I
அண்மையில் வெளிவந்த, பதிவாளர் நாயகத்தின், சுற்று நிரூபத்தின்படி இந்திய வம்சாவளி தமிழர்கள், இனி இலங்கை தமிழர்கள் என அழைக்கப்படலாம். சுற்று நிருபத்தின் தலைப்பே பின்வருமாறு கூறுவதாய் உளது: “இனத்தினை குறிப்பிடும் பொழுது இந்தியத்தமிழ்… என்பதனை இலங்கைத்தமிழ்… என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்…”
சுற்று நிருபத்தின் முதலாவது ஷரத்து விடயத்தினை மேலும் தெளிவாக்குகிறது: “முன்னைய பரம்பரை இரண்டு, (தகப்பன் மற்றும் பாட்டன்), இலங்கையில் பிறந்திருந்தால், தமிழ் மற்றும் சோனகர்கள், இலங்கை தமிழர் அல்லது இலங்கை சோனகர் என அடையாளம் காணப்படல் வேண்டும்.” என்பதாகும்.
“காணப்படுதல் வேண்டும்” என்ற வார்த்தை பிரயோகம் எமது கவனத்தை ஈர்ப்பதாகும். இக் குறித்த சுற்று நிரூபமானது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முயற்சியால் மீளப்பெறப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்ட ஊடக அறிக்கையில் உண்மையிருப்பதாக தெரியவில்லை (அறிக்கை விபரம் :வீரகேசரி 25.10.2023).
ஏனெனில் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு (அதாவது செந்தில் தொண்டமானுக்கு) பதிவாளர் நாயகத்தால் அனுப்பப்பட்டிருக்கும் கடித்தில், அப்படியே அந்த சுற்று நிரூபம் வாபஸ் பெற்றுள்ளது குறித்து எந்தவொரு கூற்றும் இருப்பதாக இல்லை (25.10.2023). மேலும் இக்கடித பரிமாற்றங்கள், “ஒரே தினத்தில்” நடந்தேறியுள்ளமை, தனியாக குறிப்பிடக்கூடியது (ஏதோ சொல்லி வைத்தாற் போல்). இதே போன்று சுற்றறிக்கை தொடர்பான முதலாவது செய்தி வெளியுலகிற்கு, சுரேஷ் வடிவேலின் அறிக்கைக்கூடாகவே, வெளிவந்தது அநேக சந்தேகங்களை கிளப்பியதாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கதே.
இது ஒரு புறம் நடக்க, இலங்கையில், இதுவரை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இலங்கையின் குடிசன மதிப்பீடானது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து திடுதிடுவென ஆரம்பமானது என்ற அறிவிப்பு, இதே தினங்களில் வெளிவந்து மேற்படி விடயத்திற்கு கனத்த சுருதி சேர்ப்பதாய் இருந்தது (1.11.2023). மேற்படி சூழலின் தான், இந்தியாவின் நிர்மலா சீதாராமன் அவர்களும் மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்திறங்கினார். இவரின் விஜயம், ‘நாம்-200’இல் கலந்து கொள்வதற்காகவே, என்ற அடிப்படையில் செய்தி வெளியானது.
அன்னாரின் விஜயத்தின் போது, அநுராதபுரம் மகா போதி, கண்டி மல்வத்த–அஸ்கிரிய விஜயம் முதல் கோணேஸ்வரர்-நல்லூர் ஆலய தரிசனர்கள் போன்றவை-வழமையான பூச்சூடல்கள் எனக் கொண்டாலும், அவரது, திருகோணமலை எண்ணெய் குதங்களில், இநதாங்கிகளின் செயற்பாடுகளை துவக்கிவைப்பதற்கான விஜயமும் இந்திய அரச வங்கிகளின் திருகோணமலை-யாழ் கிளைகளை திறந்து வைத்தமையும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இது போலவே, அன்னாரின் இந்திய மலையக வீட்டுத்திட்டத்தின், நான்காவது கட்டமாக, 10,000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பௌத்த கோயில்களுக்கான உதவி மாணியமாக 15 மில்லியன் டாலர்களை வழங்கி, மன்னார் மின்சார கட்டமைப்புக்கூடாக, ஒளிரச் செய்வது என்பன அனைத்துமே பிறிம்பாய் நோக்கதக்கதுதான்.
