இயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது என்று இயற்கையை வர்ணித்த எமக்கு இன்று இயற்கை இரக்கமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலியாக்கிக் கொண்டிருப்பது மனவேதனையை அழிக்கின்றது. கொரானாவின் இந்தக் கொடுமையான தாக்கத்தினால் உலகமே துயரத்தால் உறைந்து போயுள்ளது.
லண்டன் வைத்தியசாலைகளில் தமது மிகுந்த அர்ப்பணிப்போடு உன்னத பணிபுரிகின்ற வைத்தியர்களையும், தாதிமார்களையும், பணியாளர்களையும், வயது வந்தவர்களையும், பெண்களைவிட கூடுதலாக ஆண்களையும், குறிப்பாக ஆசிய மக்களையும், ஆபிரிக்கர்களையும் இந்தக் கொரோனாவைரஸ் உயிர்ப்பலியாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய துயரத்தில் மூழ்கித்; தமது ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாது துவண்டுபோய் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த வேளை ஆத்மவெளியில் தன் கலைப்பயணத்தை முன்னெடுத்து வந்து ஈழத்துக் கலைஞனின் வாழ்வையும் இது பறித்துவிட்டதாக அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனேன்.
ஈழத்தில் யாழ் தெல்லிப்பளையில் கலைக்குடும்பத்;தில் பிறந்தவர் மறைந்த பிரபல மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன். இவரின் தந்தை கந்தையா ஓவியராகவும் ஆசிரியராகவும், தாயார் இராசமலர் மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள். ஏப்ரல் 16ஆம் திகதி அவரது சுவாசக் காற்றைக் கொரோனா நிறுத்திய கொடூர செய்தி எம் நெஞ்சை அதிரவைத்தது. குறிப்பாக அவர் ஸ்தாபித்துவந்த ‘ஆனந்தாலயா மிருதங்கப் பள்ளியில்’ அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்ற மாணவர்களைக் குமுற வைத்தது. அன்பும் அரவணைப்பும் ஆத்மார்த்தமான கருணையின் வடிவில் பயணிக்கும் அருமையான ஆசான் அவர்.
1985 ஆம் ஆண்டில் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் எனது மகன் அகஸ்ரி மிருதங்கக் கலையை ஹரோ தமிழ் பாடசாலையில் அவரிடம் பயி;ல ஆரம்பி;க்கும் போதுதான் எனக்கு அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டில் அகஸ்ரி அவரிடம்; பயிலத்தொடங்கிய மிருதங்கக்கலை 2012ஆம் ஆண்டு அவனின் அரங்கேற்றம்வரை தொடர்ந்தது மட்டுமன்றி இன்றும் அக்கலையைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறான். காரணம் ஆனந்தநடேசன் மாஸ்டர்; குருவுக்கும் மேலாக ஒரு ஆகர்ஷ்யபுருஷனாகத் திகழ்ந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.
ஏழுவயதுச்சிறுவனாகிய அவனின் ஆற்றலையும் திறமையையும் அறிந்து அவனுக்குப் புரிய வைத்தமையை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. மிருதங்கக்கலையின் நுட்பங்களைப் பயிற்றுவதோடு மட்டுமல்லாது சமுதாயத்தின உயர் பண்புகளையுடைய ஒரு இசைக்கலைஞனாக வாழவேண்டும் என்ற போதனையையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. தானும் மிருதங்கம் வாசித்து சமமாக மாணவர்களையும் பயணிக்க வைத்த பண்புக்கு தலைசாய்க்கிறேன். அவருடைய இத்தகைய போக்கை அவரிடம் பயின்ற அத்தனை மாணவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது என் நம்பிக்கை. இதைத்தான் ஒரு நல்லாசிரியனுக்குரிய மிகப் பெரிய பண்பாகக் கருதுகின்றேன்.
