அக்டோபர் 31 கலோவீன் தினம்! - குரு அரவிந்தன் -

மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் கலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 31ம் திகதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது.
பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும்வேடிக்கையாக இத்தினத்தை இங்கே கொண்டாடுவர். ஊரிலே பிள்ளைகள் இரவிலே வெளியே திரிவதைத் தடுப்பதற்காகப் பெரியவர்கள் பேய்பிடிக்கும், பிசாசு அடிக்கும், கொள்ளிவால் பிசாசு தொடரும், முனி அடித்தால் வாயால் இரத்தம் கக்கும், என்றெல்லாம் சொல்லிப் பயமுறுத்துவதுண்டு. இப்படித்தான் எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியிருந்த புளிய மரத்தில் முனி இருக்கிறது என்றெல்லாம் சொல்லி இரவிலே வெளியே திரியாமல் எங்களுக்குப் பயம் காட்டிப் பெற்றோர் மிரட்டி வைத்திருந்ததை இத்தினங்களில் மீண்டும் நான் நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இரவிலே வெளிக்கிட்டுத் திரிவதற்குப் பயந்து பயந்தே வாழ்ந்ததொரு காலமது.
பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் கலோவீன்தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்சகாலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான கலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச்செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரேஞ்ச் நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும்.



எம்மைவிட்டுப் பிரிந்த நண்பர் சபா அருள் சுப்ரமணியத்தின் பிரிவு (09-10-2021) தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். குறிபாகப் புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழியைத் தக்கவைப்பதற்குக் கடந்த 30 வருடங்களாக முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது. இவரையும் இவரது மனைவி திருமதி. யோகசக்தி அருள் சுப்ரமணியத்தையும் முதன் முதலாக அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வீட்டில்தான் சந்தித்தேன். மாதகல் மண்ணில் பிறந்த இவர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்திருந்தார். மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய அதிபராகவும் இவர் பணியாற்றியிருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் எங்கள் இருவருக்கும் அதிக ஈடுபாடு இருந்ததால், தொடர்ந்தும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாட முடிந்தது. சமீபகாலமாகச் சுகவீனமடைந்திருந்தாலும், சமூகத் தொண்டை அவர் கைவிடாது தொடர்ந்து கொண்டே இருந்தார்.
இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து, இலங்கைத் தமிழர்கள் பலர் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தபோது, அதிகமானவர்கள் கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில்தான் அதிக தமிழர்கள் வாழ்வதால், இவர்கள் முதலில் தங்கள் இருப்பை உறுதி செய்தபின், பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் தங்களை உட்படுத்திக் கொண்டனர். எந்த நாடாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் நிலை அந்த நாட்டு அரசைச் சார்ந்திருப்பதால், அரசியலில் ஈடுபாடு கொண்ட சிலர் தேர்தல் மூலம் பதவிகளுக்காகப் போட்டி போட முன்வந்தனர். பிறர் நலன் கருதிப் போட்டி போடுவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் ஜனநாயக நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புண்டு. பதவிக்கு வந்தபின் அரசியல் வாதிகள் எப்படி மாறுவார்கள் என்பது சந்தர்ப்ப, சூழ்நிலையைப் பொறுத்தது. கனடாவில் கோவிட் பேரிடர் காரணமாக முக்கிய பிரச்சனைகளாக சுகாதாரவசதி, வாழ்க்கைச் செலவு, வருமானவரி, பொருளாதாரம், வீட்டுவசதி, முதியோர் பிரச்சனை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பின்மை, மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான பிரச்சனைகளை மக்கள் இப்போது எதிர் கொள்கின்றார்கள்.
ஊர்விட்டு ஊர் வந்தகதையை கதாபாத்திரம் சொல்லும்போது, இதே போலத்தான் ஈழத்தமிழர்களும் இராணுவ ஆக்கரமிப்பில் இருந்து தப்பிப் பிழைபதற்காக, சொந்த மண்ணைவிட்டு அல்லற்பட்டு வன்னி மண்ணுக்குப் புலம் பெயர்ந்து சென்ற ஞாபகம் நெஞ்சில் முட்டிக்கனக்கிறது.
எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய இருவரும் 2004 ஆம் ஆண்டு உதயன் கலைவிழாவில் பங்குபற்ற கனடா வந்திருந்த போது அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்களுடன் இரவு விருந்துபசாரத்திலும் அதிபர் பொ. கனகசபாபதியுடன் நானும் மனைவியும கலந்து கொண்டிருந்தோம். அன்று தொட்டு அவர்களுடனான எங்கள் இலக்கிய நட்புத் தொடர்ந்தது.