இருந்தும், நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயமானது அவ்வளவாக வரவேற்கப்பட்டதாய் இல்லை-அல்லது அது போன்ற ஒரு தோற்றப்பாடு கட்டியெழுப்பப்பட்டதாக இருந்தது. உதாரணமாக விமானத்திலிருந்து அவர் இறங்கியதும் ஜீவன்-செந்தில்-ரமேஸ் போன்றோர் மலர் செண்டு கொடுத்து அவரை வரவேற்றிருந்தாலும், அரச சார்பில் அனுப்பப்பட்ட ராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரிய, நிர்மலா சீதாராமனை “வெறுங்கையுடன்” வரவேற்கச் செய்திருந்தது, திட்டமிட்டோ அல்லது இப்படியான தோற்றம் காட்டவா, என்பதெல்லாம் கேள்வியானது. இருந்தும், பாலசூரிய அவர்கள் ஜெர்மனியில் பிறந்தவர் என்பதும், கடந்த காலத்தில் அவர் உக்ரையினுடன் தொடர்பாடல்களை பேணியவர் என்ற அடிப்படையிலும், இவரை அரசு தேர்ந்தெடுத்திருக்கலாம்.
இல்லாவிடின், இந்தியா இன்று முகங்கொடுக்கும் நெருக்கடிகளான கனடிய நெருக்கடி (தூதுவர்களை வெளியேற்றியமை) அல்லது கட்டார் நெருக்கடி (8 இந்தியர்கள் மரணதண்டனை விதிக்கப்பட்டமை) அல்லது பாலஸ்தீனிய-இஸ்ரேல் நெருக்கடிகள் - அல்லது கடந்த வாரத்தில் ஆரம்பமான நாகபட்டின கப்பல் போக்குவரத்து ஒரே நாளில் சீர்குலைக்கப்பட்டமை அல்லது புதிதாய் மற்றுமொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டமை (SHEAN– 6) இவை அனைத்தும் நிர்மலா சீதாராமனின் விஜயத்தின் முக்கியத்துவத்தை இலங்கையால் குறைத்து மதிப்பிட அல்லது புறக்கணிக்க வைத்திருக்கலாம். இந்த ஒரு பின்னணியிலேயே மலையக மக்கள் இனி தமது இனத்துவ அடையாளத்தை கைவிடுமளவில் பதிவாளர் நாயகத்தின் சுற்று நிருபமும் வந்து சேர்ந்துள்ளது.
II
மலையக மக்கள் வந்திறங்கி 200 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற முழக்கம் பட்டி-தொட்டி தோறும் முழங்கி தள்ளும் காலம் இன்று நடைபெற்று வருகின்றது. இருந்தும், இவ் 200வது வருடத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து வெவ்வேறு அரசியல்களுக்கிடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதாவது, இக் கொண்டாட்டத்தை மலையக மக்கள் மாத்திரம் கொண்டாடாது தென்னிலங்கையின் பெருந் தேசிய வாதமும், புலம் பெயர் அரசியலும், ஏன் இந்தியாவும் கூட தத்தமளவில் கொண்டாட துணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இச் சூழலில் வேலுப்பிள்ளை முன்னெடுத்த அரசியல் பாதை வித்தியாசமானது என்பதனையும் குறித்தாக வேண்டும்.)
இப் பின்னணியில், கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட எச்சரிக்கையான, இன அடையாளங்களை இல்லாதொழிக்கும் இவ் வகை முயற்சிகள், இம் மக்களை வேரற்றவர்களாக்கும் முயற்சியாக அமையக்கூடாது என்ற எச்சரிக்கையும் ஒருகணம் எம்மால், மீட்டுப்பார்க்கத் தக்கதுதான்(2016). வேறு வார்த்தைகளில் கூறுவதனால், கடந்த சில வருடங்களாகவே இம் மக்களை உள்வாங்குவது அல்லது இலங்கையுடன் இவர்களை ஐக்கியமுறச் செய்வது என்ற கருத்துநிலை வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு தளங்களில் ஒலிக்கப்பட்டே வந்துள்ளது.
