எட்னா எரிமலையின் சீற்றம்! - குரு அரவிந்தன் -

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.
சென்ற வருடம் சுமார் 11,000 அடி உயரமான இந்த எட்னா எரிமலையைப் பார்ப்பதற்காக நான் அங்கு போயிருந்தேன். என்னைப் போலவே சுமார் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகள் வருடம் தோறும் அங்கு வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டு மே மாதம் கடைசியாக எட்னா எரிமலை வெடித்தாக நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பாளர் குறிப்பிட்டிருந்தார். அப்போது அருகே உள்ள நகரமான கட்டானியா விமான நிலையத்தில் அதிக சாம்பல் தூசுகள் காணப்பட்டதன் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
நான் அங்கு நின்றபோது எட்னா எரிமலை எதுவுமே நடக்காதது போல, வெள்ளை நிறப்புகையை மட்டும் கக்கிக் கொண்டிருந்தது. உயிர்ப்புடன் இருக்கும் எரிமலை என்பதால் எந்த நேரமும் வெடிக்கலாம் எனச் சொன்னார்கள். 'பயமாக இல்லையா?' என்று மலையடிவார உணவகத்தில் மதிய உணவு பரிமாறிய பெண்ணிடம் கேட்டபோது, 'இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போச்சு' என்று சிரித்துக் கொண்டே சொன்னது ஞாபகம் வந்தது.



























பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









