வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை முன் வைத்து.... - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
- அண்மையில் நிகழ்ந்த வ.ந.கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையிது. - பதிவுகள்.காம் -
மூன்று விதமான அறிமுகங்களாக என் பேச்சை ஆற்றலாம் என்றுள்ளேன். புத்தக வெளியீட்டின் அழைப்பிதழில் அறிமுகம் என்றாக சொல்லப்பட்டிருப்பதால் அறிமுகம் என்ற விடயத்திற்குள் அதிகம் எனது பேச்சைச் சுருக்க விரும்புகின்றேன். ஆனால் இதற்குள் சிறிய அளவில் புத்தகம் பற்றிய எனது பார்வையை எனது வாசிப்பின் அடிப்படையில் இணைக்கின்றேன். முதலில் அது என் அறிமுகம் , புத்தக ஆசிரியர் வந கிரிதரன் பற்றிய அறிமுகம் , இறுதியாக புத்தகம் பற்றிய அறிமுகமாக இருக்கும்.
முதலாவதாக என்னைப் பற்றிய அறிமுகம். இலக்கியம் என்பதற்கு எனக்கு வரவிலக்கணம் தெரியாது. கபொத சாதாரண தர வரையில் தமிழை ஒருபாடமாக கற்று இறுதிப் பரிட்சையில் மிகக்குறைந்த சாதாரண சித்தியை மட்டும் பெற்றவன். மக்களே என் ஆசான்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை அனுபவங்களே எனக்கான வழிகாட்டி. இவற்றின் அடிப்படையில் எனது தாய் மொழில் எழுதுகின்றேன் மேடைகளில் பேசுகின்றேன் கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றேன். மக்களிடம் இருந்து கற்றவையை செழுமைப்படுத்தி மக்களின் மன்னேற்றத்திற்காக அவர்களிடமே அதனை சமர்ப்பிக்கின்றேன் . நான் கற்றலுக்குத் தயாராக இருக்கும் மாணவன்தான்.