சங்ககால அகத்திணை மரபுகள் - முனைவர் கு. செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
முன்னுரைதொல்காப்பியர் அடிப்படையில் அகத்திணைகள் ஏழாகப் பகுக்கப்படுகின்றன. அகத்தைச் சார்ந்த வாழ்வாக புறம் அமைகின்றது. மக்களின் ஒழுகலாறுகளைக் கூறும் அகம ;ஐந்திணைப்பாடல்களில் இயற்பெயர் சுட்டாமல் அமையும் என்று இலக்கணநூலார் வரையறை செய்வர். ஒருவரும் தம் பெயரைச் சுட்டி கூறும் மரபுவழக்கில் இல்லை என்பதை ,
“மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.”1 (தொல். 1000)
என்ற நூற்பா வழிமொழிகின்றது. அகப்பொருட்குரிய திணைகள் ஏழாகத் தொல்காப்பியம் வகுத்துள்ளது.
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.”2 (தொல். 947)
முற்கூறிய ஐந்திணைகளின் சிறப்பியல்பு கைக்கிளை பெருந்திணையில் அமையாது போனாலும் அகத்திணையில் அடக்குவது தவறில்லை என்பர் சான்றோர்கள். காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் ஆற்றல் கொண்டு வாழ்ந்த சங்க மாந்தரின் வாழ்வியலை ஆய்வுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
நெஞ்சம் ஒருமித்தல்
அன்பினால் கூடிய உள்ளப்புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்க வல்லதாகும். இருமணம் பலமுறை சந்தித்தாலும் எவ்வித உறவும் இல்லாது நெருங்கிய நெஞ்சமோடு ஒருமித்து பிரியாது காணப்படும் தன்மையினை குறுந்தொகையில் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் தத்துவங்களை அகஇலக்கியங்கள் வழி அறியலாம்.
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழியறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.” (குறுந்: 40)