பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - சந்திரகெளரி சிவபாலன் -
* ஓவியம் - AI
மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல. மொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது.
உலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது துறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா? என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது.
ஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.