அண்மையில் கனடாவில் வெளியான ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வு வழமையான நூல் வெளியீடுகளைப் போலற்று அவரைப் பற்றி அறிந்தவர்களின் வாழ்த்துரைகளையே பிரதான அம்சமாகக் கொண்டு விளங்கியது. நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நினைவு நூல்' பெரிய அளவில் 932 பக்கங்களைக் கொண்ட விரிந்த நூல்.
நூலின் முக்கிய அம்சங்களாக விக்னேஸ்வரனின் அவரைப்பற்றிய அறிமுகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வர்த்தக சேவை அனுபவங்கள், இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாகினித் தமிழ்ப்பிரிவு அனுபவங்கள், கனடாப் புகலிட வாழ்வனுபங்கள், மற்றும் கனடாவிலிருந்து இயங்கும் 'டிவிஐ' தொலைக்காட்சி, 'சிஎம்ஆர் ' வானொலி அனுபவங்கள் ஆகியவற்றைக்குறிப்பிடலாம். இந்நூல் உடனடியாக எழுதப்பட்ட நூலல்ல. நீண்ட காலமாகத் 'தாய் வீடு' பத்திரிகையில் மாதாமாதம் எழுதப்பட்டுத் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற நூல். இதனால் அவருக்கு ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஆற அமர்ந்து , சிந்தித்து, விபரங்களைத் திரட்டி எழுதுவதற்குச் சாத்தியமிருந்தது. இருந்தாலும் அவர் இலங்கை வானொலியில் சேர்ந்த 1970 தொடக்கம் கனடாவில் 'டிவிஐ' தொலைக்காட்சியில் பணியாற்றிய 2010 வரையிலுமான நாற்பது வருட நிகழ்வுகளை நினைவில் வைத்திருந்து அவற்றை விரிந்த அத்தியாயங்களாக எழுதுவதென்பது அவ்வளவு இலகுவானதொன்றல்ல.
சிலருக்கு 'புகைப்பட நினைவாற்றல்' (Photographic Memory) இருக்கும் என்பார்கள். கடந்த காலச் சம்பவங்களை மிகவும் துல்லியமாக ஒரு புகைப்படம் எவ்விதம் ஒரு காலகட்ட வடிவத்தைக் காட்டுகின்றதோ அதுபோல் காட்டும் நினைவாற்றல் கொண்டவர்களை இவ்விதமான 'புகைப்பட நினைவாற்றல்' மிக்கவர்கள் என்போம். இவ்வித நினைவாற்றல் உள்ளவர்களை Eidetic Memory உள்ளவர்கள் என்றும் அழைப்பார்கள். இந்நூலில் விபரிக்கப்பட்டிருக்கும் விக்னேஸ்வரனின் வாழ்க்கை அனுபவங்களை வாசிக்கையில் இவரும் இத்தகைய நினைவாற்றல் உள்ளவர் என்பதை அறிய முடிகின்றது.
இந்நூல் பல விதத்தில் எனக்கு முக்கியமாகத் தோன்றுகின்றது. தனிப்பட்டரீதியில் என் பால்ய, பதின்ம வயதுகளில் என்னை ஆட்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் வர்த்தக சேவையின் ஆளுமைகள் பலரைப்பற்றிய விரிவான தகவல்களை, அவர்களது புகைப்படங்களைப் பார்க்க முடிந்தது மகிழ்ச்சியைத்தந்தது. அக்காலகட்டத்துக்கு நினைவுக்குருவி சிறகடித்துச் சென்று விட்டது. குறிப்பாகக் கே.எஸ்.ராஜா, இராஜேஸ்வரி சண்முகம், சில்லையுர் செல்வராசன் போன்ற ஆளுமைகள் பலரைப்பற்றிய தகவல்கள் மனதுக்கு உவப்பைத் தருபவை. அக்காலகட்டத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பிய வானொலி நாடகங்களைப் பற்றிய தகவல்கள் முக்கியமானவை. சில்லையூர் செல்வராசன் அவரது புகழ்பெற்ற 'தணியாத தாகம்' நாடகத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவலை வானொலி நாடகமாக்கினார். அதனை நான் தொடர்ச்சியாகக் கேட்காமல் தவறி விட்டேன். அது பற்றிய மேலதிகத் தகவல்கல் அதில் நடித்த நடிகர்கள் பற்றிய விபரங்கள், வெளியான அங்கங்களின் எண்ணிக்கை, அதற்குக்கிடைத்த வரவேற்பு போன்ற விடயங்களை அறிவதற்கு நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். அந்நாடகம் பற்றிய விபரங்கள் எவற்றையும் இவ்விரி நூலில் காண முடியவில்லையென்பது எனக்குச் சிறிது ஏமாற்றமே.
