பயணியின் பார்வையில் – அங்கம் - 04: ஒக்டோபர் 28 நடிகை ருக்மணி தேவியின் நினைவு தினம்! - முருகபூபதி -
நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் ஜா – எலைக்கு அருகில் துடல்ல சந்தியை கடக்கும்போது நீங்கள் ஒரு சிலையை காணமுடியும். தேவதைபோன்று வெண்ணிறத்தில் காட்சியளிக்கும் அந்தச்சிலை நடிகை ருக்மணிதேவி. கொழும்புச்செட்டி சமூகத்தைச்சேர்ந்த இவரது முன்னோர்கள் தமிழர்கள். ருக்மணிதேவி சிங்கள திரையுலகில் பிரபல்யம் பெற்றிருந்தாலும் ஓரளவு தமிழும் பேசக்கூடியவர். சிறந்த பாடகி. அவர் நடித்த சிங்களப் படங்களில் அவர் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு அவரே குரல்கொடுத்தார். இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி பாடிவந்தவர். அக்காலத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்திலும் தோன்றியவர்.
1978 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி காலை வழக்கம்போன்று நீர்கொழும்பிலிருந்து கொழும்பில் வீரகேசரிக்கு வேலைக்குப்புறப்பட்டேன். எங்கள் நீர்கொழும்பூருக்கு கிரியுள்ளை என்ற ஊரிலிருந்து கொழும்பு நோக்கி வரும் கடுகதி இ.போ. ச. பஸ்ஸை காலை 7-45 மணிக்குப் பிடித்தால், கொழும்பு ஆமர்வீதி சந்தியில் 8-45 மணிக்குள் வந்தடைந்துவிடலாம். நான் வழக்கமாகச்செல்லும் பஸ். ஆசனம் கிடைப்பது அபூர்வம். நின்றுகொண்டு பயணித்தாலும், அந்த பஸ் கடுகதி என்பதனால் சோர்வு இருக்காது. ஜா – எலையில்தான் அடுத்த தரிப்பு வரும். அன்றைய தினம் துடல்ல சந்தியை நெருங்கும்போது எமது பஸ் தனது வேகத்தை குறைத்தது. வீதியில் பொதுமக்கள் நிரம்பியிருந்தனர். எட்டிப்பார்க்கின்றேன். வீதியில் இரத்தம் சிந்தியிருக்கிறது. ஒரு பெண்ணை சிலர் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அவரது உடலிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.