கலை இலக்கிய வித்தகர் “ பாடும்மீன் ” சு. ஶ்ரீகந்தராசவின் வாழ்வும் பணிகளும் ! அக்டோபர் மாதம் அகவை 70 இல் பயணிக்கும் பல்துறை ஆளுமை ! ! - முருகபூபதி -
‘பாடும்மீன்‘ என்ற சொற்பதம் ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? எனக்கேட்பார்கள்! அதுபோன்று மீன்பாடுமா..? எனவும் கேட்பார்கள்! மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால், கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை கேட்கமுடியும். அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அருட்தந்தை லோங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்.
பாடும்மீன் என்ற பெயரில் இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம், அந்தப்பெயரையே முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
1991 ஆம் ஆண்டு ஒருநாள் எனது மெல்பன் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத்திறந்தேன்.
நண்பர் தமிழரசன், தன்னோடு அழைத்து வந்திருந்தவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “ இவர்தான் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா “ என்றார்.
முன்னர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. அன்றைய கலந்துரையாடலில் இவரிடம் உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.