பழகுவதற்கு மிகவும் இனிமையான நண்பர் ஆனந்தின் பிரிவு கனடா தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில் மிகவும் வீரியத்துடன் ரொறன்ரோவில் இலக்கிய முன்னெடுப்புகளில் முன்னின்றவர். அதன்பின் மொன்றியலுக்குச் சென்று அங்கும் இலக்கிய சேவைகளை முன்னின்று தொடர்ந்து செய்தவர். 1990 களில் கனடாவில் இருந்து வெளிவந்த ரோஜா என்னும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து பலருடைய ஆக்கங்களை வெளியிட்டவர். வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் இலக்கிய ஈடுபாடுகாரணமாக மிகச் சிறப்பாக அந்த இதழ்களை வடிவமைத்திருந்தார். எனது சிறுகதைகளும் சில அந்த இதழ்களில் வெளிவந்து பல வாசகர்களையும் சென்றடைந்தன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் ஆரம்பகாலத்தில் இவர் அங்கத்தவராக இருந்தார்.
எழுத்தாளர் உதயணன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். அவர் தனது கடைசிக் காலத்தைக் கனடாவில் செலவிட்டபோது தன்னால் இயன்ற அளவு கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்றே குறிப்பிட வேண்டும். கனடா எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போதுதான் உதயணன் என்ற புனைபெயரைக் கொண்ட எழுத்தாளர் சிவலிங்கம் அவர்கள் எனக்கு அறிமுகமானார். பின்லாந்தில் இருந்து கனடாவுக்கு ஒருமுறை அவர் வருகை தந்தபோது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற் கூடாகத் தனது நூல் ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அதிக கவனம் செலுத்துவதால், அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது நூலை இங்குள்ள ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். அதன்பின் சமீப காலங்களில் இலக்கிய நிகழ்வுகளிலும், தாய்வீடு பத்திரிகையின் ஒன்றுகூடல்களின் போதும் அடிக்கடி சந்தித்து அவருடன் உரையாடியிருக்கின்றேன்.
எங்கள் காலத்தில் வாசிப்பு முக்கியமானதொன்றாக இருந்தது. ஒருவரோடு உரையாடும் போது அவரிடம் இலக்கியத்தேடல் இருக்கிறதா இல்லையா என்பதை அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்துதான் பெறமுடிந்தது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைய வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவர்களின் கல்வி அறிவை மட்டுமல்ல, அவர்களின் பொது அறிவையும் இனம் காண முடிந்தது. சிறுகதை, நாவல் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்த வரிசையில்தான் பிரபஞ்சனின் ஆக்கங்களையும் வாசிக்கத் தொடங்கினேன். சுருங்கச் சொன்னால், முகம் தெரியாத பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாக இருந்த எனக்கு, அவர் 2011 ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்த போது, அவரை நேரிலே சந்தித்து உரையாடச் சில சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
- எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று சென்ற சனிக்கிழமை (12-11-2016) குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். - குரு அரவிந்தன். -
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் 25-09-2016 தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைவர் உரையில் இருந்து ஒரு பகுதி..-
எழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற இயற் பெயர் கொண்ட இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புவியியல் பட்டதாரியான இவர் புவியியல் சம்பந்தமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களில் அதிக படைப்புக்களைத் தந்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. ஆய்வு நூல்களாக நல்லை நகர், யாழ்ப்பாண அரசர் பரம்பரை, ஈழத்தவர் வரலாறு போன்ற இவரது ஆய்வு நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் தென்னிந்தியப் புத்தகங்களின் வருகையைத் தடைசெய்த காலத்தில் இவரது எழுத்துக்கள் பிரபலமாயிருந்தன. வீரகேசரி பிரசுரங்கள் மூலம் இவரது நாவல்கள் அப்போது பிரசுரமாகியிருந்தன. இவரது எழுத்தில் இருந்துதான் வழுக்கை ஆற்றைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். மாணவனாக நான் இருந்தபோது ஒரு முறை செட்டிகுளத்தில் அரச உத்தியோகத்தராக இருந்த அவரைச் சந்தித்திருந்தேன். இவர் கனடா வந்தபோது எங்கள் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருந்தார். அப்போது பல இலக்கிய முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். இவரது வாடைக்காற்று என்ற நாவல் படமாக்கப்படபோதும், எனது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரில் மதிவாசனால் படமாக்கப்பட்ட போதும் அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் நடித்திருந்தார்.
இழப்புக்கள் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் இவ்வளவு விரைவாக ஏன் என்பதுதான் புரியவில்லை. ‘இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது’ என்று சென்றவாரம்தான் நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் (பூநகரான்) மறைவு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலக்கிய நண்பர் புதுவை இராமனின் திடீர் மறைவு மீண்டும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. சமீபத்தில் டாக்டர் சூரியபாலன், அதிபர் கனகசபாபதி, பேராசிரியர் செல்வா கனகநாயகம், பூநகரான் குகதாசன், புதுவைராமன் இப்படியே ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது இதைத்தான் நினைவூட்டுகின்றது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









