரு தர்ப்பையை அம்பாகச் செலுத்தி அக்காக்கையின் ஒரு கண்ணை இராமன் அழித்தான். அதேப் பொழுதில் எல்லாக் காக்கைகளும் ஒரு கண் இழக்குமாறு இராமன் செய்தான்.
“ஏக வாளி அவ் இந்திரன் செம்மல் மேல்
போக ஏவி அது கண் பொடித்தநாள்
காகம் முற்றும் ஓர் கண் இல ஆக்கிய
வேக வென்றியைத் தன் தலை மேல் கொள்வாள்”
(காட்சிப் படலம் 356)
8.இராமன் இருக்கும் இடமே அயோத்தி
இராமன் காட்டுக்குச் செல்ல இருந்தபோது, இலட்சுமணனும் உடன் செல்ல விரும்பினான். சுமத்திரையிடம் கேட்டபோது, விடை கொடுத்த சுமித்திரை சொன்ன அறிவுரையில் இராமன் செல்லப் போகும் அந்த காடு நீ செல்வதற்குப் பொருந்தாதது அன்று. அந்தக் காடு தான் உனக்கு இந்த அயோத்தி நகரமாகும். பேரன்புக்குரிய இராமனே நம் தசரத மன்னன் ஆவான். பூவை அணிந்த கூந்தலை உடைய நம்முடைய சீதையே, இராமன் இந்த நாட்டை பரதனுக்குக் கொடுத்ததை அறிந்தும் உயிர் விடுத்திடாத உன் தாயார் ஆவாள். இவ்வாறு எண்ணிக் கொண்டு இராமனுடன் செல் இனி நீ இங்கே ஒரு நொடி நிற்பதும் குற்றமாகும் என்று சுமித்திரை சொன்னாள்.
“ஆகாதது என்றால் உனக்கு அவ் வனம் இவ்வயோத்தி
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதும் என்றாள்”
(நகர் நீங்கு படலம் 438)
இராமனோடு பயணம் செல்வது என்பது சீதைக்கு இடர்க்குரிய ஒரு செயலாகவேத் தோன்றவில்லை. காரணம் தன் கணவனுடன் தான் உடன் வாழ வேண்டியதுதான் முக்கியமே தவிர, இருக்கும் இடம் எது என்பது அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. இப்பொழுதும் நாட்டை விட்டு காட்டுக்கு வந்தால் காரணம் இராமன் இருப்பதால் காடே அவளுக்கு இப்போது அயோத்தியாக இது தெரிந்தது.
“கல்நகு திறள் புயக் கணவன் பின் செல
நல் நகர் ஒத்தது நடந்த கானமும்”
(திருவடி சூட்டுப்படலம் 1143)
இராமர் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்கின்ற பழமொழி நினைவுபடுத்துகிறது.
9.எள்ளு போட இடம் இல்லையோ
இராவணன் இறந்த பின்பு மண்டோதரி புலம்புகையில் இராமன் என்னும் ஒரு மனிதனுடைய அம்பு வெண்மையான எருக்க மாலை அணிந்த சடை முடியை உடைய சிவன் எழுந்திருக்கும் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் அழகிய உடம்பு முழுவதையும் எள் இருப்பதற்குரிய இடமும் இல்லாதவாறு அவன் உயிர் இருக்கும் இடம் தேடி துளை செய்த தன்மையோ அல்லது தேன் இருக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய சீதையை இதயம் எனும் சிறையில் மறைத்து வைத்த காதல் உள்ளே எங்கேயோ மறைந்திருக்கும் என்று கருதி அவன் உடலில் புகுந்து தேடியவாரோ என்று புலம்புகிறாள்.
“வெள் எருக்க ருஞ்சடை முடியான் வெற்பு எடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும்
இடம் நாடி இழைத்தவாறோ
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து
தடவியது ஒருவன் வாளி“
(இராவணன் வதைப் படலம் 3879)
10.இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன
அனுமனது வில்லின் ஆற்றலும், குரங்கரசனான சுக்ரீவனின் ஆற்றலும் இரு வீரர்களான இராம லக்ஷ்மணர்களின் வில்லின் ஆற்றலும், தன் உயிரைக் காக்கவும் போதாது. காட்டில் பழங்களும், காய்களும் உணவாக உள்ளன. ஒளிந்து வாழ குகைகளும் உள்ளன. இம் மாநிலத்தை மனிதனாண்டால் என்ன அரக்கர் ஆண்டால் என்ன என்று வானரர்கள் கேட்டனர்.
“அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர்
தனுவின் ஆற்றலும் தன் உயிர் தாங்கவும் சாலா
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க
மனிதர் ஆளின் என் ராக்கதர் ஆளின் என் வையம்? “
(மூலபல வதைப்படலம் 3280)
11.கடலில் கரைத்த பெருங்காயம்
இந்திரஜித் மாயா சீதையை வெட்டினான். உண்மையிலேயே சீதை இறந்துவிட்டாள் என்று எண்ணிய அனுமன் பெரும் வேதனையின் உச்சத்தில் பலவாறாக அரற்றினான். கடத்திற்கு அறிய கடலைத் தாண்டி இந்த ஊரை பெரும் நெருப்பினால் கொளுத்தி, நீர் மிக்க கடலுக்கு அணை கட்டுவதில் உதவி, மேருமலையைக் கடந்து ஒப்பற்ற சஞ்சீவி மருந்தைக் கொணந்து காட்டி, உனக்கு இணையான குரங்கு இனி உலகில் இல்லை என்று சொல்லக் கேட்டு மகிழ்ச்சியுற்றேன். ஆயின் இப்போது இராமனுக்கு நான் செய்யும் தொண்டின் தன்மை கடலிடை காயத்தைக் கரைத்தது போலானது என்று புலம்பினான்.
“அருங்கடல் கடந்து இவ் ஊரை அள் எரி மடுத்து வெள்ளக்
கருங் கடல் கட்டி மேருக் கடந்து ஒரு மருந்து காட்டிக்
குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் எனக் களிப்புக் கொண்டேன்
பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமைப் பெற்றி”
(மாயா சீதைப் படலம் 2830)
12.பூனை வாயில் அகப்பட்ட கிளிபோல்
விராடன் சீதையைப் பிடித்துக் கொண்டான். இராமன் அனைவரும் பயந்து நடுங்கும்படி வில்லின் நாணை அதிர்ந்து ஒலி எழுமாறு செய்தான். அந்த சத்தம் கேட்ட விராதன் சிறிது கலக்கமுற்று பின் பூனை வாயில் அகப்பட்ட கிளிபோல் கதறிக் கொண்டிருந்த சீதையை விடுத்து, ஏதோ நினைத்துப்பார்த்து பின் இராமனோடு போர் செய்தான்.
"வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா
நெஞ்சு உளுக்கினன் எனச் சிறிது நின்று நினையா
அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா"
(விராதன் வதைப்படலம் 24 )
13. பாம்பறியும் பாம்பின்கால்:
சூர்ப்பணகை, இராமனிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி பலவாறாகப் பேசினாள்.அவ்வாறு பேசும் போது,அரக்கர்கள் உம்மோடு போரிபுரிந்தால் நான் உங்களுக்கேத் துணையாக இருந்து அவர்கள் செய்யும் மாயங்களையெல்லாம் உங்களுக்குக் காட்டிக் கொடுத்து உதவி செய்வேன். அரக்கர்களின் வஞ்சக்குணத்தை யான் அறிவேன்.பாம்பறியும் பாம்பின் கால் என்பதை உலகம் சொல்லும் இது உங்களுக்குத் தெரியாதா என்கிறாள்.
"பாம்பறியும் பாம்பின் கால் என மொழியும்
பழமொழியும் பார்க்கிலீரோ. (சூர்ப்பணகைப் படலம்355)
14.விஷத்தை வைத்தே விஷத்தை முறிப்பது போல
விஷத்தை வைத்தே விஷத்தை முறத்தல் என்பது, ஒரு விஷம் அல்லது நச்சுத் தன்மையை மற்றொன்றைப் பயன்படுத்தி முறிக்க முடியும் என்பது கருத்தாகும். சில நேரங்களில் பழமொழி போலவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்திரசித்திற்கும்,இலட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில்
இந்திரசித்,இலட்சுமணன் மேல் அம்பு தொடுத்தான்.அவ்வம்பு இந்திரசித் விடுத்த அம்பைத் தடுத்தி நிறுத்தியதோடு, வானத்திலே பெரும் நெருப்பை ஏற்படுத்திக்கொண்டு பெரும் இடர்பாட்டைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த இலட்சுமணன் அதன் நெருப்பைத் தணிக்கும் பொருட்டு, மற்றொரு நெருப்புடைய அம்பை விடுத்து அதைத் தணித்து விடுகின்றான். இச்செயலுக்கு உவமையாகத் தான் ஒரு விடம் கொண்டு பிரிதொரு விடம் நீக்குவதுபோல ஒரு அம்பைக் கொண்டு மற்றொரு அம்பின் வேகத்தைத் தணித்தான். (யுத்தகாண்டம்)
முடிவுரை
வாழ்க்கை அனுபவத்தின் பிழிவு பழமொழி என்பர். புலி தானே புறத்து ஆக குட்டி கோட்படாது, வாழைப்பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல, ஒளி இருக்குமாயின் நெருப்பும் உண்டு, தம்பியுடையான் படைக்கு அஞ்சான், கம்மியன் தெருவில் ஊசி விற்றல் போல, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இராமன் இருக்கும் இடமே அயோத்தி, எள்ளு போட இடம் இல்லையோ, இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன. கடலில் கரைத்த பெருங்காயம், பூனை வாயில் அகப்பட்ட கிளிபோல் பாம்பறியும் பாம்பின்கால்: விஷத்தை வைத்தே விஷத்தை முறிப்பது போல இத்தகைய பல பழமொழிகளைக் கம்பர் தம் கம்பராமாயணத்தில் தேவைக்கேற்ப பல இடங்களில் பயன்படுத்தியுள்ளதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
6.https://www.chennailibrary.com/kambar/yuththa/indirachithuvathai.html?utm_source=chatgpt.com
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.