கடந்த சில ஆண்டுகளில் எனது மகன் அகஸ்ரியின்; இத்திறமைகளை வளர்த்தெடுக்கவேண்டுமென பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நிறைந்த சந்தர்ப்பங்களை வழங்கியமையை நன்றியோடு நினைவுபடுத்துகின்றேன். அவனது ஆளுமை, தன்னம்பிக்கை, தனித்துவம் என்பவற்றில் தளர்ந்துவிடாதபடி இருக்க வழிகாட்டிய அன்பான உறவு அவர். அவனுக்கு மிருதங்கக் கலையை வளர்த்ததோடு ஏனைய இளைய மாணவர்களுக்கும் இக்கலையில் ஈடுபட்டு பயிற்சியளிக்க அவனுக்கு ஆனந்தநடேசன் மாஸ்டர் சந்தர்ப்;பம் வழங்கியிருந்தமையை நினைத்துப் பார்க்கிறேன். இதே போன்று அவரிடம் பயின்ற மாணவர்களின் தனித்துவமான திறமைகளை இனங்கண்டு அவர்களின் ஆற்றல்களை வளர்த்தெடுத்தவர். அடுத்த தலைமுறைகளுக்கு மிருதங்கக்கலையின் மங்காத முருகியல் உணர்வை ஊட்டி வளர்த்து மிளிர்ந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனான ஆனந்தநடேசன் மாஸ்டர் அவர்கள் லய வாத்தியமான மிருதங்கக் கலையை கலாபூசணம் க.ப. சின்னராசாவைக் குருவாகக் கொண்டு பயின்றவராவார். இவர் தவில் வாத்தியத்தையும் மிக அருமையாக வாசிப்பார். கஞ்சிரா, கடம், முகர்சிங், தபேலா போன்றவற்றிலும் பயிற்சி பெற்றவராவார் என்பதும் விதந்துரைக்கத் தக்கது. நல்லாசிரியன் என்பவன் புதிய புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்பார்கள். அந்தவகையில் லண்டன் பவனில் மிருதங்க ஆசிரியராக பணிபுரியும் வித்துவான் கே. பாலச்சந்திரனிடமும் (பாலா மாஸ்டர்) மேலதிக பயிற்சிகளைத் தொடர்ந்து பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆத்மாத்தமாகப் பயணித்த கலைஞனின் மனைவி பாமினி அற்புதமான இனிமை கொஞ்சும் குரலால் அன்போடு பேசுவார். அவரது கலைச்செல்வங்களான சௌமியா, கஜ்னி புத்திரிகள் வீணை வயலின் போன்ற இசைக்கருவிகளை அற்புதமாக இசைத்து தந்தை ஆனந்த நடேசனின் தாள லயத்திற்கு ஈடுகொடுக்கும் செல்வங்கள். அவரின் அன்புப்புத்திரிகள் இருவரும் அவரின் வாரிசாகத் திகழும் கலைஞர்கள். அவரின் மூத்த புதல்வி சௌமியாவின்; கர்நாடக இசை பார்வையாளர்களை சுண்டிப்போடும் சக்தி படைத்தது. அவரது அன்பு மகள் சௌமியாவின் திருமணத்தை கடந்த ஆண்டு லண்டன் வாழ் கலை ரசிகர்களோடும், நண்பர்களோடும், கலைஞர்களோடும் மிகச் சிறப்பாக ஆனந்த நடேசன்மாஸ்டர் நிகழ்த்தியிருந்ததை நாம் கண்டு களித்திருந்தோம். சௌமியாவின் துணைவராக வந்திருக்கும் கஜேந்திரன் கந்தசாமி ஆதரவான குரல் கொண்டவர். கடந்த வாரம் மட்டும்தான் தொலைபேசியில் அவருடன் பேசினேன். அன்பான பேச்சு. மகேந்திரன் குடும்பம் போன்ற இனிய நண்பர்களை அவர் வாய்க்கப்பெற்றதை மனதார வாழ்த்துகின்றேன்.
58 வயது மட்டுமே கொண்ட பிரபல மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன் அவர்களின் ஆவியை கொரோனா பற்றி விட்டது ஆனால் அவரது பிள்ளைச் செல்வங்களும் அவரின் மாணவச் செல்வங்களும் அவர் நினைவோடு அவர் விட்டுச் சென்ற கலைகளைப் பற்றிப்பிடிப்பார்கள்; என நம்புகிறேன். இந்தத் தேசத்தில் அவர் ஊட்டிய கலைகள் பெருகும்! அக்கலைகளால் அவர் என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
23.4.2020