இம் மக்களை பாராபட்சப்படுத்தும் நடைமுறைகளும் சட்ட ஆவணங்களும் வலுவுடன் நடைமுறையில் இயங்குகையில், நடந்தேறும் இவ்வகை நடவடிக்கைகள், இச் சமூகத்திடை ஏற்படுத்தக்கூடிய சமூக–உளவியல் நெருக்கடிகள் - அல்லது தாக்கங்கள் யாதாக இருக்கக் கூடும் என்பதும் மறுபுறத்தில், இந்நடவடிக்கைகள் இவர்களின் சிறுபான்மை அடையாளத்தை இழக்க செய்து, இவர்களை மேலும் அனாதரவாக்கி விடுமோ என்ற கேள்விகளும் தோன்றவே செய்கின்றன.
முக்கியமாக, இலங்கை போன்ற ஒரு நாட்டில், இன விகிதாசாரியிலான வேலை வாய்ப்புகள், பல்கலைக்கழக அனுமதிகள், அரச–வள அபிவிருத்தி ஏற்பாடுகள் - அனைத்தும் இன்று இல்லாதொழிக்கப்பட்டு, “எல்லா மதங்களும் எல்லா மொழிகளும் இங்கே சமன்” என்ற கோதாவில் சிறுபான்மை இன உரிமைகள் கேட்பார் கேள்வியற்று ஒட்டுமொத்தமாக பறிப்படுகையில் - இவ் உள்வாங்குதல்கள் - எத்தகைய நசிதலை இச் சிறுபான்மை சமூகத்திடை ஏற்படுத்தக் கூடும் என்பதே பொதுவான அச்சமாக உள்ளது.
வெவ்வேறு சர்வதேச நாடுகள், தத்தமது சிறுபான்மை இனங்களின் தராதரங்களை உயர்த்துவதற்காக, தத்தமது அரசியல் அமைப்புக்களில் அதற்கான சிறப்பு வடிவமைப்புக்களை அல்லது சிறப்பான சரத்துக்களை கொண்டிருக்கையில், இலங்கை உயர்நீதிமன்றமானது, சிறுபான்மை இனங்களின் விகிதாசார கோரிக்கையை இரத்துச் செய்து அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை உயர்த்தி பிடிப்பதாய் இருந்தது. (இலங்கையின் வடகிழக்கை தமது தீர்ப்புகளினூடு நிரந்தரமாக பிரித்த கதை போன்று). இதனடிப்படையில், பல்கலைக்கழகத் தேர்வுகள் கூட, இன்று பிரதேச அடிப்படையில் வழங்கப்படுகின்றதே தவிர இன விகிதாசார அடிப்படையில் அல்ல என்பதும் குறிக்கத்தக்கது.
விடயங்கள் இவ்வாறு இருக்கையில், “மலையகம் ஒரு சேமிப்பு சக்தி” என்ற புலம்பெயர் அரசியலின் கோஷமும் மேற்படி போக்குக்கு சுருதி சேர்ப்பதாய் உள்ளது என்பதனையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சுருக்கமாக கூறினால், ஜே. ஆர். அவர்கள் வட-கிழக்கு போர் உச்சம் காட்டிய ஒரு நிலைமையில், இந்திய தலையீட்டை அகற்றி கொள்ளும் நோக்குடன், ஒரு செயற்கை உண்ணாவிரதத்தை தூண்டி விட்டு, பிரஜாவுரிமை பறிப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு ஒரு கணத்தில் பிரஜாவுரிமை வழங்கி இவர்களை இணைத்த நடைமுறையானது, இன்று சற்று மாறுபட்டதாக காணப்படுகின்றதோ-இப்படி இன அடையாளங்களை அழிப்பதற்கூடு என்ற கேள்வியை எழ செய்கின்றது. (உள்நோக்கம் ஓரளவில் அதுவாகவே காணப்படினும்).
