புதுவை 75 : நித்தமும் கவிதை பூக்கும் நிலவு - செ. சுதர்சன் -
[ ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு (வரதலிங்கம் இரத்தினதுரை) தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோரிடமுண்டு. கவிதை, திறனாய்வு என அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்துள்ளது. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வரதபாக்கியான் என்னும் பெயரில் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் இவருமொருவர். முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். இந்நிலையில் அவரைப்பற்றி 2012இல் திவயின சிங்களப் பத்திரிகை புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் காவலிலுள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது. இது தவிர இதுவரை அவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் எவையுமில்லை - பதிவுகள்.காம் -]
அள்ளிடும் வாஞ்சை; அன்பை
ஆள்வதில் அரசு; நெஞ்சைத்
துள்ளவே வைக்கும் பாக்கள்
தூவிய நாக்கு; சின்னக்
கள்ளியில் கூட நேசம்;
கண்களில் கனவுத் தேசம்;
புள்ளி நீ எங்கே? எங்கள்
புதுவையே எழுபத்தைந்தா..!?
நிலமெலாம் திரிந்து பாட்டின்
நீளமாய் விரிந்தாய்; வீரர்
பலமெனப் படர்ந்து மண்ணின்
பாஷையாய் மலர்ந்தாய்; என்றும்
வலம்வரு காற்றில் குந்தி
வரிகளில் வாதை சொன்னாய்;
கலமெனப் பேனா ஏந்தி
களப்பணி வரித்து நின்றாய்!
விடுதலைப் பானை பொங்க...
வீறுகொள் அடுப்பை மூட்டும்
சுடுதணல் கவிகள் தந்தாய்!
சூழுமோர் பகையை உந்தன்
விடுகவி கொல்லும் என்றாய்!
விரிகதிர்ப் பொலிவை மண்ணில்
நடுமொளி வெல்லும் என்றாய்!
நாவிலே நாடு கொண்டாய்!