புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியாவில் உள்ள தமிழர்கள் தங்கள் தாய்த்திருநாட்டையும் மொழியையும் வளர்க்க தமிழ் அமைப்புகளை நிறுவியும், தங்களது எண்ணங்களை ஊடகங்களின் துணைகொண்டும் வெளியிட்டு வருகின்றனர். மலேசியாவில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகிய தளங்களில் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள் பலர். மலேசியத் தமிழ்க் கவிதைகள் ஆரம்ப காலத்தில் அவர்களது துன்பங்களைத் தாங்கியதாகவும், பின்னர் சமூக வெளிப்பாடுகளின் கூடாரமாகவும் மிளிர்ந்தன.
மலேசிய தமிழ்க் கவிஞர்கள்
கா.பெருமாள், ஐ.உலகநாதன், தீப்பொறி பொன்னுசாமி, சீனி நைனாமுகமது, ப.மு. அன்வர், கரு.வேலுச்சாமி, மா.இராமகிருஷ்ணன், செ.மு.ஜெயகோபி ஆகிய ஏராளமான தமிழ்க் கவிஞர்களை மலேசிய இலக்கிய உலகம் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. மலேசிய தமிழ்க் கவிதைகளின் மொழிநடையை ஆய்வு செய்தால் அவற்றின் பன்முகத்தன்மைகள் தெரியவரும்.
உவமைகள்
மலேசிய தமிழ்க் கவிதைகள் சிறந்த உட்பொருளைக் கொண்டே சமைக்கப் பட்டுள்ளன. நல்ல பொருள்நயமும், உவமை நலமும் அவற்றின் அழகுக்குச் சான்று. கா.பெருமாள் என்ற கவிஞரின் கதிரும் கடலும் கவிதையில் மேகத்தைப் பெண்ணாக உவமிக்கின்றார்.
சில்லென்ற மென்காற்றுப் பட்டதும் மேகப்பெண்
சிந்தை குளிர்ந்தனளாம்!-மாரி
சிந்திப் பொழிந்தனளாம்!
இங்கு மேகமாகிய பெண் மென்மையான காற்றுப் பட்டதும் சிந்தை குளிர்ந்து மழையைப் பொழிந்தாளாம் என்பதில் உவமை கவிதைக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகிறது.
கவிஞர் சீனிநைனா முகமது அவர்களின் ‘நீ உயர’ என்ற தலைப்பிலான கவிதையில் உள்ளத்தை விளைநிலம் என உவமிக்கின்றார்.
விதைக்கின்ற எண்ணம் செயலாய் முளைக்கும்
விளைநிலம் தானே உள்ளம் -அது
வீணாய்க் கிடந்தால் பள்ளம்
இங்கு கவிதையின் நடைக்கு உவமைகள் எழிலூட்டுவதோடு சுவையையும் கூட்டுகின்றன. மனத்தூறல் நூலில் மா.இராமகிருஷ்ணனின் கவிதையில் ,
முகமொரு தாமரைப் பூ
முன்பற்கள் முல்லைப் பூ
அகமொரு வெள்ளைப் பூ
அதன் விழி ஆடும் பூ
என குழந்தையின் செயல்களை அழகான உவமையில் பதிவு செய்கிறார். குழந்தையின் முகத்தைத் தாமரையாகவும் அதன் பற்கள் முல்லைப்பூவாகவும் மனதை வெள்ளைப்பூவாகவும் கண்களை ஆடுகின்ற பூவாகவும் உவமிக்கின்றார்.
எதுகை மோனைகள்
மலேசிய தமிழ்க் கவிதைகளில் எதுகை, மோனைகள் அமைந்து கவிதைக்குச் சுவையூட்டுகின்றன. ஐ.உலகநாதன் அவர்களுடைய ‘தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ?’ என்ற கவிதையில்
வீடு விளங்கிட பெற்ற குழந்தையை
நாடு விளங்கிடத் தாரோயோ-அவர்
பீடு விளங்கிடக் கேடு களைந்திட
பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ!
என வீட்டிற்கு ஒரு குழந்தையையாவது நாட்டுப் பணிக்குத் தந்திடல் வேண்டும் என்ற நல்ல சிந்தையையும் வீடு, நாடு, பீடு ,கேடு என்ற சொற்கள் மூலம் எதுகையும், விளங்கிட விளங்கிட என்ற சொற்கள் மூலம் மோனையையும் புகுத்தியுள்ளார்.