III
“நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும்” என்ற மாவையின் அறிவிப்பு வெளியான அதே தினம், “சீனாவைக் காண்பித்து இந்தியாவை அச்சுறுத்த மாட்டோம்” எனும் சுமந்திரனின் அறிக்கையும் பக்க பக்கமாய், வெளியானது. (வீரகேசரி: 06.11.2023). சுமந்திரனின் அறிவிப்பில் எந்தளவில் உண்மை உண்டு என்பது தெளிவாக தெரியாவிடினும் அண்மையில் இடம் பெற்ற நிர்மலா சீதாராமனின் வடக்கு விஜயத்தை தொடர்ந்து, சீன தூதுவரும் வடக்கிற்கான தமது விஜயத்தை ஆரம்பித்து, வடக்கு மக்களுக்கான தனது வீடமைப்பு திட்டத்தை அறிவிக்கவே செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனத்தின் மேற்படி நகர்வுகள், இலங்கை அரசின் அனுசரணையின்றி நடந்திருக்க முடியாது என்பதும் இது போன்றே சீனத்தின் இரண்டாவது ஆய்வுக்கப்பலும் இந்திய கரிசனைகளை மீறி இங்கு வரவிடப்பட்டதும் குறிக்கத்தக்கதாகின்றது.
இது போலவே, கனடாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு (இந்திரகுமார் பத்மநாதனுக்கு,) யாழ் ஜனாதிபதி மாளிகையானது கையளிக்கப்படும் என்ற முயற்சியும், அதற்கூடு மேம்பட்ட கல்வி வாய்ப்புகளுக்கான வசதிகளை செய்து தருவதாய் கூறுவதும், பயங்கரவாத செயற்பாடுகளுக்காக, இதுவரை கருப்புப் பட்டியில் இடம்பெற்றிருப்பதாய் கூறப்படும் இருவரின் பெயர் நீக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டிருப்பதும் (24.10.2023) புலம் பெயர் அரசியலுடன் இவ் அரசு தொடர்பாடல்களை இன்று, பேண முற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழ செய்கின்றது. இது போலவே, “மலையக மக்களின் 200 வருட துயரம்” என்ற புலம்பெயர் சார்பான கருத்தரங்கிற்கு தமிழக அரசு தடை விதித்து, பின் இதனை “நாடு கடந்த அரசு” கண்டித்து அறிக்கை விட்டதும் (20.10.2023), நாகபட்டினம் கப்பல் சேவை ஒரு நாளிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும், மாறி வரும் ஒரு அரசியல் சூழலை காட்டுவதாக உள்ளதா எனும் கேள்வியை எழுப்ப செய்கின்றது.
இருந்தும், இவை, தென்னிலங்கையானது தனது, இன ரீதியான கண்ணோட்டங்களை மாற்றிவிட்டது என காட்டுவதற்கு போதுமானதாக இல்லை. காரணம், இது போன்ற நிகழ்வுகள் கடந்த காலத்திலும் இடம்பெற்றே உள்ளன என்பதும் கோடிட்டு காட்டத்தக்கதாகின்றது.
உதாரணமாக, இந்நடவடிக்கைகள் அர்த்தபடுத்தப்பார்க்கும், வடக்கு நோக்கிய கெடுபிடிகளின் தளர்த்தல் என்பது பிரேமதாச காலத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கு நிகரானதாகவே உள்ளது எனவும் “இத்தளர்த்தல்கள்” அனைத்தும், ஓர் அதிகார பரவலாக்கத்தினை நோக்கியோ அன்றி குறைந்தபட்சம், வட-கிழக்கின் சமத்துவ உரிமைகளை நோக்கியோ பயணிப்பதாக இல்லை என்பதனையும் மேற்படி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியே உள்ளனர்(03.11.2023).