இந்நூலின் முக்கிய இன்னுமோர் அம்சம் அக்காலகட்டத்தில் இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையில் முக்கிய உயர் அதிகாரிகளாக விளங்கிய எழுத்தாளர் க.செ.நடராஜா, சீ.வீ.ராஜசுந்தரம், பொன்மணி குலசிங்கம் போன்றவர்கள் பற்றிய விபரங்களை, பல்வேறு வானொலிக்கலைஞர்கள் (நடிகர்கள், எழுத்தாளர்கள்) பற்றிய விபரங்களை, விக்னேஸ்வரனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களை, அவர்களது பங்களிப்புகளை, அவர்களது ஆளுமைப்பண்புகள் பற்றிய விக்னேஸ்வரனின் உணர்வுகளை இந்நூல் புலப்படுத்துகின்றது. ஆவணப்படுத்துகின்றது.
இன்னுமொரு வகையில் இது விக்னேஸ்வரனின் அவரது ஊடகத்துறை அனுபவங்களை விபரிக்கும் சுயசரிதை. தன் குற்றங் குறைகளை எவ்விதப் பாகுபாடுமற்று சுயபரிசோதனை செய்கின்றார். தனது ஆளுமையின் நேர் மறையான, எதிர்மறையான பண்புகளை எவ்விதத் தயக்கமுமின்றி வாசகர்கள் முன் வைக்கின்றார். அது அவரது எழுத்தின் நேர்மையை வெளிப்படுத்தும் முக்கியமானதோர் அம்சம். மேலும் இவ்விதமான அவரது சுய தேடல் , அதன் விளைவாக அவர் தனது ஊடகத்துறையில் அடைந்த வெற்றிகள், இத்துறையில் மட்டுமல்ல எத்துறையில் ஈடுபடும் எவருக்கும் தம் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்கு வழிகாட்டுபவையாக விளங்குகின்றன.
உதாரணத்துக்கு கொட்டாஞ்சேனை வர்த்தகர் ஒருவர் இவரது 'பொக்கற்'றில் திணித்த அன்பளிப்பைக் கொண்டு போய் அவரிடமே திருப்பிக் கொடுக்கின்றார். பொன்மணி குலசிங்கத்துடன் நிகழ்ந்த வாக்குவாதம் பற்றி வருந்துகின்றார். அதே சமயம் அதைக்காரணமாக வைத்து பின்னர் உயர் பதவியை அடையும் பொன்மணி குலசிங்கம் இவருக்கு எதிராகப் பெரிய அளவில் பழி வாங்கும் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
புதிய முயற்சிகளைச் சவாலாக எடுத்து வெற்றியடையும் இவரது ஆளுமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இவர் முதலில் அறிமுகப்படுத்திய ஒலிச்சித்திரம். கனடாவில் கணக்கியல் துறையில் படித்து அத்துறையில் உயர் பதவி பெற்ற சுய திறமை.
எழுபதுகளினிறுதியில் ரூபவாகினித் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பமான காலகட்டத்தில் இவரது நாடகத்தயாரிப்புகளை நாம் அறிந்திருந்தோம். அதற்கு முக்கிய காரணம் எம்முடன் மொறட்டுவைப் பல்கலைககழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த சாந்தி சச்சிதானந்தம், சிவசாமி குணசிங்கம் . இவர்கள் இவர் தயாரிப்பில் வெளியான நாடகங்களில் நடித்திருக்கின்றார்கள். அவர்களைப்பற்றியெல்லாம் இந்நூல் விபரிக்கின்றது.
