“தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது” என்பது சம்பந்தனின் நிலைப்பாடானது. முள்ளிவாய்க்காலின் பதினைந்தாவது வருட “நினைவேந்தலின் போது”, அதே தினத்தில் இது, வெளியிடப்பட்டுள்ளமை, பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாயுள்ளது. இது ஒருபுறம் நடந்தேற, இம்முறை, பதினைந்தாவது வருட நினைவேந்தலின் போது, சர்வதேசம், தான் இருப்பதைக் வழமைப்போல், காட்டிக்கொள்ள முண்டி அடித்திருந்தாலும், இத்தடவை, அது சற்று தீவிரமாகவே தனது முண்டியடிப்பை வெளிபடுத்தியதை, காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்க தூதுவரின் வடக்கு விஜயமும், அமெரிக்க காங்கிரஸில் முதல் முறையாக (அம்மாடி – கடைசியாக) தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பிலான மனு ஒன்றை, சமர்ப்பணம் செய்தது, என்பதுபோக, சர்வதேச மன்னிப்பு சபையின் செயலரும் இம்முறை நேரடியாகப் பங்கேற்றமை என நிகழ்ச்சி நிரலை அமர்க்களப்பத்தி விட்டனர்.
முள்ளிவாய்க்கால் கொலைகளைத்தடுக்க சுட்டுவிரலைக்கூட அசைக்காத சர்வதேசம், இன்று இப்படி பங்குபற்றுவது அலுப்பைத்தான் தருகின்றது. காரணம், சில நெஞ்சங்களிலிருந்தும், வடுக்கள் இன்னமும் அகலாதிருப்பது இருக்கவே செய்வதினாலேயே. ஒரு பதினைந்து வருடங்கள், கழிந்து போன நிலையில், இப்போதாவது ஒரு மனு, அமெரிக்கா காங்கிரஸில் மிக கடைசியாக? சமர்ப்பிக்கப்பட்டுள்ளது - அதுவும் ஒரு தேர்தலை ஒட்டி, என்ற விடயம் மலைப்பை தருவதாக உள்ளது. இருந்தும் கார்வண்ணன் தனது வீரகேசரி பத்தியில் குறித்துள்ளார் குறிப்பிட வேண்டும் : அமெரிக்க காங்கிரசில் இருந்து, இலங்கை தொடர்பான தீர்மானம் வெளியுறவு குழுவுக்கு அனுப்பப்படும். அங்கு அது கிடப்பில் போடப்படும். அடுத்த ஆண்டு வந்ததும் அது கைவிடப்படும். இதுதான கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது (வீரகேசரி : 26.05.2024)