அதாவது, சுருக்கமாக கூறினால், இவ் ஆய்வாளர்களின் கருத்துப்படி, தற்போது நடந்தேறும் விடயங்கள் யாவும், சாராம்சத்தில் இந்தியாவை தள்ளி வைக்கும் எதிர்ப்பு நகர்வுகளேயன்றி, சிறுபான்மைகளின் சமத்துவம் நோக்கிய நகர்வுகள் அல்ல என்பதே இவ் ஆய்வாளர்களின் வாதமாகின்றது. இச் சூழ்நிலைகளிலே நாள் ஒன்றுக்கு 10 குடும்பம் வீதம், திருகோணமலையிலிருந்து அகன்று வெளிநாடு கிளம்பி செல்கின்றனர் என்ற தமிழ் கட்சி ஒன்றினது அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
காசாவில் இருந்து, மக்கள் வெளியேற, வசதி செய்து தரப்படும் என்ற சர்வதேசத்து கோரிக்கையின் பின்னால் மறைந்துள்ள அரசியல்-இராணுவ சூட்சுமங்களை இஸ்ரேல் எப்படி நுணுக்கமாக வரவேற்கின்றதோ, அது போன்றே இலங்கையில் இருந்து தமிழர்களின் வெளியேற்றத்தையும் - சம்பந்தப்பட்ட சக்திகள் -(சர்வதேசமாக இருக்கலாம் அல்லது தென்னிலங்கையாக இருக்கலாம்) நுணுக்கமாக வரவேற்றுக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில், இப்படியான வெளியேற்றம் இந்திய காலடி வைப்புக்கான சாத்தியகூறுகளை முற்றாக இல்லாதொழித்து விடும் என்பது மேற்படி ஆய்வாளர்களின் கூற்றாகின்றது. இந்த ஒரு பின்னணியிலேயே, பதிவாளர் நாயகத்தின் சுற்று நிரூபமும், நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயமும் நுணுகி நோக்கத்தக்கதாகின்றது.
IV
இலங்கையானது, ஒன்றுமே அறியாதது போல் இப்படி குழப்பியடிக்கும் கைங்காரியங்களை விடாப்பிடியாக செய்து வந்தாலும், தமது அமெரிக்க சார்புநிலையை மறைப்பது என்பது இலங்கைக்கு கடினமாகவே இருக்கின்றது. (உதாரணம் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரபலமான இரு பேட்டிகள்).
இனவாதத்தை முடுக்கி விடுவது, அல்லது, “வரிசைகளின் யுகம்” மீண்டும் வரலாம் என்ற அச்சத்தினை மக்களிடையே ஊட்டிவிடுவது-இவற்றுக்கூடு மக்களின் பயங்களை ஆட்டுவித்து, தமது ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதுமே இன்றைய தேவைப்பாடு என ஆட்சியாளர்கள் திடமாக நம்பதுணிந்து, விடயங்களை கட்டவிழ்த்துள்ளனர் என்பதனை காட்டும் நகர்வுகள் நாள்தோறும் இடம் பெறத் தொடங்கி விட்டன. (உதாரணமாக மயிலத்தடி, காணிப்பறிப்பு முதல் குருந்தூர் மலை வரையிலான அரசியலை குறிப்பிடலாம்).
ஆனால் மேற்குறித்த இவ்விரண்டு நடைமுறைகள் மாத்திரமே போதுமானது இல்லை. முக்கியமாக, IMF உதவிகள் கரங்களுக்கு கிட்ட வேண்டுமெனில் இங்கே, வேறு ஒரு நடைமுறையும் அவசியமுறுகின்றது, என்பதே விடயமாகின்றது. அதாவது, இலங்கை போன்று ஒரு ப10கோள தந்திரேபாய அமைவிடத்தில் இருக்க கூடிய ஒரு நாடு, கைக்கொள்ளக்கூடிய வெளிநாட்டுக் கொள்கை யாது என்பதே மொத்தத்தில் சாராம்சமான கேள்வியாகின்றது. அதாவது இப்பிரதேசத்தை பொருத்த வரையில் சீனத்தை, ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதைவிட, இந்திபாவை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிக முக்கியமானதென மேற்கு கருத இடமுண்டு. இதனாலேயே, இந்தியாவிற்கு எதிரான பல்வேறு அரண்களை கட்டுவிக்கவும் அது நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இந்நகர்வில் இலங்கையின் அல்லது புலம் பெயர் அரசியலின் நகர்வுகள் யாதாய் இருக்க கூடும் என்பது இவ் ஆய்வாளர்கள் கேட்கும் கேள்வியாகின்றது.
