- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆள்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது. அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம்.
இவரது கதைகள் இளங்கதிர், கலைச்செல்வி, சுதந்திரன், ஈழநாடு, தேனருவி, வீரகேசரி, மரகதம், சங்கம், திரைக்கலை, திருக்கோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு மலர், தினகரன், செந்தாமரை, உன்னைப்பற்றி போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவரது சிறுகதைத் தொகுப்பொன்று 1962 இல் வெளியாகியிருக்கின்றபோதும் தற்போது அது கிடைப்பதில்லை என அறியமுடிகின்றது. ஆயினும் இவரது சிறுகதைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் ஊடாக இவரது சிறுகதைத் தொகுதியை மீள்பதிப்பிக்க முயற்சிகள் எடுத்திருக்கின்றார். அந்த முயற்சியின் பலனாக, முன்னர் தொகுப்பில் இடம்பெறாத சில கதைகளும் சேர்க்கப்பட்டு 1994 இல் “கடவுளும் மனிதரும்” என்கிற தொகுப்பு இருபது கதைகளுடன் வெளியானது. இந்நூலிற்கான முன்னுரையில் இந்த நூலை வெளியிடுவதற்கான காரணங்கள் பற்றிச் செல்வி திருச்சந்திரன் கூறுகின்ற காரணம் முக்கியமானது. ஒரு பெண் எழுத்தாளரது கதைகள், அவரது பெண் நிலைவாதக் கருத்துகளைத் தாம் ஆதரிக்கின்றோம் என்பதற்கும் அப்பால் தாம் வெளியிடக் காரணம், சிட்டி சுந்தரராஜனும் சிவபாதசுந்தரமும் எழுதிய ”தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்”, கா. சிவத்தம்பி எழுதிய தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் போன்ற முக்கிய நூல்களில் கூட பவானியின் சிறுகதைகள் பற்றிய எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை என்பதையும் பவானிக்குரிய சரியான இடம் வழங்கப்படவேண்டும் என்கிற தனது அவாவினையும் வெளிப்படுத்தி அதுவே இந்நூலைத் தாம் வெளியிடக் காரணமாக அமைந்தது என்று செல்வி திருச்சந்திரன் கூறுகின்றார். கலை, இலக்கியங்களின் வரலாறுகளைப் படிக்கின்றபோது இது போன்ற நிறைய விடுபடல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் “கடவுளும் மனிதரும்” நூலாக மீளவும் வெளிவந்தது மிக முக்கியமான ஒரு நிகழ்வென்றே கூறவேண்டும். இந்தத் தொகுப்பில் லச்சுமி, பொரிக்காத முட்டை, அழியாப்புகழ், அன்பின் விலை, வாழ்வது எதற்காக, பிரார்த்தனை, காப்பு, விடிவை நோக்கி, மன்னிப்பாரா, சந்திப்பு, மனிதன், ஜீவநதி, புதிர், நிறைவு, உன்னை உணர, சரியா தப்பா, கனவு, மீண்டும் வந்தது வசந்தம், கானல், ஒரு நினைவு என்கிற கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில கதைகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
தொகுப்பில் இரண்டாவது கதையாக அமைகின்ற பொரிக்காத முட்டை என்கிற கதை பவானியின் கதைகளில் இருக்கின்ற கூர்மையான அவதானங்களுக்குச் சான்றாக அமைகின்ற கதைகளில் ஒன்று. முதல்முறையாகக் கருவுற்றிருக்கின்ற உஷாவும் அவள் கணவன் சந்திரனுமே இக்கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள். தனது சிறுவயதில் இருந்து உஷா சேகரித்து வைத்திருக்கின்ற சிறு சிறு பொருட்களை அவளும் சந்திரனும் பார்த்து அவளது சிறு பிராய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுகின்றார்கள். அப்போது அவள் சிறுவயதில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கின்ற கரிக்குருவியின் முட்டையொன்று விழுந்து உடைந்துவிடுகின்றது. சிறுவயதில் குருவிக் கூட்டில் இருந்து தான் எடுத்து ஒளித்துவைத்திருந்த அந்த முட்டை உடைந்தது அவள் மனதில் அவளது கரு பற்றிய சஞ்சலத்தினை உருவாக்கிவிடுகின்றது. அந்த சஞ்சலத்தினால் அவள் தொடர்ந்து அலைக்கழிந்து, மனங்கலங்குகின்றாள். தனது அக்கா குளவிக்கூடொன்றினைக் கலைத்ததாற்தான் அவளுக்கு குறைப்பிரசவமானது என்று கலங்குகின்றாள். சந்திரன் கூறும் எந்த ஆறுதல்களாலும் அவளை ஆற்றுப்படுத்த முடியவில்லை. குழந்தை பிறக்கும் வரை இந்தப் பதற்றமும் சஞ்சலமும் அவளை ஆட்டுவிக்கின்றது. இந்தக் கதை முழுவதும் உடைந்தபோன கரிக்குருவியின் முட்டை பற்றிய நினைவுகளே அவளது இந்த நிலைமைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அண்மைய உளவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்துடன் தொடர்பான உளவியல் சிக்கல் என்றும் புரிந்துகொள்ளமுடிகின்றது. கதை எழுதப்பட்ட அறுபதுகளில் ஈழத்துச் சூழலில் அன்றைய காலப்பகுதியில் இதுபற்றிய அறிவு பொதுத்தரப்பில் இல்லாது இருந்திருக்கலாம் என்றாலும் அந்த உளவியல் சிக்கல்பற்றிய பவானியின் அவதானம் கூர்மையானது. இதனை பவானியின் எழுத்துக்களில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவதானிக்கலாம்.
