கம்பராமாயணத்தில் வாழ்த்து அணி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்த்து அணியாகும். தண்டியலங்காரத்தில் வாழ்த்து அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
வாழ்த்து அணி
இன்ன தன்மையுடையவர்களுக்கு இன்ன நன்மைகள் ஆகுக என உரைப்பது வாழ்த்து என்னும் அலங்காரம் ஆகும்.
"இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
. முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப"
(தண்டியலங்காரம் 60)
அயோத்தி மக்கள் இராமனை வாழ்த்துதல்
அயோத்தி நகரத்து மகளிர் அனைவரும் வலிமையுடைய ஆடவரும் கௌசல்யா தேவியும், தசரத சக்கரவர்த்தியும் போலவே இக்குமாரர்கள் வாழ்க என்று அவரவர் மனதுக்குப் பொருந்திய கடவுளை வணங்கி வேண்டுவார்கள். 60,000 வருடங்கள் பேரோடும், புகழோடும் நாட்டு மக்களின் நலத்தையேப் பெரிதாக எண்ணி தசரதன் ஆட்சி புரிந்தார். அவ்வாறு பன்நெடுங் காலம் மக்கள் போற்றும் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.