இதுவே, இலங்கையில் இனவாதத்தை ஊக்குவித்து அதற்கூடு, தமது ஆட்சியை தக்க வைக்கும் அதே நேரத்தில், இதன் ஒரு கிளையாக இந்திய எதிர்ப்பு வாதத்தை தூண்டி மேற்படி அரணிகளில் ஒன்றாக அமைந்து போக வைக்கின்றது என்பதும் உண்மையாகின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலேயே நிர்மலா சீதாராமனின் அண்மித்த விஜயமும், புறக்கணிப்பும், மலையக மக்களின் இன அடையாளத்தை ஒழித்துவிடும் சுற்று நிரூபமும் வெளியாக உள்ளது. இவை இரண்டுமே, மலையக மக்களின் 200வது வருடத்தைக் கொண்டாடுகின்றோம் என்ற கோதாவிலேயே நடந்தேறியுள்ளது என்பதுவும் குறிக்கத்தக்கது. ஆனால் ஒரு மனோ கணேசனோ, அன்றி தோட்டங்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தை இறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் மலையக புத்தி ஜீவிகளும்- புலம் பெயர் சக்திகளின் வேண்டுகோளின்படி கருத்துக்களை தெரிவிப்பார் அன்றி, மக்களின் நலன் தொடர்பில் ஆழமாக எதனையும் கூறுவார் எனக் கருத முடியாது.
‘நாம்-200’ விழாவிற்கான அழைப்பு தாமமாகவே தமக்கு வழங்கப்பட்டதாகவும் (28.11.2023) இவ்விழாவானது 2ம் திகதி நடக்க இருக்கையில் 1ம் திகதி இரவு 9.00 மணிக்கே தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமையினால், தமக்கு வந்து சேர முடியாமல் போனதை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் எடுத்துக்கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “கொழும்பிலிருந்து விழா குழுவினர் முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள் என்று வேண்டினர்… முதலமைச்சரின் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது… ஆனால் முதலமைச்சரின் வாழ்த்து செய்தியை இவர்கள் இலங்கையில் நடைபெற்ற விழாவில் ஒளிபரப்பவில்லை…” (தினத்தந்தி: 7.11.2023)
அதாவது, அழைப்பிதழ் ஏன் இலங்கை தொழிலாளர் காங்கிரசால் தாமதித்து வழங்கப்பட்டது? அனுமதி ஏன் கடைசி நேரத்தில் டில்லியால் வழங்கப்பட்டது-ஏன் முதலமைச்சரின் செய்தி வாசிக்கப்படவில்லை – என்பன அனைத்தும் புதிய கேள்விகளை முன்னெடுப்பதாகவும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் உள்ளது. இச் சூழ்நிலையிலேயே கொழும்புத்துறைமுக கட்டுமானத்திற்கு 553 மில்லியன் டாலர்களை அமெரிக்கா 20 வருட கடனுதவியாக குழுமத்திற்கு வழங்கும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இது இலங்கையில் வடக்கு நோக்கி முனைப்பு பெறும் சீனத்தின் நகர்வுகளை தடுக்க உதவி செய்யும் என கூறிக் கொண்டாலும், இதன் உண்மைத் தண்மை இனி வரும் காலங்களில் தான் வெளிவருவதாக இருக்கும்.
இவற்றையெல்லாம் உள்வாங்கி இலங்கையில், சிறுபான்மை தலைவர்கள் நடந்து கொள்ளாவிடின் இவர்கள் இம்மக்களை கொண்டுபோய் சேர்க்ககூடிய இடங்கள் அல்லது புள்ளிகள்; சோதனை மிக்கதாகவே இருக்கும், என்பதில் சந்தேகமில்லை. சுருக்கமாக கூறினால், “கையாளுதல்” எனப்படுவது “நம்பகத்தன்மையை” இல்லாதடிப்பது என்பதாக இருக்குமானால், விடயங்கள் அதிக மோசமான நிலவரங்களைத்தான் உண்டு பண்ணும்.
கானா அல்லது முள்ளிவாய்கால் நிலவரங்களை கட்டமைத்துவிட்டு, “நாங்கள் மௌனிக்க செய்து கொண்டோம்” என நம்மை நாம் தேற்றிக் கொள்வது, எமக்கு சரியானதெனினும், எமது அடுத்த தலைமுறைக்கு சரியானதாக அமையாது. இச்சூழலில், ‘நம்பகத்தன்மை’ என்பது பெரிதும் கோரபடும் ஒன்றாகும். இதனை யார் சார்பாக, எந்தளவில் முன்னிறுத்துவது என்பது வேறு கேள்வி. (நம்பகத்தன்மையை இழக்க செய்தப்பின், பாடலை, மாற்றி பாடியும் ஆகபோவது ஒன்றுமில்லை எனலாம்).