பாவலர் ந.பழனிவேலுவின் கவிதைகள் நல்ல பொருட்செறிவும், எளிமையான நடையிலும் அமைந்துள்ளன. எதுகைநயத்தோடு கவிதை புனைந்துள்ளார். தந்தை பற்றி அவர் எழுதிய கவிதையில்,
துட்டத்தனம் செய்யும் காலையில்-புத்தி
சொல்லிக் கண்டிக்கத் தவறிடார்
கெட்ட சகவாசம் போக்கிட - அவர்
கண்ணுங் கருத்தாய் முயலுவார்.
என்று பாடியுள்ளார். எதுகைகளைக் கவிஞர்கள் பயன்படுத்துவதன் மூலம் கற்பவர்களுக்கு ஓசைநயம் கிடைப்பதோடு ஆர்வமும் அதிகரிக்கும்.
அடுக்குச் சொற்கள்
நடையின் அழகுக்கு மேலும் மெருகூட்டக் கவிஞர்கள் அடுக்கு மொழிநடையைப் பயன்படுத்துவர். தம்பி என்ற கவிதையில் ந.பழனிவேலு அடுக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
வறுமைப் பேயினை மாய்த்திட ஒரு
வாளெடுக்க மாட்டாயா? –தம்பீ!
வாளெடுக்க மாட்டாயா?
பொருளிலா தவர் அற்ப ரென்றிடும்
பொய்யைப் போக்க மாட்டாயா?-தம்பீ!
பொய்யைப் போக்க மாட்டாயா?
இந்த அடுக்கு மொழிநடை படிப்பவர் மனதில் கருத்தை ஊன்றச் செய்வதற்கான உத்திமுறையாகும். மா.இராமகிருஷ்ணன் கவிதையிலும் அடுக்குச் சொற்களைக் காணமுடிகிறது.
கொட்டக் கொட்டக் குனிந்தது போதும்
கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்
என ‘போதும் போதும்’ என்ற கவிதையிலும், ‘இறப்புக்குப் பின்’ என்ற கவிதையில்
புகழ்பாடிப் புகழ்பாடி சூழ்ந்து வந்து
போற்றிடுவார் ஏற்றிடுவார் குறுகி நின்று
என அடுக்குமொழிநடையைப் பயன்படுத்துகிறார்.
பிறமொழிச் சொற்கள்
மலேசியக் கவிஞர்களும் தமிழ்க் கவிஞர்களைப் போலவே பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். ந.பழனிவேலுவின் கவிதையில்
‘உபாத்தியார்’
‘சர்வ கலாசாலை’
‘பப்பர்மெண்ட்’
‘ஜேப்பி’
‘அக்டோபர்’
‘ஸ்டார் பிரஸ்’
ஆகிய ஆங்கிலச்சொற்கள், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ஒரு சில கவிஞர்களின் கவிதைகளில் ஆங்கிலச் சொற்பயன்பாடு இல்லை. சான்றாக மா.இராமகிருஷ்ணன் கவிதைகள் நல்ல தமிழ்நடையில் அமைந்துள்ளன.
சொலவடைகள்
மக்கள் பேச்சுவழக்கில் கையாளுகின்ற சொலவடைகளைக் கையாண்டு கவிதைகள் படைப்பதையும் மலேசியக் கவிஞர்களின் கவிதைகளில் காணமுடிகிறது. இந்த சொலவடைகள் எல்லாம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிப்பதோடு பேச்சு வழக்கினையும் எடுத்துக் காட்டுகின்றன. கவிதையின் நடைக்கு அழகூட்டலையும் இந்தச் சொலவடைகள் செய்கின்றன. கவிஞர் மா.இராமகிருஷ்ணனின் மனத்தூறல் கவிதை நூலில்
‘இலவு காத்த கிளி’
‘பானையுள் குதிரை ஓட்டும்’
‘கத்தியைத் தீட்டி இங்கே
‘காரியம் நடக்கா!’
‘குட்டி போட்ட பூனை போல’
‘கும்பகர்ணன் தூக்கம்’
ஆகிய சொலவடைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
இயைபு
கவிதைகளில் இயைபைப் புகுத்தி நடைக்கு வலுவூட்டலையும் மலேசியக் கவிஞர்களின் கவிதைகளில் காணமுடிகிறது. ஓசைநயம் கூடுவதோடு படிப்பவர்கள் மனதில் எளிமையாகப் பதிய வைக்கும் உத்தியாக இயைபைப் பயன்படுத்தியுள்ளனர்.