இதுபோல் கனடாவில் இயங்கும் 'டிவிஐ' தொலைககாட்சி, 'சிஎம் ஆர்'வானொலிக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விளம்பரங்களைச் சேகரிக்கும் பணியாளர்கள் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக வேரெந்த நூலிலும் வாசித்த நினைவில்லை. இவற்றைப் பற்றி எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் ஆய்வு நூல்களுக்கெல்லாம் முன்னூலாக இந்நூல் அமைந்துள்ளது இதன் சிறப்புகளில் ஒன்று.
இந்நூலில் இவருடன் இலங்கை வானொலியில் பணியாற்றி, சக ஊடகவியலாளரான சாரதா சண்முகநாதனை மணம் புரிந்து ஆஸ்திரேலியா சென்ற வாசுதேவன் அங்கு காலமானார் என்று ஒரு வரியில் குறிப்பிட்டுச் செல்கின்றார். அவர் தன் வாழ்வைத் தானே முடித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். வாசுதேவனைப்பற்றி விரிவானதொரு கட்டுரையினை எழுத்தாளர் முருகபூபதி பதிவுகள் இணைய இதழில் எழுதியிருக்கின்றார். 1987 தொடக்கம் இலங்கை வானிலியின் தமிழ்ச் சேவையிலும், பின்னர் ரூபவாகினித் தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர் நடிகை, நர்த்தகி, வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் என்று பன்முக ஆளுமை மிக்க றேலங்கி செல்வராசா பின்னர் படுகொலை செய்யப்பட்டார், அவர் பற்றிய விபரங்களையும் நூலில் காண முடியவில்லை. ஒருவேளை விக்னேஸ்வரன் அங்கு பணியாற்றிய இறுதிக்காலத்தில் அவர் பணியாற்றத் தொடங்கியிருந்ததால் அறியாதிருந்திருக்கக் கூடும்.
இலங்கைத் தமிழர் ஆயுதப்போராட்ட ஆளுமைகள் பற்றிய தகவல்களையும் நூல் உள்ளடக்கியுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைககழகத்தலைவர் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக்கூட்டணிக்காகப் பணிபுரிந்த விடயம், பொத்துவில் கனகரத்தின் கொலை முயற்சியையடுத்துத் சந்தேக நபரான நாகராசா இவருடன் இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையில் பணியாற்றிய விடயம், அவர் கடன் பெறுவதற்காகச் சாட்சிக் கையொப்பமிட்ட தகவல் போன்றவற்றை இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார் விக்னேஸ்வரன்.
இன்னுமொரு விடயத்தையும் நூல் எடுத்துரைப்பதுடன் ஆவணப்படுத்துகின்றது. அது இவர் இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை, ரூபவாகினித் தொலைக்காட்சிச் சேவை ஆகியவற்றில் பணி புரிந்த காலகட்டத்தில் இவரது வளர்ச்சியைக் கண்டு புழுங்கிய சக்திகள் இவருக்கு ஏற்படுத்திய சிக்கல்கள், அவற்றை இவர் எதிர்கொண்ட விதம் ஆகியவைதாம் அவை.
இந்நூலின் முக்கியமான இன்னுமோர் அம்சமாக வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளிலுள்ள பல்வகைத் தொழில்களைப் பற்றிய விபரங்களை அறியத்தருவதைக்குறிப்பிடலாம். குறிப்பாகப் பல்வகைத் தயாரிப்பாளர்கள் (இசை, செய்தி, நிகழ்ச்சி ),உதவித் தயாரிப்பாளர்கள், அவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் போன்ற விடயங்களை இந்நூல் விபரிக்கின்றது. இத்துறைகளில் ஈடுபட விரும்பும் எவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள் இவை.
மொத்தத்தில், ஒலி, ஓளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் ஆவணச் சிறப்புள்ள இச்சுயசரிதையின் வெற்றிக்கு அவரது எழுத்தாற்றலும் கைகொடுத்துள்ளது. வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் எழுதியுள்ள விக்னேஸ்வரன் ஆரம்பத்தில் சிறுகதையும் எழுதியிருக்கின்றார் என்பதும் முக்கியமானது. விரிவாக, சுவையாகத் தன் அனுபவங்களை எடுத்துரைப்பதற்கு அவரது எழுத்தாற்றல் நன்கு உதவியுள்ளது என்பதற்கோர் சாட்சி 'நினைவு நல்லது'.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.