பெரும் புலவர் முகமட் ஹன்ஸீர் அவர்கள் மே மாதம் 5 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு கனடாவில் இறையடி சேர்ந்தார். கனடா தமிழ் இலக்கிய உலகிற்கு இவரது மறைவு பெரும் இழப்பாகும். சிறந்த கல்வியாளரான இவர் மதங்களைக் கடந்து கனடாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். கனடாவில் இருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றிய போது, மரபுக் கவிதையை வளர்ப்பதற்காக அந்தப் பத்திரிகையில் அதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கியிருந்தார். புலம்பெயர்ந்து கனடா வந்த இவர், கவிதை எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, பேச்சாளராக இருந்த இவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும், கவிஞர் கழகத்தின் செயலாளராகவும் கடமையாறியவர். 'யமலோக நீதிமன்றம்,' 'திருவள்ளுவர் வரலாற்று ஆய்வும் திருவள்ளுவர் திருக் காவியமும்,' 'திரை இசை மெட்டில் புதிய பாடல்கள்' போன்ற பத்திற்கும் மேற்பட்ட பல நூல்களைக் கனடாவில் வெளியிட்டவர். கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அவருடைய இலக்கிய ஆளுமைக்காக அவரை நாங்கள் பல தடவைகள் கௌரவித்திருந்தோம்.
நீண்ட காலமாகவே எல்லாரோடும் நட்பாகப் பழகி வந்தார். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் வெளியிட்ட போது, வெளியீட்டுரை நிகழ்த்திய இவரிடம் இருந்து முதற் பிரதியை நான் பெற்றுக் கொண்டேன். 2017 ஆம் ஆண்டு அகணி சுரேசின் ‘இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்’ என்ற நுல் வெளியீட்டின் போது மிகவும் சிறப்பாக நயவுரை வழங்கி இருந்தார். எனது நூல்கள் வெளியிடப்பட்ட போதும் அதில் கலந்து சிறப்பித்தது மட்டுமல்ல, முரசொலியிலும் அதைப்பற்றி எழுதியிருந்தார்.
அன்னாருக்கான இரங்கல் கூட்டம் 14.05.2022ம் திகதி காலை 11.00 மணியளவில் மெய்நிகர் வழியாக நடைபெற்றது. கனடாத் தமிழ் கவிஞர் கழகத்தினர் இதை ஏற்பாடு செய்திருந்தனர். கவிஞர் கழகத் தலைவர் கவிஞர் கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் நிகழ்ச்சியைக் கொண்டு நடத்தினார். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பிலும் அதன் தலைவர், செயலாளர் மற்றும் பல அங்கத்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கலுரை ஆற்றினர்.
ஹன்ஸீரின் பிரிவால் தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவுகளுடன் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களாகிய நாங்களும் கலந்து கொண்டு அவர்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.