தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (5) - வ.ந.கிரிதரன்-
அத்தியாயம் ஐந்து: இருப்பின் புதிரொன்றும் , நங்கையுடனான சந்திப்பும்!
"நான் மாதவன். யுனிட் 203இல் வசிப்பவன். போஸ்ட்மன் தவறுதலாக உங்களுக்குரிய கடிதத்தை என் தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுச் சென்று விட்டார். உள்ளே ஏதோ ஒருவிதமான அட்டை , கடன் அட்டை அல்லது வங்கி அட்டையாகவிருக்கலாம், இருப்பதுபோல் தெரிகிறது. அதனால்தான் அதனைக்க் கொடுப்பதற்காக இங்கு வந்தேன்" இவ்விதம் ஆங்கிலத்தில் கூறினான் மாதவன். அத்துடன் கடிதத்தையும் அவளிடம் கொடுத்தான்.
அதற்கு அவள் பதிலாக , ஆங்கிலத்தில் "ஓ. மிகவும் நன்றி. இவ்விதம் நேரமெடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதனை மிகவும் மதிக்கின்றேன். இன்னுமொன்று .. நீங்கள் கேரளக்காரரா? உங்கள் பெயர் அங்கு பிரசித்தமானது. அதிகமாகப் பாவிக்கப்படும் பெயர்களில் ஒன்று" என்று கேள்வியுடன் பதிலளித்தாள்.
"நான் கேரளக்காரன் அல்ல. தமிழ்நாட்டுக்காரனும் அல்ல. ஶ்ரீலங்கன். நீங்களும் ஶ்ரீலங்காவா" என்றான் மாதவன்.
இதற்கு அவள் இலேசாக முறுவலித்தபடியே "இல்லை, நான் தமிழ்நாட்டுக்காரி. தஞ்சாவூர்க்காரி. ஆனால் அம்மா ஶ்ரீலங்காக்காரி" என்றாள்.
இதைக்கேட்டதும் அவன் பதிலுக்கு முறுவலித்தபடி ' அப்போ நீங்கள் தமிழச்சி. உங்களுடன் தமிழிலேயே கதைக்கலாம்."
இதற்குப் பதிலாக "தாராளமாக' என்றவள் " தொடர்ந்து "உள்ளே வாருங்கள். ஒரு கப் தேநீர் அருந்தலாம்" என்றாள்.
பதிலுக்கு நன்றி கூறியபடி அவள் அவளது அபார்ட்மென்டினுள் நுழைந்தான். அது ஒரு படுக்கை அறையைக் கொண்ட அப்பார்ட்மென்ட். அவனுடையதை விடச் சிறிது பெரிதாகவிருந்தது. லிவிங்ரூமில் அவள் ஹோம் ஒபிஸ் உருவாக்கியிருந்தாள். வீட்டிலிருந்து வேலை செய்பவள் போலும்.
அவனை லிவிங் ரூமிலிருந்த சோபாவில் அமரக்கூறிவிட்டு, தேநீர் தயாரிக்கச் சென்றாள் பானுமதி.
"உங்களுக்கு எப்படி தேநீர் தேவை. சுகர் , மில்க் எப்படியிருக்க வேணும்" என்று சமையலறையிலிருந்து கேட்டாள்.
" எனக்கு 'டபுள் டபுள்' " என்றான்.
சிறிது நேரத்திலேயே தேநீருடன் வந்தாள். அவனுக்கும், தனக்குமாகத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தாள். தேநீரை அருந்தியபடியே உரையாடலும் தொடர்ந்தது.
"நீங்கள் இங்கு ஸ்டுடெண்டாக வந்தனீங்களா?"
"ஆமாம். மூன்று வருடக் காலேஜ் படிப்புக்காக வந்தேன். படிப்பு முடிந்து நிரந்தர் வசிப்பிட உரிமைக்கு விண்ணப்பித்து, இப்பொழுது வேலை பார்க்கிறேன்."
"ஏந்த ஃபீல்டிலை வேலை செய்கிறீர்கள்?"
"ஐடியிலைதான் வேலை பார்க்கிறேன். 'வெப் ஹொஸ்டிங்' கம்பனியொன்றில் டெக்னிகல் சப்போர்ட், வெப் அட்மின் ஆக வேலை பார்க்கிறேன். ரிமோட் வேலைதான்."
அப்பொழுதுதான் அவன் அவளது மேசைக்கருகிலிருந்த் புக் ஷெல்ஃபைக் கவனித்தான். வானியற்பியல், கலை, இலக்கியம் பற்றிய ஆங்கில , தமிழ் நூல்கள் பல அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்தபோது ஆச்சரிய உணர்வுகள் அவன் முகத்தில் படர்ந்தன.