இப் பின்னணியில், சுற்று நிரூபத்தை, முதன் முதலில் போட்டுடைத்த, சுரேஷ் வடிவேல் அவர்கள், எப்படி எவ்வாறு, இச்சுற்று நிரூபம் தொடர்பிலான தகவல்களை தேடி கண்டு கொண்டார் என்பது முதல் அநேக கேள்விகள் உண்டு. முக்கியமாக, இவ்வெளிப்படுத்தலின் பின்னர், சுரேஷ் வடிவேலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் தொடர்புபட்ட கேள்விகளாகின்றன. (கட்சியில் இருந்து அவரை நீக்குவோம் எனக் கூறப்பட்டதோடு சரி).
இதே போன்று, நாம்-200, விழாவுக்கு ஏன் அழைப்பிதழானது தாமதமாக அனுப்பப்பட்டது அல்லது தமிழக முதலமைச்சரின் செய்தியானது ஏன் விழாவில் வாசிக்கப்படவில்லை என்பது பொறுத்து தெளிவான பதில்கள், இது வரை, வந்து சேர்ந்ததாய் இல்லை. இவை அனைத்தும், நகர்த்தப்படும் பகடைகளில், தானும் ஒரு காயாக மாறிவிட்டோமா என்றளவிலேயே, மலையக தலைமைகள் உருவாகி வருவதாய் உளது.
இது போன்றே, வட-கிழக்கை எடுத்தாலும் கூட, 13ஆவது திருத்தத்தை ஒரு துவக்க புள்ளியாகக் கூட கொள்ள முடியாது என்று கோரிய புலம் பெயர் அரசியலும் அவர்தம் உள்நாட்டு முகவர்களும் அல்லது வடமாகாண சபையைமுற்றாக வினைத்திறனற்றதாக்கி, இல்லாதொழித்து விட்டு, இன்று ஒரு விதத்தில் குருந்தூர் அரசியலை அரங்கேற்றியவர்களின் நம்பகத்தன்மை எவ்வாறு பார்க்கப்படும் என்பதெல்லாம் கேள்விகளாகின்றன. போதாதற்கு, இவ்வளவையும் கண நந்த் தாமதமின்றி செய்து முடித்த தலைமைகள் ‘இனி கடிதம் எழுத போகின்றோம்’ என்பதும் ‘எம் இருவருக்குமே நோய் பிணிக்கான மருத்துவம் தேவையுறவே செய்கின்றது' என்பதும் பரிதாபகரமான நிகழ்வுகள்! பரிதாபகரமான அரசியலே..
இத்தகைய சூழலிலேயே, மலையக தலைமைகளும் இதே பண்பியலைக் கொண்டனவாக ஆகிக் கொண்டிருக்கின்றன இந்த புலம் பெயர் அரசியலின் ஆதரவு, அனுசரனைகளுடன் என்ற எண்ணம் மேவாது இருப்பதில்லை. இதனை, இன்றைய தமிழ் ஊடகவியலாளர்கள் “வாயால் வடை சுடுபவர்கள்” என்றும் ‘ஓட்டை வாயர்’ என திட்டும் தருணங்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகைய ஒரு சூழலில் தான், அழைப்பிதழ் தாமதித்து விடுபட்டதும், சுற்று நிரூபம் மர்மமான சூழலில் வெளி கிளம்பியதும் நடந்தேறியுள்ளது. வேறு வார்த்தையில் கூறினால், இதனை ஒரு பேசு பொருளாக்கி, ஒரு பேரத்தில் ஈடுபட, இந்தியாவை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனாலும், விடயங்கள் வேறு விதமாய் நகர்வதாயுள்ளன.
