- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
உலகறிந்த மார்ச்சிய தமிழ் அறிஞர் பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. 1933 ஏப்ரல் 05 ஆம் திகதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த கைலாசபதி, 1982 டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு பொது வைத்தியசாலையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். மரணிக்கும் போது அவருக்கு 49 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.
உலகில் சாதனை படைத்த பல மனிதர்களைப் போலவே கைலாசபதி அவர்களையும் மரணம் இளம் வயதிலேயே காவு கொண்டுவிட்டது. தனது குறுகிய ஆயுள் காலத்தில் அவர் தமிழ் இலக்கியத்துக்கும், மார்க்சிய விமர்சனத்துறைக்கும் அளித்த அளப்பரிய, காலத்தால் அழியாத பங்களிப்பை நோக்குகையில், அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் அறிவுலகம் இன்னும் எத்தனை அரும் பெரும் பொக்கிசங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
கைலாசபதி அவர்களைப் பற்றி நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை முதன்முதலாகப் பார்த்தது 1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்தான். தோழர் வி.ஏ.கந்தசாமியைச் சந்திப்பதற்காக அவர் வந்திருந்தார். ஆனால் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கிருக்காததால் உடனும் திரும்பிச் சென்றுவிட்டார்.
முதலில் வந்தவர் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் அப்பொழுது இருந்த ஒரு தோழர் மூலம்தான் வந்தவர் பிரசித்தி பெற்ற கைலாசபதி அவர்கள் என அறிந்து கொண்டேன். அன்றே அவரது தோற்றம் எனது மனதில் பதிந்து கொண்டது. நெடிதுயர்ந்த தோற்றம். கண்ணாடியின் பின்னே கூர்மையான கண்கள். கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார். கட்டம் போட்ட அரைக்கை சேர்ட் அணிந்திருந்ததாக நினைவு. அவருடன் சில வார்த்தைகளாவது கதைக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தோன்றியது.
•
அதன் பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன். ஆரம்பத்தில் அந்தக் கட்டுரைகளின் கனதியான சாராம்சத்தை கிரகிக்க முடியாமல் போய்விட்டாலும், பின்னர் படிப்படியாக அவற்றைக் கிரகித்துக் கொண்டேன். அவர் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. அதேபோல, அவர் எழுதி வெளியிட்ட நூல்களும் பலப்பல.
அந்தக் காலத்தில் தோழரும் எழுத்தாளருமான சுபைர் இளங்கீரன் எழுதிய “நீதியே நீ கேள்” என்ற நாவல் என்னைப் போன்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாவல் ‘தினகரன்’ பத்திரிகையில் தொடராக வந்தது என்றும், அப்பொழுது கைலாசபதி அவர்கள்தான் தினகரன் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அது மாத்திரமல்லாமல், கைலாசபதி ஆசிரியராக இருந்த காலம் தினகரன் பத்திரிகையின் பொற்காலம் எனவும், அவர்தான் பல எழுத்தாளர்களை தினகரன் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்றும் பிற்காலத்தில் அறிந்தேன். பின்னர் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக வேலை செய்த காலத்தில், தோழர் நீர்வை பொன்னையன் மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் அச்சாணியாகவும், பிரதம வழிகாட்டியாகவும் கைலாசபதிதான் செயற்பட்டுக் கொண்டிருந்தார். எனவே கொழும்பு செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் நீர்வை பொன்னையனுடன் சேர்ந்து கைலாசபதியை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.