யப்பானில் சில நாட்கள் (12) :ஹிரோஷிமாவில் நதிகள் சலனமின்றி ஓடுகின்றன! - நடேசன் -
ஹிரோஷிமா நகரத்தின் நதிகளின் மேலே உள்ள பாலத்தில் நடந்தபடி, தற்போது நினைவுச் சின்னமாக இருக்கும் எலும்புக்கூடான (Atomic Bomb dome) என்ற ஒரு கட்டிடத்தைப் பார்த்தவுடன், எனது வயிற்றில் அமிலம் ஊற்றி வயிற்றில் நெருப்பு பற்றுவது போன்று எரிவைக் கொடுத்தது. லைவ் சஞ்சிகைக்காக (life Magazine) க்காக அனுப்பப்பட்ட ஜோன் ஹிசியின் (John Hersey) ஹிரோஷிமா என்ற நாவலின் சுருக்கம் ஏற்கனவே வாசித்திருந்தேன். அந்த நாவலில் 1946 ஆண்டு அமெரிக்காவிலிருந்து செய்திகளை சேகரிக்க சென்ற ஜோன் ஹிசி ( John Hersey), அணுக்குண்டு வெடித்தபோது அங்கு வாழ்ந்த ஆறு மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து செவ்வியினைப் பெற்றார்.
அதன் பிரகாரம், அணுக்குண்டு வெடித்தபின் அவர்களது அடுத்த மூன்று நாட்களில் அவர்கள் அடைந்த அனுபவங்களை வைத்து ஹிரோஷிமா நாவலை எழுதினார். அவர்கள் ஆறு பேரில் , இரு வைத்தியர்கள் , எழுதுவினைஞர், யப்பானிய கிறிஸ்தவ பாதிரியார், ஜெர்மன் கிறிஸ்துவ பாதிரியார் மற்றையவர் யப்பானியத் தாயாகும். இந்த நாவல் அவர்களது மூன்று நாட்களை நமக்குத் தரும்போது இதயத்தை நிறுத்தி உறையப் பண்ணுகிறது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் காலை 8.15 மணியளவில் அந்த அழிவுக்கு நேரம் குறிக்கப்பட்டது. அமரிக்க அதிபர் ஹரி ரூமன் கட்டளைப்படி சிறிய பையன் (Little Boy )என்ற பெயரில் அணுக்குண்டு போடப்பட்டது. தற்பொழுது உள்ள நினைவு கட்டிடத்தின் மேலாக வெடித்தது. அப்பொழுது அந்தக் கட்டிடத்தின் (Industrial Promotion Hall) இரும்பைத் தவிர மற்றைய எந்த கட்டிடப் பொருட்களும் அங்கு மிஞ்சவில்லை . போட்ட குண்டு ஆகாய வெளியில் நிலத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது- காரணம் நிலத்தில் வெடித்ததால் அதனது தாக்கம் சுற்றியுள்ள கட்டிடங்களால் குறைக்கப்படும்.