அகிலத்தை ஆண்டிருந்த பெருமை யுண்டு!
அறிவாற்றல் நமக்கென்றும் நிறைய உண்டு!
முகிலையும் பிடித்துவரும் இளைஞ ருண்டு!
முயற்சியிலே தானெங்கோ குறைக ளுண்டு!
என்ற ‘தலைநிமிரச் செய்வீர்’ மா.இராமகிருஷ்ணன் கவிதை சிறப்பானது.
அடைகள்
கவிதைகளில் பெயரடைகளையும் வினையடைகளையும் பயன்படுத்துவது கவிஞர்களின் கற்பனையைக் கூட்டுவதோடு கவிதையைச் சுவைக்கச் செய்கிறது. செ.மு.ஜெயகோபியின் கவிதைகளில்
‘மாமணி’
‘தேன்கனி’
‘நன்மணி’
‘அகமகிழ்’
‘ நானிலம்’
‘கார்முகில்’
ஆகிய பெயரடைகள், வினையடைகளைப் பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலும் வருணிக்கும்போது அடைகளின் பயன்பாடு தேவையாகின்றது. ந.பழனிவேலுவின் கவிதைகளில்
‘பீடுநடை’
‘கரும்பச்சை’
‘கவின்மலைகள்’
‘பெரும்புதர்கள்’
‘காட்டுக்கூச்சல்’
‘பார்புகழ்’
‘மாநிலம்’
போன்ற அடைகளைப் பயன்படுத்தியுள்ளார். கவித்துவமான சொற்கள் இவ்வடைகளில் பயின்று வருவது சிறப்பானது.
மொழிநடை
கவிதைகளில் மொழிநடை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மு.வ “புலவரின் உள்ளத்தில் உண்மையும் உறுதியும் சிறந்து விளங்கினால் அவருடைய நடை திட்பமும் நுட்பமும் அமைந்ததாக இருக்கும். அவருடைய உள்ளத்தில் ஆர்வம் மிகுதியானால் நடையில் ஆற்றல் மிகுதியாகும்” என்பார். எனவே நல்ல கவிதைநடை அமையவேண்டுமானால் உள்ளத்தில் ஆர்வமும், தெளிவும் இருத்தல் அவசியமாகும். நல்ல கவிதைக்குச் சிறந்த சொற்களின் பயன்பாடு தேவைப்படுகிறது. சொற்களில் கவிஞன் புகுத்துகின்ற உத்திகள் கவிதையைச் சுவைக்கச் செய்வதோடு நடையின் இனிமைக்கும் வலுச்சேர்க்கின்றன. அந்த உத்திகளாகவே கவிஞன் உவமைகள், அடுக்குச் சொற்கள், இயைபு, எதுகை, மோனைகள், சொலவடைகள்,அடைச்சொற்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறான். இவை கவிஞனின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாது கவிதையின் உச்ச நிலையைத் தொடவைக்கின்றன. இலக்கிய உலகிலும் அவனைத் தலைநிமிரச் செய்கின்றன.
நிறைவாக
மலேசியக் கவிஞர்களின் கவிதைகளில் இருந்து அவர்கள் தமிழ் மரபுக் கவிஞர்கள் போலவே எளிமையான நடையில் கவிதை படைப்பதோடு, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல், நடையியல் உத்திகள் பலவற்றைப் பயன்படுத்திக் கவிதைக்கு மெருகூட்டுவதைக் காணமுடிகிறது. இதனால் மலேசிய தமிழ்க் கவிதைகள் நல்ல பொருட்சுவையும், சொற்சுவையும் பெற்று எளிய நடையில் விளங்குகின்றன எனில் அது மிகையில்லை.
துணைநின்ற நூல்கள்
1.மா.இராமகிருஷ்ணன், மனத்தூறல், மணிமேகலைப் பிரசுரம்,சென்னை-17, முதற் பதிப்பு 2011.
2.சுந்தரி பாலசுப்ரமணியம்(தொ), பாவலர் ந.பழனிவேலுவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில முத்துக்கள், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர், முதற்பதிப்பு 2013.
3.செ.மு.ஜெயகோபி, எண்ணங்கள், எஸ்.எஸ்..கிராபிக் பதிப்பகம், சிலாங்கூர் , முதற்பதிப்பு 2013.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.