1060கனவு என்கிற கதை உளவியல் பின்னணியுடன் அமைந்த இன்னொரு கதை. முத்தம்மா என்று கேலியாக அழைக்கப்படும் முத்து திருமண வயதடைந்து திருமணமாகாமல் இருப்பதற்காக ஊராரால் கேலி செய்யப்படுபவன். அவனிடம் பட்டம் கட்டக் கற்றுக்கொண்ட சிறுவர்கள் கூட வளர்ந்து திருமணமாகிக் குடும்பமான பின்னரும் முத்து தனியனாகவே இருக்கின்றான். “ஆண்மை” என்பது பற்றிய கற்பிதம் அவன் ஆண்மையில்லாதவன் என்று அவனைக் கேலிசெய்கின்றது. அதே முத்து மீனா என்கிற மாணவி அவளது காதலனுடன் ஊருக்கு மறைவாகப் பேசுவதைக் காணுகின்றான். பின்பொருநாள் அவள் தனது காதலனுக்காகக் காத்திருக்கின்றபோது பாலியல்தாக்குதல் செய்கின்றான். அதன்பிறகு அவனைத் தேடி ஊரார் செல்கின்றபோது அவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ளுகின்றான். இந்தக் கதை “ஆண்மை” பற்றிய கற்பிதம், பாலுணர்வு, பெண்கள் பற்றிய பொதுப்புத்தி ஆகியவற்றை நுட்பமாகக் காட்சிப்படுத்துகின்றது. தவிர, சிறுவயதில் தந்தையால் தாயும், முத்துவும் தனித்துவிடப்படுகின்றமையும், இளவயதிலேயே தாயும் இறந்துவிட ஒரு விதத்தில் ஊராரை அண்டியே வாழவேண்டிய நிலை முத்துவுக்கு இருந்தமையும் கூட அவனை இவ்விதமாகக் கட்டமைக்கக் காரணிகளாக இருந்திருக்கக்கூடும்.
வறுமை காரணமாகவும் சீதனம் போன்ற சமூக வழக்கங்களின் தடைகளாலும் இளவயதுப்பெண்கள் இரண்டாம், மூன்றாம் தாரங்களாக வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்ற வழக்கம் முன்னாட்களில் அதிகம் இருந்ததை அறிந்திருக்கின்றோம். பிரார்த்தனை என்கிற கதையில் ஐந்து பெண்களையும் மூன்று ஆண்களையும் கொண்ட வறிய குடும்பமொன்றில் மூத்த பிள்ளையாகப் பிறந்த சுமதி தனது பதினெட்டாவது வயதில் ஐம்பதுவயது ஆன ஒருவருக்கு மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றாள். சுமதியின் உணர்வுகளையும் மனநிலையையும் இத்திருமணம் பற்றிய எதிர்ப்புகளையும் இந்தக் கதையில் மிகவும் நுட்பமாக பவானி வெளிப்படுத்துகின்றார்.
”எத்தனை கொடிய இரவுகள்! சபாபதி அவளைத் தீண்டிவிட்டால் சுமதியின் சதை கூசும்! முதலில் தன் விதியை ஏற்றுக்கொள்ள முயன்றாள். ஆனால் சபாபதி பசிப்பார்வையோடு அவளை அணுகும்போது கரங்களால் அவளை அணைக்கும்போது சுமதிக்குக் கூச்சலிடவேண்டும் போலிருக்கும்… இதுதான் பத்துவருஷங்களாகச் சுமதி நடத்திவரும் வாழ்க்கை. இன்று சபாபதி கண்ணை மூடிவிட்டால் சுமதிக்கு அது விமோசனமாகாதா? ஏன் எத்தனை நாள் ஆத்திரத்தில் வெறுப்பில் எண்ணியிருக்கிறாள் இந்தக் கிழம் செத்துத் தொலைக்காதா என்று! இன்று அப்படியே நடந்துவிடும்போல தோன்றுகையில் மட்டும் ஏன் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டுகிறாள்?”
கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்ட வயதில் முதிய, மனதுக்குப்பிடிக்காத கணவன் சாகக் கிடக்கின்றபோது ஏன் சுமதி திருமணமாகிப் பத்து வருடங்களாகக் கும்பிடாத கடவுள்களையெல்லாம் மீண்டும் கும்பிடுகின்றாள் என்பதைக் கதை முடிவில் சொல்கின்றார், “உள்ளத்தில் அடியில் இருந்து உணர்ச்சி ஒன்றிய வேகத்தோடு புதிய நம்பிக்கையோடு வேண்டுகிறாள், கடவுளே அவர் சாகட்டும்… கடவுளே அவர் சாகட்டும்…”
அன்றைய காலப்பகுதியில் நிலவிய பெண்களுக்கெதிரான சமூக வழக்கங்களுக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிரானம் மிக வலுவான எதிர்க்குரல்களில் ஒன்றாக இதனைப்பார்க்க முடிகின்றது. இதுதான் ஐயா பொன்னகரம் என்பதுபோல, அக்கினிப் பிரவேசத்தில் வருகின்ற அம்மாவைப் போல, கடவுளே அவர் சாகட்டும் என்பதும் சமூக இலக்கியங்களைப் பொருத்தவரை ஒரு முக்கிய தருணம்.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மன்னிப்பாரா என்கிற கதை அது வெளிவந்த காலத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்ததாகத் தெரிகின்றது. இக்கதையில் வருகின்ற சுசீலாவினதும் மூர்த்தியினதும் காதலுக்குக் குறுக்காக அவர்களது சமூகப் பின்னணி வருகின்றது. காதலிக்கின்றபோது நம்பிக்கையை அள்ளிக்கொடுத்த மூர்த்தி அவனது பெற்றோரது கட்டாயத்திற்குச் செவிசாய்ப்பதைத் தன் கடமையென்று கருதிக்கொள்கின்றான். சுசீலாவுக்கு வேறொருவனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்துக்கு முதல்நாள் இரவு சுசீலா மூர்த்தியைத் தேடி வந்து “காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில் இந்த என் முடிவு கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானதல்ல என்று கூறி” அவனை உடலுறவுக்கு அழைக்கின்றாள். இந்தக் கதையைத் தாம் கதாநாயகியின் முடிவைப் பலர் வரவேற்கமாட்டார்கள் என்று தெரிந்தும் கதை நயம்படச் சொல்லப்பட்ட காரணத்தால் கலைச்செல்வியில் வெளியிட்டதாக கலைச்செல்வியின் ஆசிரியர் சிற்பியின் கூற்றினை ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் மேற்கோள் காட்டியுள்ளார். அத்துடன் இக்கதையின் முடிவை எதிர்த்துக் கதையை வேறுவிதமாக கவிஞர் எஸ். எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும் அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாக்கி செந்தாரகை என்பவர் எழுதிய கதையும் கூட மன்னிப்பாரா என்ற பெயரில் அடுத்த கலைச்செல்வி இதழ்களில் வெளியாகியிருந்தன.
பவானியின் கதைகளை நோக்குகின்றபோது அவர், தான் அவதானித்தவற்றை, சமூக வழக்கங்கள் மனித நேயத்திற்கு நெருக்கடி ஏற்படுத்திய சூழல்கள் பற்றிய தனது எதிர்வினையை, தனது எழுதுக்களினூடாக வெளிப்படுத்தினார். மனிதத்துவம் மீதான அவரது காதலும் சமூகம் தனிமனிதருக்குத் தருகின்ற நெருக்கடி பற்றிய கோபமுமே அவரது எழுத்துகளின் சாரம். அந்தவகையில் இலக்கிய வரலாற்றின் அடிப்படையில் மாத்திரமல்லாது தனது எழுத்துகளூடாகவும் அவர் முக்கியத்துவம் வாய்ந்தவரே.
இந்தத் தொகுதியில் இருக்கின்ற அதிர்ச்சி மதிப்பீட்டை ஏற்படுத்தக் கூடிய அன்பின் விலை என்கிற கதை, நிலவியல் அடிப்படையில் செயற்கைத்தனம் வாய்ந்த நிறைவு என்கிற கதை, உன்னை உணர என்கிற அதீத உணர்ச்சிவயமான கதை என்பன எனது வாசிப்பில் மிகச் சாதாரணமான கதைகளே. ஆயினும் ஒரு தொகுதியாக வாசிக்கவும், ஈழத்து இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கும் இந்தக் கதைகள் மாத்திரமல்ல தொகுக்கப்படாத பவானியின் ஏனைய கதைகள் தொகுக்கப்படுவதும் மிக முக்கியமானதே.
பவானி ஆழ்வாப்பிள்ளையின் கடவுளும் மனிதரும் நூலகம் நிறுவனத்தால் (http://www.noolaham.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதனை https://goo.gl/DfEx1Y என்கிற இணைப்பில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இக்கட்டுரை மார்ச் 2017 தாய்வீடு பத்திரிகையில் வெளியானது: https://arunmozhivarman.com/2017/03/20/bavani/