பகுதி ஒன்று (சென்ற இதழ் தொடர்ச்சி)
தனது எல்லையிலிருந்து, கிட்டத்தட்ட 500கி.மீ தொலைவிலுள்ள, ரஷ்ய விமான தளமான, ஏங்கெல்ஸ்-2ஐ, உக்ரைன் 04.12.2022 இல், தனது ட்ரோன்கள் மூலம் தாக்கியதற்கூடாக, ரஷ்ய-உக்ரைன் போரை இன்னுமொரு புதிய தளத்திற்கு, உக்ரைன் கொண்டுசென்று சேர்த்தது என கூறலாம். அதாவது கிரைமியாவின் பால-தாக்குதல், பின் ரஷ்யாவின் கடலுக்கடியிலான, எரிவாயு குழாய் தாக்குதல், இவற்றுக்கு பின்னதாக நடைபெற்றுள்ள ரஷ்யாவின் இவ்விரு விமான தளங்களின் மீதான தாக்குதல்கள் உலக அவதானிப்பை பரந்த அளவில் பெற்றுள்ளது. ரைசன் விமானதள தாக்குதலை விட ஏங்கெல்ஸ் விமான தள தாக்குதல் நிர்ணயகரமானதாக கருதப்படுகின்றது. காரணம், இவ்விரு தளங்களிலும், இத்தளமே, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. இத்தாக்குதல் தொடர்பில், இதுவரை, இரண்டு பொருட்கோடல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, கார்டியன் போன்ற மேற்குலக ஊடகங்களின் கூற்று. மற்றது, மெக்ரோகர் போன்ற யுத்த வல்லுனர்களின் கூற்று.
கார்டியனின் கூற்றுப்படி, இதுவரை பாவிக்கப்பட்டிராத, மிக நுணுக்கமாய் வடிவமைக்கப்பட்ட, முன்னேறிய, 'ட்ரோன்'களை கொண்டு உக்ரைன் தாக்கியது, என்பது ஒரு வகை. அதாவது, புதிய வகை 'ட்ரோன்'களின் புதுவரவு. இப்புது வரவே, இவ்விரு விமான தளங்களின், தாக்குதல்களை சாத்தியப்படுத்தி இருந்தன. உக்ரேனிய எல்லையில் இருந்து, கிட்டத்தட்ட 500கி.மீற்றருக்கு உள்ளே, ரஷ்யாவில் ஆழ அமைந்து கிடக்கும் –அதுவும் ரய்சான் தளம் மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட, 150கி.மீற்றர் தொலைவிலேயே உள்ளது என்ற சூழ்நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், மெக்ரோகரின் பொருள்கோடல்: இத்தாக்குதல்கள், உக்ரைனில் இருந்து புறப்பட்ட புதிய வகை 'ட்ரோன்'களால் நடத்தப்பட்டவை ‘அல்ல’. மாறாக, ரஷ்யாவின் உள்ளேயே இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இதுவாகும் என்பதே அவரது பொருள் கோடலின் உள்ளடக்கமாகும்.
முன்னர் குறிப்பிட்ட, கார்டியனின், முன்னேறிய 'ட்ரோன்'கள் பொறுத்த கூற்று, ரஷ்யாவின் 'ட்ரோன்' விடயங்களை திசை திருப்பவும், ரஷ்யாவை தொடர்ந்தும் இருட்டில் ஆழ்த்தவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். ஆனால் மெக்ரோகரின் பார்வையில், ரஷ்யா ஒரு பிரமாண்டமான எல்லைகளை கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படி விரிந்து கிடக்கும் ஒரு நாட்டின், எல்லைகளுக்கூடாக, ‘ஆழ ஊடுருவுவது’ என்பது மிக எளிதான ஒரு விடயம்தான் என்பது அவரது கருத்தாகின்றது.