மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கேற்பட்ட மிரட்டல்களும், அவரது எதிர்வினையும் பற்றி...
கண்டாவளை மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது முகநூற் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அவருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள் பற்றிய பதிவு. அவரது துணிச்சலை, சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் அதே சமயம் அதன் இறுதி வரிகள் கவலையையும் தரும் பதிவு.
"நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள். அன்றும் இதே சிரித்த முகத்துடன் வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன் அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்."
என்னும் வரிகள் மருத்துவர் ராஜினி திரணகமாவை நினைவூட்டுகின்றன. ராஜினி திரணகமாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் பெண்ணொருவருக்கு ஏற்படக் கூடாது. அதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது.
இவருக்கு நான் கூறுவது இதனைத்தான்:
"உங்களைப்போன்ற துணிச்சலும், அறிவும், சமுதாயப்பிரக்ஞையும் மிக்க இளையவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அதே நேரத்தில் உங்கள் மருத்துவத் தொழிலையும் நீங்கள் தொடரலாம். அரசியலில் வருவதன் மூலம் உங்களுக்கும் ஒரு மேலதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் உங்களைப்போன்ற துணிச்சலும், ஆற்றலும், மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள இளையவர்கள் குறைவு. உங்களுக்குள் மருத்துவருடன் கூட சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் இருக்கிறார்கள். அதனால்தான் ஊழல்களுக்கெதிராக உங்களால் இவ்வளவு தூரம் துணிச்சலுடன் செயற்பட முடிகின்றது. நீங்கள் புதியதொரு சமூக நலன் பேணும் அமைப்பொன்றைக்கூட உருவாக்கலாம். அதன் கீழ் ஆயிரக்கணக்கில் பலர் அணி திரளும் சாத்தியமுண்டு. அவ்விதம் செய்தால் யாரும் தனிப்பட்டரீதியில் உங்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவும் உங்களுக்கு பாதுகாப்பரணாக விளங்கும்."