அண்மை பேட்டி ஒன்றின் போது இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் பின்வருமாறு கூறி இருந்தார். “நேற்று இருந்த இந்தியா இன்றில்லை. சிவில் மற்றும் ஆயுத படைகளின், ஒருங்கிணைப்பை இன்று ஏற்படுத்திக் கொண்டு, கண நேரத்தில், அவை ஒன்றிணைந்து இயங்கக்கூடிய, ஒரு கட்டமைப்பை இந்தியா இன்று தன்கைத்தே கொண்டுள்ளதாயுள்ளது. தேவை ஏற்படின், நொடியில் அவை இணைந்து செயல்படும்.” (6.11.2023)
இது போன்றே, அதானி குழுமத்தின் தலைவர் பின்வருமாறு தெரிவித்தார்:
“கொழும்பு துறைமுகத்தின், மேற்கு நுழைவாயிலில் (West Terminal) இரண்டாவது ஆழ்கடல் முகம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது. இதற்காக, அமெரிக்கா, எம் குழுமத்துக்கு 553 மில்லியன் டாலர்கள் கடனுதவியை தந்துள்ளது. இக் கடன் 20 வருட காலத்தில் திருப்பி செலுத்தத் தக்கது. இதற்கான பேச்சுவார்த்தை 18 மாதங்களாக நடந்தது.” அதாவது, கைசாத்திடுவதற்கான நகர்வுகள் 18 மாதகாலம் நீடித்துள்ளன எனலாம். இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கும் அதானிக்குமிடையே கைசாத்திடும் வேளை, சீனத் தூதுவர் தன் வடக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்தார். இச் சூழலிலேயே, எமது நம்பகத்தன்மை எவ்வாறு கட்டி எழுப்பப்பட்டுள்ளது, என்பது குறித்து நாம் கேட்டு கொள்ள வேண்டிய தருணம் உதயமாகி உள்ளது. இவற்றை விடுத்து, ‘உக்ரைனுக்கான தமிழர் இயக்கம்’ அல்லது 'இஸ்ரேலில் உண்மையில் அணு ஆயுதம் உண்டா’ என புலன் விசாரனை செய்வது ரசிக்கதக்கதாக இருக்கலாம் தவிர ‘கறிக்கு உதவப்போவதில்லை’ என்பதனை சொல்லியே தீர வேண்டும்.
முக்கியமாக, இன்று தீவிரமடைய துவங்கி இருக்கும் உக்ரேனிய-ரஷ்ய போர், பாலஸ்தீய-இஸ்ரேல் போர், மேலும் ஈராக்கிய அமெரிக்க தளங்கள் தாக்குதல்களுக்குள்ளானமை, அல்லது தீவிரமடையும் ரஷ்ய-சீன நாடுகளின் கூட்டு அல்லது உலகளவில் கையோங்கும் சீன அதிகாரங்கள் (தற்போது 50 நாடுகளில், 100க்கும் அதிகமான துறைமுகங்களில் சீன முதலீடுகள் உண்டு என அண்மையில் வாஷிங்ட்டன் போஸ்ட் கூறியது – 6.11.2023).
இவை அனைத்தும் இந்திய –இலங்கை உறவுமுறையை அல்லது இந்திய-இலங்கை உறவுமுறையில் கணிசமான மாற்றத்தைக் கொண்டு வரலாம். இதன் உடனடி வெளிப்பாடு, அதானி குழுமத்துடன் செய்துள்ள ஒப்பந்தம் தொடர்பில் பெரிதும் வெளிகாட்டாவிட்டாலும் நேற்றைய தினங்களில் டில்லியில் நடந்து முடிந்த 2102 மாநாட்டின் (ஐந்தாவது) பெறுபேறுகளில் வெளியாகலாம். ஆனால் இதற்கு சில காலம் சென்றாக வேண்டும். என்ற போதிலும், இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடு, ஜெய்சங்கர் கூறுவது போல், யாரிலும் முற்றாய் தங்கி இராது தனது நலன்களை முன்னெடுப்பதில் அக்கறை கொண்டதாகவே இந்தியா இருக்கும். ஆனால மிக நெருங்கிய நாடான இலங்கையில், அதன் கண், அதிகளவில் பதிந்தே இருக்கும்-இதனாலேயே ஒரு நம்பகதன்மை தொடர்பில், சிறுபான்மை சக்திகள் மீள் பார்வை செலுத்த வேண்டிய சூழலை நோக்கித் தள்ளப்படுகின்றன. இது, கடந்தகாலம் சம்பந்தமான விமர்சனங்களை மாத்திரம் உள்ளடக்காமல் தமது கனவு நிலையில் இருந்து இறங்கி வராமல் சாத்தியப் பட போவதில்லை எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.